பூதத்தாழ்வாரின் திருச் சரிதம்
கோயில்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தில், அலைகள் தவழும் அழகிய கடற்கரை ஓரத்தில் அமைந்த நகரம் திருக்கடல்மல்லை. இந்த நகரின் கடற்கரைக்கு அருகிலே அமைந்திருந்தது அழகான கோயில் ஒன்று.
அந்தத் தலத்தில் உறையும் இறைவனை அடியார்கள் பலர் போற்றிப் பாடியிருக்கிறார்கள். நூற்றெட்டு வைணவத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அந்தத் தலத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. அதுதான், முதலாழ்வார்கள் மூவரில் இரண்டாமவரான பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்பது.
மிகப் பழைமையானஅந்த நகரம் இப்போது மாமல்லபுரம் என்றும், மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது.
இந்தத் தலத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. பொதுவாக வைணவத் தலங்களில், ஸ்ரீமந் நாராயணனின் மூன்று நிலைகளான, நின்றான், இருந்தான், கிடந்தான் என்றபடி, சில தலங்களில் நின்றபடி காட்சியளிப்பான். சில தலங்களில் வீற்றிருப்பான். சில தலங்களில் பகவான் பள்ளி கொண்டிருப்பான்.
திருவரங்கத்திலே அரிதுயில்கின்ற அரங்கப்பெருமான், பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருவான். ஆனால் ஆதிசேஷனான அரவின் மீது அரிதுயில்கின்ற கோலத்தில் காட்சியளிப்பான். அதுபோல் இன்னும் சில தலங்களில் பாம்பணையில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமான், இந்தத் தலத்தில் மட்டும் அப்படி இல்லாமல் வெறும் தலத்தில் துயில்கொண்டுள்ளான். எனவேதான் இந்தத் தலத்தை தல சயனம் என்று அழைக்கிறார்கள்.
திருக்கடல்மல்லை தலசயனத்தில் உறையும் இந்தப் பெருமானுக்கு தலசயனப் பெருமாள் என்பதே திருநாமம். இந்தத் தலத்துக்கு மேலும் பெருமை சேர வேண்டும் என்பதால்தான், பெருமாள் இங்கே பூதத்தாழ்வாரை அவதரிக்கச் செய்தார்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் பூதத்தாழ்வார் அவதரித்தார். பக்திப் பெருக்கால் திருமாலின் ஈடு இணையற்ற அழகை எந்நேரமும் தன் மனக்கண்ணால் பருகி, அவன் புகழ் பாடுவதையே பணியாகக் கொண்டிருந்தார். மற்ற உலகியல் விஷயங்களில் எதிலும் அவருடைய மனம் செல்லவில்லை; வேறெதிலும் நாட்டம் கொள்ளவில்லை.
பகவானின் அருளால், வேத வேதாந்தக் கருத்துகள் எல்லாம் அவருக்குத் தானாகவே கைவரப் பெற்றன. உலகப் பற்றறுத்த உத்தமராக விளங்கிய பூதத்தார், பெருமாளுக்கு பூமாலை சூட்டி மகிழ்ந்தார்.
முழு முதற் கடவுளான திருமாலிடத்தே பற்று கொண்டு, ஆராக் காதலுடன் பாடியாடி, அகம் குளிர முகம் மலர அப் பெருமானின் திருவடிகளுக்கு நாள்தோறும் பாமாலையும் சாற்றி வந்தார். திருமாலின் திருப்பெயர்களை எப்போதும் சொல்லிக் கொண்டே காலம் கழித்து வந்ததால் அவரைக் கண்டோர், தெய்வப் பிறவி என்று போற்றிப் புகழ்ந்தனர்.
இவர் பாடியவை இரண்டாம் திருவந்தாதி என்று திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நூறு பாடல்களால் ஆன அந்தாதித் தொகுப்பு இது.
இதில் இடம்பெற்றுள்ள பாசுரங்கள் யாவுமே வெண்பா வகையைச் சேர்ந்தது. கேட்பதற்கு இனிமையான வெண்பா வகையில் அந்தாதி சேர்த்து இவர் பாடிய இந்தத் தமிழ் மாலையின் நூறு மலர்களும் திவ்வியப் பிரபந்தத் திரட்டின் வாசனையைப் பன்மடங்கு பெருக்குகின்றன.
இந்தப் பாசுரங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது ஒரு சம்பவம். அது – இவருடன் பொய்கையாழ்வாரையும் பேயாழ்வாரையும் சேர்த்துவைத்து பெருமான் நடத்திய திருவிளையாடல̷் 0;
திருமாலடியாரான இம்மூவரையும் ஒன்று சேர்த்து, இம்மூவர் தவத்துக்கும் பயனாகத் தன் திவ்விய அழகைக் காட்ட திருக்கோவிலூரில் கோயில் கொண்ட, உலகளந்து தன் உயரத்தைக் காட்டிய அந்த உத்தமன், இவர்கள் மனத்தையும் அளந்து இம்மூவர் பக்தியின் உயரத்தை உலகுக்குக் காட்டத் திருவுள்ளம் கொண்டான். அதைத் தொடர்ந்து இவர் பாடியவைதான் இரண்டாம் திருவந்தாதி நூறு பாசுரங்கள்.
இனி அந்தப் பாசுரங்கள் சிலவற்றின் அழகினைக் காண்போம்.
ஞானத்தை, அறிவு பெருக்கும் தமிழை விரும்பிய நான், அறிவாகிய சுடர்விளக்கினை எப்படி ஏற்றினேன் தெரியுமா? உள்ளத்து அன்பையே அகலாக, எண்ணெய் திரி முதலியவற்றைத் தாங்கும் கருவியாக அமைத்தேன். அன்பின் முதிர்ச்சியான ஆசையை நெய்யாகக் கொண்டேன். எம்பெருமானை எண்ணி இன்பத்தால் உருகுகின்ற உள்ளத்தையே எண்ணெயில் இட்ட திரியாகக் கொண்டேன். இவ்வாறு தகழி, நெய், திரி முதலியவற்றைச் சேர்த்து நன்றாக மனம் உருகி ஞான ஒளியாகிய விளக்கை திருமாலுக்காக ஏற்றினேன் – என்று தன்னுடைய இரண்டாம் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே கூறுகிறார் பூதத்தாழ்வார்.
அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா – நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
– என்பது அந்தப் பாசுரம்.
ஞானத் தமிழ் புரிந்ததாகச் சொல்லும் ஆழ்வார், இப்பாமாலையின் மற்றுமோர் பாடலில் தன்னைப் பெருந்தமிழன் என்கிறார்.
யானே தவம் செய்தேன்; ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவம் உடையேன்; எம்பெருமான்! – யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்;
பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
– நானே பெருந்தமிழன். எல்லாப் பிறவிகளிலும் எப்போதும் தவம் புரிந்த நான், அத்தவத்தின் பயனை இப்போது பெற்றேன். தமிழில் தொடுத்த சொல் மாலைகளை நின் திருவடிகளில் செலுத்தும் பேறு பெற்றேன். பெரிதான தமிழ்த்துறைகளில் மிகவும் சிறப்பு பெறும் பேறுடையன் ஆனேன்… என்கிறார். இந்தப் பாசுரத்தின்மூலம் இன்னொரு கருத்தையும் சொல்கிறார். பெருந்தமிழனான தான் எப்படி நல்லான் ஆனேன் என்பதையும் சொல்கிறார். எப்படியாம்? ஆழ்வார், அருந்தமிழ் மாலையால் அமரர்குலத் தலைவனை தினம் தொழுது நல்லான் ஆனதை நாம் தெரிந்து தெளியலாம்.
பூதத்தாழ்வார் வாழி திருநாமம்
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே
நல்ல திருக்கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழ் உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே
– அடியேன்
செங்கோட்டை ஸ்ரீராம்{jcomments on}