பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார்

2202:
தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, – வாமன்
திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே
அருநரகம் சேர்வ தரிது. 21

2203:
அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து? 22

2204:
தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், – தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23

2205:
அவன்கண்டாய் நன்னெஞ்சே. ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று. 24

2206:
சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,
கொன்ற திராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து. 25

2207:
வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், – உந்திப்
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
படியமரர் வாழும் பதி. 26

2208:
பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம். 27

2209:
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், – எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன். 28

2210:
மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு, – மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ. 29

2211:
நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
நீயன் றுலகிடந்தா யென்பரால், – நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
பேரோத மேனிப் பிரான். 30

Leave a Reply