குலசேகராழ்வார் சரிதம்

குலசேகராழ்வார்

இனி, குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்களைப் பார்ப்போம்.

இவர் பெருமாள் திருமொழி என்று 105 பாடல்களைப் பாடியுள்ளார்.

ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் அதிகம் உண்டு.

பெருமாள் திருமொழியில் முதல் பாடலிலேயே, திருவரங்கப் பெருமானைக் காண விரும்பும் ஏக்கத்தை வெளிப்படுத்தி பாடலைத் தொடங்குகிறார்…

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி

இனத்துத்தி அணிபணம் ஆயிரங்கள் ஆர்ந்த

அரவு அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும்

அணிவிளங்கும் உயர் வௌளை அணையை மேவித்

திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி

திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்

கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்

கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே!

– இருளைச் சிதறச் செய்யும் ஒளி பளிச்சிட, ஆயிரம் அணிகள் அணிந்த அரவரசனான ஆதிசேஷன் மேலே படுத்திருக்க, திருவரங்கத்தில் காவிரி நதியின் அலைகள் காலை வருட, சயனத் திருக்கோலம் கொண்டிலங்கும் கரிய மாணிக்கத்தை, கோமளத்தை என் இரண்டு கண்களும் என்றுதான் கண்டுகொண்டு களிக்குமோ! – என்கின்ற ஏக்கப் பெருமூச்சை இந்தப் பாடலில் வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து அரங்கன் அடியாரின் அடிமைத் திறத்தில் ஈடுபட்டும், அரங்கன் அடியாராய் உலகத்தாரொடும் பொருந்தாமல் தனித்திருக்கும் தன்மையுமாய் பத்துப் பத்துப் பாசுரங்கள் பாடுகிறார். இப்படி முப்பது பாசுரங்கள் அரங்கனைப் பாடிவிட்டு, பின்னர் திருவேங்கடமுடையான் பக்கலுக்குச் செல்கிறார் குலசேகராழ்வார்.

ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்;

ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்;

கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!

என்று எதையும் யான் வேண்டேன்; திருக்கோனேரியில் நாரையாகப் பிறந்து திருவேங்கடத்து எம்பெருமானின் வடிவழகில் ஈடுபடுவேன்… என்கிறார். அடுத்து,

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் நான்வேண்டேன்

தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

– நான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திரபோகத்தை விரும்பவில்லை.  இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரசபோகத்தையும் விரும்பவில்லை.  இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கடமலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்று வேண்டுகிறார்.

இன்றைக்கு இறைவனைத் தொழும் அடியார்கள் சிலர், தமக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடனே, இறைவன்மீது கோபம் கொண்டு அவன் மீதான பக்தியைக் கைவிட்டுப் புலம்புவதைப் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையான பக்தி என்பது, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை குலசேகராழ்வாரின் அடுத்த பத்து பிரபந்தப் பாசுரங்களில் இருந்து நாம் உணர்ந்து தெளியலாம்.

எல்லோருக்கும் கஷ்டங்கள் வரலாம். ஆனால் அதற்கான காரணமாக நாம் வணங்கும் கடவுளை எண்ணினால், அது எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பக்தியாகவே இருக்கும், அதற்குப் பெயர் வியாபாரம் என்பதை நாம் உணரவேண்டும்.

அந்த மனவுறுதியை நமக்கு அளிக்கத்தான் குலசேகராழ்வார் இந்தப் பத்துப் பாசுரத்தில் நமக்கு ஒரு வழியைச் சொல்கிறார்.

எந்தத் துயரம் தந்தாலும் உன்னை நான் விட மாட்டேன்… பெற்ற தாய் கோபத்தால் விலக்கி விட்டாலும் அவளை நினைத்தே அழும் குழந்தை போல,

எந்தத் திசையிலும் கரை காணாமல் பறந்து திரிந்து, கடைசியில் கடலில் சரண் பெறும் மரப்பறவை போல,

என் சித்தம் உன்மேலேயே இருக்கும்.

இந்த வரிசையில்,

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்

கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்

விண் நேய் மதில் புடைசூழ் விற்றுவக் கோட்டு அம்மானே!

கொண்டு ஆளாய் ஆகினும் உன் குரைகழலே கூறுவனே!

காதலன் – கணவன் கொடியவனாயிருக்கலாம் பிறர் இகழத்தக்க செயல்களைச் செய்கிறவனாக இருக்கலாம். அவன் மனைவி நல்ல கற்புடையவளாக இருந்தால் அவனைக் கைவிடமாட்டாள். கொடும் செயல்களைச் செய்யினும் கணவனையே தெய்வம் என்று போற்றுவாள்.

அதுபோலவே வானை முட்டும் மதில் சூழ்ந்த வித்துவக்கோட்டில் உள்ள தலைவனே, என்னை நீ ஆட்கொண்டு காப்பாற்றாவிட்டாலும், உன்னுடைய வீரக் கழலையுடைய அடிகளைப் பற்றியவாறு எப்போதும் போற்றிக் கொண்டேயிருப்பேன்.

அடுத்து ஒரு பாடல், இது அனைவராலும் கையாளப்படுவது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்

மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே !

– என்பதில், மருத்துவன் கத்தியால் அறுத்து சூடு போட்டாலும், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால், நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். அதுபோல், வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே எனக் கருதி, உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.

யசோதை என்ற வளர்ப்புத்தாய் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த கண்ணனின் குழந்தை விளையாட்டை, பெற்ற தாயான தேவகி காணப் பெறாமல் புலம்புவதுபோல் பத்துப் பாடல்கள் அடுத்து உள்ளன.

அதனை அடுத்து வருவது, மிகப் புகழ்பெற்ற பத்து பாசுரங்கள். ராமபிரானைத் தாலாட்டும் பாடல்கள்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்று தொடங்கும் இந்தப் பாசுரங்களை நீலாம்பரி ராகத்தில் கேட்டு மகிழாதவர்கள் மிகக் குறைவே!

மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

ராமபிரான் அணை கட்டி, லங்கையை அடைந்த கதையை நம் நாட்டின் பல மொழிகளில் வந்துள்ள ராமாயணங்களும் பறைசாற்றும். அந்த வகையில் ராமபிரானின் பக்தராகவே வாழ்ந்த குலசேகரப் பெருமாளும் ராமபிரான் கடலில் அணை கட்டி லங்கையை அடைந்து போர் புரிந்த வரலாற்றைத் தம் பாசுரத்தில் தெளிவுறக் காட்டுகிறார். மலைப் பாறைகளால் அந்த அணை அமைந்தது என்பது குலசேகரப் பெருமான் காட்டும் காட்சி.

மலையதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே!

அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச்செய்தவனே!

கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!

சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

மலைகளால் அணை கட்டி, மதில் சூழ்ந்த இலங்கை சென்று ராவணனை வென்றவனே, அலைகள் ததும்பும் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் அளித்தவனே, கலைகளில் வல்லவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்துப் பெருமானே, வில் வளைக்கும் வீரனான ஸ்ரீராமா! தாலேலோ.

இந்தத் தாலாட்டுப் பாடல்களுக்குப் பிறகு அவர் செய்திருப்பது, தசரதன் புலம்பல் என்ற பகுதியும் ஸ்ரீராமாயணச் சுருக்கமும்.

மன்னராக இருக்கும்போது ஒரு வைணவப் பெரியவர் மூலம் ராமகதை கேட்டுக்கேட்டுப் பழகி ராமபிரானின் மேல் ஆறாக் காதல் கொண்டிருந்த குலசேகராழ்வார், தம் பாசுரங்களில் ராமபிரானின் சரிதத்தையும் அழகுறப் பாடியிருக்கிறார். அது கேட்பதற்கு மிக உருக்கமாக இருக்கும்.

இந்த வகையில், குலசேகரப் பெருமாளை கம்பநாட்டாழ்வானின் முன்னோடி என்று சொல்லலாம்.

குலசேகர ஆழ்வார் முகுந்தமாலை என்னும் சம்ஸ்க்ருத நூலையும் எழுதினார் என்று சொல்பவர்களும் உண்டு.

குலசேகராழ்வார் வாழி திருநாமம்

அஞ்சன மாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே

அணிஅரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே

வஞ்சி நகரம் தன்னில் வாழ வந்தோன் வாழியே

மாசிதனில் புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே

அஞ்சல் என குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே

அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே

செஞ்சொல் மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே

சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

Leave a Reply