பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார்

2192:
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்? 11

2193:
அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12

2194:
தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் – றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13

2195:
பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, – எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14

2196:
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய், – புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15

2197:
தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, – வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று? 16

2198:
மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை, – ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17

2199:
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது – உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு. 18

2200:
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, – குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி. 19

2201:
பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, – வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம். 20

Leave a Reply