குலசேகராழ்வார் சரிதம்

குலசேகராழ்வார்

{jcomments on}குலசேகராழ்வார் சரிதம்

சோழ நாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து என்பதுபோல் மலை நாடு வேழமுடைத்து என்பர். மலை நாடு என்பது சேர நாடு. அந்த மலை நாட்டில் யானைகள் அதிகம் உண்டு. நீண்ட தொடரென மலைகளும் காடுகளும் அழகாகக் காட்சி தரும். மலைகளும் அருவிகளும், நீர் பாயும் வயல்களும் கொண்ட அந்த அழகிய தேசத்தில் வஞ்சிக்களம் என்ற பகுதி சிறப்புற விளங்கியது. அதை கொல்லி நகர் என்றும் அழைப்பர்.

சேர நாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் பெரும் சிறப்பும் புகழும் உடையவர்கள். சேரமன்னர் மரபில் அன்புக்கும் அருளுக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தான் திடவிரதன் என்னும் மன்னன். அவன் கல்வியறிவில் சிறந்தவன். செங்கோல் வழுவாமல், அறநெறி பிறழாமல் ஆட்சி செலுத்தும் தன்மையில் தேர்ந்தவன். மக்களுக்கு நன்மையே செய்பவன். திருமாலின் மீது நீங்காத பக்தி கொண்டிருந்தான். அவன் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் வீரன். தன்னிடம் பரிசு வேண்டி வருபவர்க்கு வேண்டிய பொருட்களைக் கொடுத்தனுப்பும் ஈகை குணம் கொண்டவன்.

இப்படி சிறப்பு பொருந்திய அந்த அரசனுக்கு அவன் செய்த தவத்தின் பயனாக திருமாலின் அருங்கருணையால் ஒரு குழந்தை (கி.பி. 8-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசியில்  புனர்பூச  நட்சத்திரம் கூடிய திருநாளில் விஷ்ணுவின் ஸ்ரீகௌஸ்துப அம்சமாக அவதரித்தது. அக்குழந்தையைக் கண்டு மன்னன் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தான். தலைநகர் மங்கல விழாக்கோலம் பூண்டது. வறியவர்க்கு வேண்டுவன வாரி வாரி வழங்கினான். புலவர் பெருமக்களுக்கு வேண்டிய அளவு பொன்னும் பொருளுமாகப் பரிசுகள் தந்து மகிழச் செய்தான். நகரக் கோயில்கள் அனைத்திலும் பூஜைகள் களை கட்டின.

உலகம் உய்யும் பொருட்டு திருமாலின் அருளால் வந்து பிறந்த அந்தக் குழந்தைக்கு ஊர் கூடி பெயர் சூட்டு விழா நடந்தது. முதியவர்கள் ஒன்று கூடி சேரர் குலம் செழிக்கப் பிறந்த செம்மல் என்பதால் குலசேகரன் என்று பெயர் சூட்டினர்.

குலசேகரரின் மீது பெற்றோர் அளவற்ற பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள். தங்களின் ஆருயிர் போன்று அவரை சிறிது நேரமும் விட்டுப் பிரியாது கவனமாக வளர்த்தார்கள்.

குலசேகரருக்கு ஐந்து வயதாயிற்று. அவருக்கு கற்க வேண்டிய நூல்களைக் கற்பித்தனர். செந்தமிழிலும் வடமொழியிலும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவி பாடவும் ஆற்றல் பெற்றார். யானையேற்றம், குதிரையேற்றம், தேர் ஓட்டுதல், வாள் சண்டை, குத்துச் சண்டை, ஈட்டி எய்தல் ஆகிய படைக்கலப் பயிற்சி பெற்று பெரும் வீரராகவும் விளங்கினார். அவரின் வீரத்தையும் கல்வியறிவையும், கலைப் பற்றையும் தெய்வ பக்தியையும் கண்டு சான்றோர்கள் போற்றிப் புகழ்தார்கள்.

குலசேகரருக்கு தக்க பருவம் வந்ததும் அவருடைய தந்தை அவரை இளவரசராக்கி மகிழ்ந்தார்.

தந்தையாரின் காலத்துக்குப் பிறகு குலசேகரருக்கு நல்லதொரு மங்கல நாளில் முடி சூட்டப்பெற்றது. அதன் பின் அவர் சேர நாட்டைத் திறம்பட ஆண்டு வரலானார். அறநெறி வழுவாத அவருடைய ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

அவருடைய திறமையையும் அறிவையும் ஆட்சி செய்யும் ஆற்றலையும் கண்ட சோழ மன்னனும் பாண்டிய மன்னனும் அவர் மீது பொறாமை கொண்டனர். அவரைப் போரிலே வென்று அவமானப்படுத்தி, சேர நாட்டை தங்கள் ஆட்சிக்குள் கைப்பற்றிக் கொள்ள பேராசைப்பட்டார்கள்.

அதனால் குலசேகரரைப் போரில் வெல்லக் கருதி அவரை எதிர்த்தார்கள். ஆனால் அந்தப் போரிலே சோழ பாண்டிய வேந்தர்களை குலசேகரர் வென்று, வெற்றிவாகை சூடினார். சேர சோழ பாண்டிய நாடுகளுடைய தமிழகத்தை ஒரு குடைக்கீழ் ஆண்டு, பெரும் சக்கரவர்த்தியென புகழ்பெற்றுத் திகழ்ந்தார். பாண்டிய மன்னன் அவருடைய வீரம் கண்டு, தன் அருத்தவப் புதல்வியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

குலசேகரர் இப்படி வீரப்போர் நிகழ்த்தும் விருப்பம் உடையவராகவும், இல்லற வாழ்க்கையில் பெரும் இச்சை கொண்டவராகவும் வாழ்ந்து வந்தார். அப்போது பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன் அவர் மனத்திலே புகுந்து அவரிடம் உறவாடிய நான் என்ற அகங்காரத்தையும் எனது என்ற மமகாரத்தையும் நீக்கி, தன் மீது நேசம் உடையவராக மாற்றியருளினான்.

அன்று முதல் குலசேகரர், நாராயணன் அடியார்க்கு எளியவராக விளங்குவதையும், உலகத்து உயிர்களைத் தன்னுயிர்போல் காத்தருளும் தன்மையையும், அவருடைய பெருமைகளையும் உணரத்  தொடங்கினார். தாம் இதுவரை செய்த போர்களின் தன்மையை எண்ணி மனம் வருந்தினார். உலகப் பற்றில் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. பவளவாய் கமலச் செங்கண் அருளை எண்ணி மகிழ்ந்தார்.

குலசேகர ஆழ்வாருக்கு நாளாக நாளாகத் திருவரங்கப் பெருமான் மீதுள்ள பக்தி அதிகரித்தது. அவருக்கு திருமால் அடியார்களிடத்தும் திருமாலின் அவதாரக் கதைகளைக் கேட்பதிலும் ஈடுபாடு அதிகரித்தது. எப்போதும் திருமால் அடியார்களுடன் காலம் கழிப்பதிலேயே கண்ணாக இருந்தார்.

அப்படியே அவர் மனம், பெருமானின் லீலைகளில் அதிகமாக ஈடுபடலாயிற்று. கண்ணன் அருகில் இருந்தவாறான அனுபவத்தை அவர் மனத்தில் சிந்திக்கத் தொடங்கினார். கண்ணணைப் பெற்றெடுத்த தாயாகிய தேவகி அவனுடைய பால லீலைகளைப் பார்த்து மகிழும் பேற்றைப் பெறவில்லையே என்று தனக்குள் வருந்துவார். அவர் தன்னை தேவகியாகவே பாவித்துக்கொண்டு, தானே தேவகியாகவே இருந்து தன் மகன் கண்ணனைப் பற்றி உள்ளம் உருகப் பாடி மகிழ்வார்.

தண் அம் தாமரைக் கண்ணனே! கண்ணா

தவழ்ந்து எழுந்து தளர்ந்து ஒர் நடையால்

மண்ணில் செம்பொடி ஆடிவந்து என்தன்

மார்பில் மன்னிடம் பெற்றிலேன்!அந்தோ!

வண்ணச் செம்சிறு கைவிரல் அனைத்தும்

வாரி வாய்கொண்ட அடிசிலின் மிச்சில்

உண்ணப் போற்றிலேன் ஓ! கெடுவினையேன்

என்னை என்செய் பெற்றது எம் மோயே!

என்று நெஞ்சுருகிப் பாடுவார். ஆம்! குலசேகரர் கண்ணனைத் தன்னுடைய குழந்தையாகவே பாவித்தார். அவருடைய உள்ளம் அவன் மீதே சென்று கலந்துவிட்டது. கண்ணன் குறும்புகள் பல புரியும் பாலனாக ஆயர்பாடியிலே வளர்த்து குமரப் பருவக் கோலம் கொண்டு கோதையர் மயங்கிட குழல் ஊதி, கோமளக் கண்ணனை ஆடிப்பாடி மகிழ்வூட்டிய கதைகளை எல்லாம் தம் கற்பனையிலே நடமாடவிட்டு அக்கண்ணன்மீது ஆழ்ந்த காதல் கொண்டார். தன்னையே காதலியாக வைத்தும் பாடி மகிழ்ந்தார்.

இவ்வாறு திருமால் மீதே அன்பு பூண்டு, அடிமையாகி வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கண்ணனின் தொண்டர்கள் பலரை வரவழைத்து அவர்களுக்கு அறுசுவை உணவளித்து அவர்களுடைய சேவடிகளைப் போற்றினார்.

குலசேகரர் இவ்வாறு வாழ்ந்து வரும் காலத்தே, அவருக்கு புராணக் கதைகளைக் கேட்பதில் ஆர்வம் பெருகியது. அதிலும் குறிப்பாக ராமாயணக் கதை கேட்பதில் பெருவிருப்பம் உண்டானது. அதனால், அவர் நற்குண சீலரும் ராமபக்தருமான ஒரு வைணவப் பெரியவரைக் கொண்டு வால்மீகி மகரிஷி இயற்றிய ராமகதையைக் கூறக் கேட்டு வந்தார்.

குலசேகரர் ராமாயணம் கேட்கும்போது அவருடைய நெஞ்சம் நெகிழ்ந்து போகும்; கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பெருகி வழிந்தோடும். கதை கூறும் சூழ்நிலைகளிலே அவருடைய உள்ளமெல்லாம் கரைந்துவிடும். அப்படியே அவர் பக்திப் பரவசமாகித் தம்மையும் தம் சுற்றுப்புறச் சூழ்நிலைகளையும் மறந்து, அதிலேயே லயித்துவிடுவார்.

Leave a Reply