பெரியாழ்வார் சரிதம்

பெரியாழ்வார்

பெரியாழ்வார் தம் திருமொழியில் முதல் பாசுரமாகப் பாடியிருப்பதே, பெருமானுக்கான பல்லாண்டுதான். அதனால்தான், இந்த நாலாயிரமும் எம்பெருமானின் குணநலங்களையும் அவன் தன்மைகளையும் பெருமைகளையும் சொல்வதாயினும், அவனை வாழ்த்துகின்ற இந்தப் பல்லாண்டுப் பாசுரங்களை, நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் முதல் பாசுரமாக வைத்தார் இதனைத் தொகுத்த நாதமுனிகள். காரணம் பல்லாண்டுப் பாசுரங்கள் அவ்வளவு முக்கியமானதும் வேதக் கருத்துக்கு ஒப்பானதும் ஆகும். எப்படி வேதத்துக்கு ஓம் என்பது முதல் ஒலியாக அமைந்து வேதத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறதோ, அதுபோல் பல்லாண்டு, இந்தத் தமிழ் வேதத்துக்கு என்பது மணவாள மாமுனிகளின் கருத்து.

 

கோது இலவாம் ஆழ்வார்கள் கூறுகலைக்கு எல்லாம்

ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும்  — வேதத்துக்கு

ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய்

தான் மங்கலம் ஆதலால். (19)

உண்டோ  திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்?

உண்டோ  பெரியாழ்வார்க்கு ஒப்பு ஒருவர்? — தண் தமிழ் நூல்

செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்

பைதல் நெஞ்சே ! நீ உணர்ந்து பார். (20)

— மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலையில் பல்லாண்டு பாசுரங்களின் சிறப்பை அறியலாம். திருப்பல்லாண்டுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒப்புமை எதுவும் இல்லை என்பது மாமுனிகள் கண்ட முடிவு.

இந்தப் பல்லாண்டில் ஆழ்வார் என்னவெல்லாம் வாழ்த்துகிறார்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்

செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

– என்று, முஷ்டிகன் சாணூரன் ஆகிய மல்லர்களைக் கொன்ற உன் திருத்தோள்களின் பலத்தை நிறுவியவனே உனக்குப் பல்லாண்டு என்று தொடங்குகிறார். தீமையை வென்று உலகைக் காப்பவன் எவனோ அவனே பல்லாண்டு நின்று உலகைக் காத்தருள வேண்டும்; எனவே, ஒன்றின் அழிவின் முடிவில் ஒன்றின் ஆரம்பம் இருக்கிறது; அழிவு – அதர்மத்துக்கு. தொடக்கம் – தர்மத்துக்கு. திவ்வியப் பிரபந்தத்தின் முதல் கருத்தே இப்படி அமைந்து, பிரபந்தம் முழுவதற்குமான ஆழ்பொருளை அறிவிக்கிறது.

மேலும் என்னவெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் – பகவானின் சிவந்த திருவடிகள், பகவானுக்கும் பக்தனுக்குமான பிரிவிலாத தொடர்பு, அவன் வலத் திருமார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி, வலக் கரத்தில் ஒளியுடன் திகழும் சுதர்சனச் சக்கரம், யுத்தத்தில் புகுந்து முழங்கி தீயோர் மனத்தைக் கலங்கடிக்கும் பாஞ்சஜன்யச் சங்கு ஆகியன.

அடுத்த பாசுரங்களில் அடியார்களே, நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து பெருமானுக்குப் பல்லாண்டு கூறுங்கள், அவன் நல்ல மனத்தைச் சிந்தியுங்கள், எம்மோடு கூடி வாய்விட்டுப் பாடுங்கள், ஓம் நமோ நாராயணாய என்று கூறுங்கள் என்று அடியார்களுக்குச் சொல்கிறார்.

சங்கச் சத்வம் சம் வதத்வம் சம்வோ மனாம்ஸி ஜானதாம் – என்று, எல்லோரும் ஒரு சங்கமாக ஒன்று கூடுங்கள்; ஒன்றையே பேசுங்கள்; ஒன்றையே மனத்தால் சிந்தியுங்கள் என்று ரிக் வேதசாகை சொல்வது பெரியாழ்வாரை நினைவுபடுத்துகிறது.

இன்றைய நாட்களில், கோயிலுக்கோ அல்லது பஜனை சம்பிரதாயக் குழுக்களோ வரும் பெரும்பாலானோரும் அங்கு வழங்கப்படும் பிரசாத உணவுக்காக அலைமோதுவதைப் பார்க்கிறோம்.

பக்திதான் முதலில் இருக்கவேண்டும், அதன் பிறகே மற்றதெல்லாம் என்பதற்காக, இப்படி வருபவர்களைப் பார்த்து பெரியாழ்வார் சொல்லும் வார்த்தை இதுதான̷் 0; அது – கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவில் புகுதலொட்டோ ம்… என்பது.

சோற்று வாழ்வுக்காக பிறர்க்கு அடிமைப்பட்டிருப்பீராயின் எங்கள் கூட்டத்திலே சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார் ஆழ்வார்.

 

Leave a Reply