பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார்

2262:
பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், – கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே – மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வான்திகழும் சோதி வடிவு. 81

2263 :
வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், – அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை. 82

2264:
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
மறையாங் கெனவுரைத்த மாலை, – இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
மாயன்கண் சென்ற வரம். 83

2265:
வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை, – நரம்கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது. 84

2266:
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், – அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று. 85

2267:
நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், – பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? 86

2268:
இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை, – அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,
திருக்கோட்டி எந்தை திறம். 87

2269:
திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு. 88

2270:
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
அதவிப்போர் யானை ஒசித்து, – பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
மாணியாய்க் கொண்டிலையே மண். 89

2271:
மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, – நண்ணித்
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின். 90

Leave a Reply