ஒரு நாள் ராமகதையைக் கூறி வந்த வைணவப் பெரியார், ராமபிரான் அரக்கர்களுடன் போர் புரிந்த நிகழ்ச்சியை விவரிக்கத் தொடங்கினார். லட்சுமணன் வில்லை ஏந்தி கவசம் தரித்து, அம்பறாத்தூணியை தோளில் இட்டு வாளை இடையில் செருகிக் கொண்டு ராமபிரானிடம் வந்தான். எதிர்த்து நின்ற அரக்கர்களுடன் போர் புரிய விடை கேட்டான். உடனே ராமன், நீ போக வேண்டாம். நீ இங்கே சீதையைக் காத்துக்கொண்டிரு. நான் சென்று அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, குகையிலிருந்து வெளிவரும் சிங்கத்தைப் போல், பர்ணசாலையிலிருந்து வெளியே வந்தான்.
அதைக் கண்ட சூர்ப்பனகை, இவனே அரக்கர்களின் பகைவனாகிய ராமன் என்று கத்தினாள். அம்மொழியைக் கேட்ட அரக்கர்கள் எல்லோரும் ராமனைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். ஒரே சமயத்தில் எல்லோரும் பல வகை அஸ்திரங்களையும் போர்க் கருவிகளையும் கொண்டு தாக்கத்தொடங்கினார்கள். அரக்கர்களின் அம்புகளும் வேல்களும் வாள்களும் சூலங்களும் எம்பெருமான் ராமன் மீது பட்டு கீழே விழுந்தன என்று ராமபிரானின் கதை மிக சுவாரஸ்யமாக அதிலேயே லயிக்கும் வண்ணம் கூறிக்கொண்டிருந்தார்.
கதை கூறியவர் லயித்துக் கூறிய பாங்கில், அதே போல் கதையை அதனோடு ஒன்றிக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரர் திடீரெனத் துள்ளி எழுந்தார். ஆ! ராமன் அரக்கர்களின் மத்தியிலே தன்னந்தனியாக நின்று போர் செய்கிறாரே! மாயையில் வல்லவர்களும் விண்ணவர்களும் பயந்தோடும்படியான திறமை பெற்றவர்களுமான கரன், தூஷணன், திரிசரன் ஆகியோரின் பெரும் படையை எப்படி ராமபிரான் எதிர்த்து வெல்லப் போகிறாரோ? ஐயோ இது என்ன? எப்படி இது முடியுமோ தெரியவில்லையே? நம்மை ஆளும் ஆருயிர்த் தலைவர்க்கு உதவி புரியாமல் நான் மட்டும் சும்மாயிருந்தால் அது நமக்குத் தகுதியில்லையே! உடனே சென்று அவருக்கு உதவ வேண்டும். அரக்கர்களை எதிர்த்துப் போர் புரியும் ராமபிரானுக்கு நாமும் உறுதுணையாகப் போக வேண்டும் என்று உணர்ச்சி வேகம் அவர் மனத்தில் ஆட்கொண்டது.
அவர் எதையும் யோசிக்கவில்லை. துள்ளி எழுந்த அடுத்த நொடி, தம் படைத் தலைவர்களைக் கூவியழைத்தார். நான்கு வகைப் படைகளையும் உடனே போருக்கு ஆயத்தமாகும்படி திரட்டச் சொன்னார். இதைக் கேட்ட படைத் தலைவர்களோ ஒன்றும் புரியாமல் மயங்கி நின்றார்கள். நம்மை எதிர்த்த சோழரும், பாண்டியரும் மூலையிலே முடங்கிக் கிடக்கிறார்களே. நமக்கோ வேறு எதிரிகளும் இல்லையே! அவ்வாறு இருக்கும்போது யார் மீது இந்தப் போர்? எதற்காகப் படைதிரட்ட வேண்டும்? மன்னர் போருக்கு ஆயத்தமாக படை திரட்டச் சொன்னது எதனால்? மன்னரின் மனத்தை யாரேனும் புண்படுத்தியிருக்கிறார்களோ? அவ்வாறிருக்க நியாயமும் இல்லையே! மன்னர் எல்லோரிடமும் அன்புடன் இருப்பவராயிற்றே! சரி எப்படியும் இருக்கட்டும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதே நம் கடமை என்று எண்ணம் கொண்ட படைத் தலைவர்கள், பிறகு நால் வகை சேனைகளையும் உடனே போருக்கு ஆயத்தமாகத் திரட்டிக் கொண்டு தயாராக வந்தார்கள். அந்தப் படைகளைக் கண்டால் அரக்கர்கள் மட்டுமல்ல; வானத்துறையும் தேவர்களும் அஞ்சி ஓடிவிடுவார்கள் போலிருந்தது.
குலசேகரரின் தேர்ப் பாகன் தேரைப் போர்க் கோலத்துடன் கொண்டு வந்து அவர் அருகே நிறுத்தினான். குலசேகரரும் போர்க் கோலம் பூண்டு அர்ச்சுனன்போல் மிடுக்குடன் தேரில் ஏறி அமர்ந்தார். ஆனால் எங்குச் செல்வது? போர் எங்கே நடக்கிறது? ராமபிரானுக்கு ஆதரவாகப் போர்க்களம் செல்லவேண்டும் என்ற ஆணையைக் கேட்டார்கள். படைத் தலைவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால் மன்னரின் மன நிலையை ஒருவாறாகப் புரிந்துகொண்ட அமைச்சர், இது மன்னர் ராமாயணம் கேட்ட பின் விளைவு என்று தீர்மானித்தார். உடனே ராமாயணம் கூறும் அந்தப் பெரியவரை அவசரமாக அழைத்து வந்தார். அந்தப் பெரியவரிடம் மன்னருக்கு இனி எப்படிக் கதை சொல்லி சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதைச் சொன்னார்.
அவரும் குலசேகர சக்கரவர்த்தியிடம் சென்று வணங்கி அவர் பாதங்களில் மலர்களை வைத்து, உலகம் யாவையும் ஒரு குடைக்குள் ஆளும் தன்மையுடைய வேந்தர்பிரானே! தங்களுடைய அன்பும் அருளும் மேலும் மேலும் சிறந்து விளங்கட்டும். தங்களுடைய வீரம் உலகம் உள்ளளவும் வாழட்டும்… நான் நேற்று விட்ட இடத்திலிருந்து ராமாயணத்தைத் தொடர்கிறேன்.
ஆ! என்ன வியப்பு! ராமபிரானை எதிர்த்து எவ்வளவுதான் அவர்கள் படைக் கலன்களால் மழை பொழிந்தாலும், ராமபிரானின் கணை மழைக்கு முன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு நொடிப் பொழுதில் அரக்கர் சேனை முழுவதும் சின்னாபின்னமாகி விட்டன. அனைவரும் அழிந்தனர். கரனும் தூஷணனும் திரிசரனும் தங்களுடைய உயிரைத் துறந்தனர். சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரான் தனி ஒருவராகவே நின்று அரக்கர்களை எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடினார். பிறகு பர்ணசாலையை நோக்கிப் புறப்பட்டார். அங்கே சீதாபிராட்டி எம்பெருமானின் மார்பில் பட்டிருந்த புண்களுக்கெல்லாம் மருந்தாக அவரைத் தழுவி மகிழ்ந்தார். இளையபெருமாள் லட்சுமணன் வந்து அவருடைய பாதங்களில் விழுந்து எழுந்தான். அந்தக் காட்சியை ஆனந்தக் கண்ணீர் சிந்தக் கண்டான்… – இப்படியே கதையை விரைவாகச் சொல்லி, ராவண சம்ஹாரம் வரை சொன்னார்.
ஸ்ரீராமபிரான் பின்பு விபீஷணனை லங்கைக்கு மன்னனாக்கி, மணிமுடி சூட்டி மகிழ்ந்தார். இறுதியில் எல்லோரும் அயோத்திக்குத் திரும்பினர். அயோத்தியின் சக்கரவர்த்தியாக ராமபிரான் மணிமுடி தரித்து இவ்வுலகை அன்புடனும் அருளுடனும் பரிபாலித்து நெடுங்காலம் வாழ்ந்தார். வாழ்க ஸ்ரீராமபிரான்! வாழ்க சீதாபிராட்டி! – என்று ராமபிரானின் கதையை வேகவேகமாகக் கூறி முடித்தார்.
அந்தக் கதையைக் கேட்ட பின்னரே குலசேகரருக்குத் தெளிவு பிறந்தது. அவர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். எம்பெருமானாகிய ராமபிரான் அருள் திறத்தில் மனம் ஒன்றிப் பேரானந்தம் அடைந்தார். தம் நிலையையும் அவர் உணர்ந்து கொண்டார். ராம கதையைச் சொன்ன வைணவப் பெரியவருக்கு பரிசளித்து, அவரை வணங்கி விடை கொடுத்து அணுப்பினார். பிறகு படைத் தலைவர்களை நோக்கி படைத் தலைவர்களே! படைகளை அவற்றின் இடத்துக்கே அனுப்பி விடுங்கள் என்று ஆணையிட்டு அரண்மனை திரும்பினார்.
மன்னரின் வைணவ பக்தி அதிகமாகிவிட்டதை அறிந்த அமைச்சர்கள் ஒன்றுகூடி விவாதித்தார்கள். நிலைமை இப்படியே போனால் மன்னர் நாட்டை பரிபாலிப்பதை மறந்து விடுவார் என்று எண்ணினார்கள். வைணவர்களின் கூட்டுறவாலேயே மன்னர் இவ்வாறு பைத்தியமானார். அதனால் அவர்களின் கூட்டுறவை விட்டு மன்னரை விலகச் செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? என்று ஆராய்ந்தார்கள். கடைசியில் ஒருவழி அவர்களுக்குப் புலப்பட்டது. வைணவர்கள் மீது ஏதாவது பழி சுமத்தி, அவர்களை மன்னரிடமிருந்து விலக்க வேண்டும் என்று யோசித்தார்கள். ஓர் உபாயத்தை செயல்படுத்தினார்கள்.
மன்னர் ஆராதிக்கும் பெருமானுடைய அணிகலப் பேழையிலிருந்து ஒரு நவமணி மாலையை யாரும் அறியாதவாறு எடுத்து மறைத்து விட்டார்கள். மறுநாள் வழக்கம்போல் குலசேரர் எம்பெருமானை ஆராதிப்பதற்காகப் பேழையைத் திறந்தார். அதிலே நவமணிமாலை இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். செய்வதறியாது கலங்கினார்.
பிறகு அமைச்சர்களை அழைத்து செய்தியைக் கூறினார்.
அமைச்சர்கள் வேந்தே! இந்த அரண்மனையில் இவ்விடத்தில் வருவதற்கு வைணவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. எனவே அவர்களில் யாரேனும் அதை திருடிச் சென்றிருக்க வேண்டும். வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை! என்றார்கள்.
அமைச்சர்களே! அவ்வாறு கூறாதீர்கள். மாலவனின் அடியார் எவரும் இப் பாவத்தைப் புரிய மாட்டார்கள். அவர்கள் நான், எனது என்ற அக, புறப் பற்றை நீக்கிய உத்தமர்கள். பேரழகுப் பெண்களாலும் அவர்களை மயக்க முடியாது. அப்படியிருக்க அவர்கள் கேவலம் இந்த மணி மாலைக்கா மயங்குவார்கள்? நிச்சயமாக இக்கீழான செயலை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்திருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் உணரும்படி செய்கிறேன் பாருங்கள் என்று கூறி, ஒரு குடத்தில் நல்ல பாம்பையிட்டு என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார்.
மன்னரின் கட்டளையாயிற்றே! அவர்களும் அவ்வாறே நல்ல பாம்பை ஒரு குடத்தில் வைத்து, அதைக் கொண்டு வந்தார்கள். ஆயினும் அவர்களுடைய உள்ளம் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.
குலசேகரர் அவர்களையெல்லாம் ஒருமுறை பார்த்துவிட்டு, எம்பெருமான் அடியவர்கள் அம்மாலையை எடுத்திருப்பார்களானால், இந்தப் பாம்பு என்னை தீண்டட்டும்; இல்லாவிடின் அது அப்படியே வாளாவிருக்கட்டும்… என்று கூறி, தன்னுடைய கையை அந்தக் குடத்தினுள் நுழைத்தார்.
குடத்தினுள் இருந்த நல்ல பாம்போ, அவர் கையைத் தீண்டாது, மடங்கி ஒடுங்கி முடங்கிப்போனது. வெகுநேரம் கழித்து கையை அதனுள்ளிருந்து வெளியே எடுத்தார். பாம்பும் வெளியே வந்து, படம் எடுத்தாடி அவரை வணங்கியது. அதைக் கண்ட குலசேகரர், இந்தப் பாம்புக்கு தீங்கு ஏதும் நேராமல் பத்திரமான இடத்தில் விட்டுவாருங்கள் என்று பணியாளனுக்கு ஆணை பிறப்பித்தார்.
நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர்கள், மனம் நடுங்கினார்கள். மன்னரிடம் தங்கள் தவறைச் சொல்லி, நவரத்தின மாலையைத் திருப்பித் தந்து, தங்களை மன்னித்திடுமாறு வேண்டினார்கள்.
குலசேகரர் அவர்கள் அறியாமல் செய்த பிழையை மன்னித்தார். பின்னர் அவர்களை நோக்கி, அமைச்சர்களே! நீங்கள் இவ்வுலகத்து இன்பம் ஒன்றையே கருதி இப்படி எல்லாம் செய்தீர்கள். நீங்கள் இத்தகு மாயையில் இருக்கிறீர்கள். உலகப் பற்றை நீக்கி, எம்பெருமானின் திருவடிகளில் சரண் புகுந்து பாருங்கள். அதுதான் நித்திய இன்பத்தை அளிக்க வல்லது. பேரின்பப் பெருவாழ்வுக்கு வாழ வழிகாட்ட வல்லது. பெருமானின் திருவடி ஒன்றே பிறப்பறுக்கும்; எல்லாம் அறுக்கும். இவ்வளவு நடந்துவிட்ட பிறகு இனி எனக்கு இந்த அரசில் மனம் ஈடுபடாது. நான் இந்த அரசை வேண்டேன். மண்ணை வேண்டேன். திருவரங்கனின் திருவடிநிழலையே பெரிதெனப் போற்றுகிறேன். எனவே இந்த அரசை என் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு நான் திருவரங்கம் செல்லப் போகிறேன். நீங்கள் அவனுக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் இனி எம்பெருமானின் திருத்தொண்டில் ஈடுபடப் போகிறேன் என்று உறுதிபடக் கூறினார் குலசேகரர்.
மன்னரின் உள்ளத்தை இனி மாற்றமுடியாது என்பதை நன்குணர்ந்த அமைச்சர்கள் அவ்வாறே செய்ய எண்ணம் கொண்டார்கள். நல்லதொரு நாளில் குலசேகரரின் மைந்தருக்கு முடிசூட்டினார்கள்.
குலசேகரர் தம் மைந்தருக்கு அரசியல் திறமைகளைக் குறைவறச் சொல்லி நாட்டை ஆளும் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். பிறகு அமைச்சர்களிடமும் மக்களிடமும் விடை பெற்று, அரங்கனின் அடியாரோடு திருவரங்கப் பெரு நகரை நோக்கிச் சென்றார். அவர்களோடு பல திருத்தலங்களுக்கும் யாத்திரை செய்தார்.
அவர் ராமபிரானிடம் அதிக பக்தி கொண்டு, ராம கதையைக் கேட்பதிலேயே அதிக விருப்பு கொண்டிருந்ததால் அவரை பெருமாள் என்றே குறிப்பிட்டனர். அதனால்தான் குலசேகரப் பெருமாள் என்ற பெயர் அவருக்கு வழங்கப்படலாயிற்று.
பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.