style="text-align: center;">12ஆம் திருமொழி
மற்றிருந்தீர்
பனிரெண்டாவது பதிகம், இனி நம்மால் தாங்க முடியாது என்று, பிருந்தாவனத்தில் கொண்டுபோய் என்னை விட்டுவிடுங்கள், மதுரைக்கு என்னை உய்த்திடுங்கள், யமுனை நதி தீரத்துக்கு என்னை உய்த்திடுங்கள்… இங்கே இருந்தால் என் உயிர் இந்த உடலில் இருக்காது, சீக்கிரம் என்னை கண்ணன் இருக்கும் இடத்துக்குக் கொண்டு போய் விடுங்கள் என்று கதறிப் பாடியிருப்பது.
யார்யார்க்கு எல்லாமோ உதவி செய்த கண்ணன், பெரியாழ்வார் பெண்பிள்ளையான தனக்கு உதவாமலா போய்விடுவான் என்று உறுதி பூண்டிருந்தாள். ஆனாலும் அவன் வரவில்லை. அந்த தாபத்தால், அவள் நடக்கவும் இயலாத நிலையை அடைந்து சோர்ந்தாள். பிறகு, அருகில் இருப்பவர்களைப் பார்த்து, ஓமானம் கெட்டவளாய், உடல் நிறம் மாற, மனம் தளர்ச்சியடைய, வாய் வெளுத்து, உணவு வெறுத்து, உள் மெலிந்து போனேன். இவை நீங்க வேண்டுமானால், என்னை கண்ணனிடத்தே கொண்டுபோய் விடுங்கள் என்று கதறுகிறாள், இந்த பன்னிரண்டாம் திருமொழியான மற்று இருந்தீர்கட்கு அறியலாகா பாசுரங்களில்.
617:
மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவ னென்பதோ ரன்புதன்னை,
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர்வார்த்தை,
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி,
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1
மாதவனின் மீது நான் கொண்டுள்ள காதலை, எப்போதும் எனக்கு எதிராகவே உங்களிடம் கூறுவது, வாய்பேச முடியாதவரும் காது கேளாத ஒருவரும் கூடிப் பேசுவது போல் உள்ளது. உடல் நோவ, தன்னைப் பெற்றெடுத்த தேவகியை விட்டுவிட்டு, யசோதைத் தாயிடத்தில் வளர்ந்த கண்ணன், மல்யுத்தக் களத்தில் முன்நின்று வெற்றி கொண்டான். அந்த நம்பியின் நகரமான மதுரைப் புறத்தே என்னைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்.
618:
நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்,
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்,
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்,
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2
நான் இனிமேல் வெட்கப் படுவதால், பயன் என்ன? நான்கு பக்கத்து அயலார்களும் என் நிலையைத் தெரிந்து கொண்டார்கள். இனியும் நேரம் கடத்தாமல், இதற்கு வேண்டிய மருந்து என்ன என்று கண்டு, என் விரக தாப நிலை, கலவி நிலைக்கு முன்பான என் கன்னி நிலையை நான் பெற்றிருக்கும்படி காக்க விரும்பினால், என்னை ஆயர்பாடிக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள். வாமனனாக வந்து திரிவிக்ரமனாக வளர்ந்த அவனைக் கண்டால் என் நோய் நீங்கிவிடும்.
619:
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள். என்னும்சொல்லு,
வந்தபின் னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற,
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3
ஒதந்தை, தாய், உற்றார் உறவினர்களை விட்டுவிட்டு, தன்னந்தனியே இவள் வீதி வழியே புறப்பட்டாள் என்னும் பழி வந்த பிறகு, அதனைத் தடுக்க முடியாது. நானும் தனி வழியே போகாதிருக்க முடியாது. ஏன் என்றால், மாயன் கண்ணன் வந்து திருமேனி அழகு காட்டி என்னை இழுக்கிறான். வலுச்சண்டைக்கு இழுத்து வம்பும் தீம்பும் செய்யும் பிள்ளையைப் பெற்ற நந்தகோபருடைய இல்லத்துக்கு என்னை நடு இரவிலேயே கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்.
620:
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்,
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4
அழகான தன் கையிலே சக்கரத்தை ஏந்திய கண்ணனை அல்லாமல், மற்றையோர் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று கூறுவதுபோல, கச்சை கட்டி மறைக்கப் பெற்றுக் கண் மூடியுள்ள என் கொங்கைகள் சிறு மானிடர்களைக் கண்டால் வெட்கப்படும். தாய்மார்களே… என் இந்தக் கொங்கைகளை நீங்களே காணுங்கள்… இவை, கோவிந்தனை விட்டு மற்றவர் வீட்டு வாசலுக்குப் போகா! எனவே, என்னுடைய இங்குள்ள வாழ்வைத் தவிர்த்து, யமுனை நதிக்கரைக்கு என்னை இட்டுச் செல்லுங்கள்.
621:
ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்துழ திப்படாதே,
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்,
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து,
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5
தாய்மார்களே! என்னுடைய இந்த நோயை எப்படிப்பட்டவர்களாலும் தெரிந்து கொள்ள முடியாது. காளிங்கன் தங்கிய சுனைக் கடம்ப மரத்தின் உச்சியில் ஏறி, பாம்பின் தலையில் கண்ணன் நடனம் செய்த இடத்துக்கு, அந்தப் பொய்கைக் கரைக்கு என்னை நீங்கள் துயரம் எதுவும் கொள்ளாமல் அழைத்துச் செல்லுங்கள். நீலக் கடல் வண்ணனாகிய அந்தப் பரமன் தன் கைகளால் என்னைத் தடவினால், என்னுடைய இந்த நோய் நீங்கும். இதுவே கைமேல் பலன் தரும் வழி.
622:
கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்,
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட்
டிருடீகே சன்பக்கல் போகேயென்று,
வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று
பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும்
பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6
கார்காலத்து மேகமும் கருவிளை, காயாம்பூ, தாமரை மலர்களும் வந்து, இருடீகேசனிடத்தில் நீ போ என்று என்னைக் கட்டாயப்படுத்துகின்றன. கண்ணன் பசுக்களை மேய்த்து சோர்வுற்று, வியர்வை பெருக, பசியாலே வயிறு தளர்ந்தான். அந்த நிலையில், முனிவர்களின் மனைவிமார் ஒஉணவு உண்ணும் நேரம் இது என்றபடி தன் பசியாற்றுவர் என கண்ணன் எதிர்பார்த்திருந்த, பக்தவிலோசனம் என்னும் இடத்துக்கு என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்.
623:
வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்,
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்,
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7
என் உடல் வண்ணம் குலைய, மனம் தளர்ச்சி அடைய, மானம் கெட்டவளாய், வாய் வெளுத்து, உணவு வெறுத்து, உள் மெலிந்து போனேன். இவை நீங்க வேண்டுமானால், கடல் வண்ணனின் திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுங்கள்… அதனால் என் நோய் தணியும். அது முடியாது என்றால், பலதேவன் பிரலம்பாசுரனை அவன் எலும்புகள் உடைய கொன்ற இடமாகிய பாண்டீரம் என்னும் ஆலமரத்தடிக்கு என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்.
624:
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,
பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ,
கற்றன பேசி வசையுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து,
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8
கன்றுகளை மேய்ப்பதையே கண்ணன் தொழிலாகக் கொண்டான். காட்டிலே தங்கும் இடையர்களின் சாதியில் பிறந்தான். வெண்ணெயைத் திருடித் தின்னும் போது, பிடிபட்டு, உரலில் கட்டப்பட்டான். எளிமையின் எல்லையான இந்தச் செயல்கள், பாவிகளான உங்களால் பழிக்கும்படி ஆயிற்றே! நீங்கள் கற்றவற்றைப் பற்றிப் பேசி என்னிடம் வசை வாங்கிக் கொள்ளாமல், பசுக்களை மேய்த்த கண்ணன், பெருமழையில் இருந்து அனைத்தையும் காக்க, குடைபோலே ஏந்தி நின்ற கோவர்த்தன மலைக்கு என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்.
625:
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9
நான் வளர்த்த கிளி எப்போதும் கூட்டில் இருந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என்று கூவுகிறது. அதற்கு உணவு கொடுக்காமல் என் கோபத்தைக் காட்டினேன் என்றால், உலகளந்தானே என்று ஓங்கிக் கூவுகிறது. இந்தப் பெயர்களைக் கேட்டாலோ, என் விரக தாபம் அதிகரிக்கவே செய்கிறது. நாட்டில் பழியை அடைந்து, உங்களுடைய பெயரையும் கெடுத்து முகம் காட்ட முடியாமல் நிற்பது தகாது. எனவே, மாடங்கள் உயர்ந்து தோன்றும் துவாரகைப் பெருநகருக்கு என்னை அழைத்து சென்று விட்டுவிடுங்கள்.
626:
மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்,
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10
பொன் மாடங்கள் விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைவரான விஷ்ணுசித்தர் மகள் கோதை, தாழ்ந்த கூந்தலை உடையவள். மதுரையை முதலாவதாகக் கொண்டு, துவாரகை வரை கூறப்பட்ட தலங்களுக்குத் தன்னை உறவினர் கொண்டு சேர்க்க வேண்டுமாறு ஆண்டாள் கூறிய இந்த இசைப்பாடல்களை ஓதுபவர்கள், வைகுந்தத்தை வாழும் இடமாகப் பெறுவார்கள்.