ஒருநாள் ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங்குரலில் குரைத்துக் கொண்டிருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு காவலனை அனுப்பினார்.
அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான்.
இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம், அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன், குரைக்கும் நாயை நெருங்கி, உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல்? என்று கேட்டான்.
அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது. ராமரை வரச் சொல்லுங்கள். எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன் நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார்.
எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது.
என்னை பிச்சைக்காரர் ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன்.எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே.
நான் இப்போதே அந்த பிச்சைக்காரரிடம் விசாரிக்கிறேன் என்று சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.
ராமர் பிச்சைக்காரரிடம், நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள்? என்று விசாரித்தார். அதற்கு அவர் நான் பிட்சை வாங்கி வரும்போது, இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால் இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார்.
ராமர் புன்னகை மாறாத முகத்துடன், அவரை நோக்கி இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி. இதனால் தனக்குத் தேவையான உணவே சமைக்கவோ உருவாக்கிக் கொள்ளவோ தெரியாது. பார்க்கும் உணவே சாப்பிடவே தோன்றும். இது ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல், இந்த நாய்க்கும் பசி எடுத்ததினால், உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது.
இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டுமல்லாமல் நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள்.
உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். நாயின் பக்கம் திரும்பிய ராமர் இந்த பிச்சைக்காரர் உனக்கு கெடுதல் செய்திருப்பதால் இவரை தண்டிக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.
நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய், ராமா… என்னை அடித்த இவரை ஒரு சிவாலயத்தில் அதிகார வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.
ராமர் அதற்குச் சம்மதித்து அதற்கான ஆணையைப் பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் பிச்சைக்காரரும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அகன்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள்.
அன்னத்துக்கு அலையும் அந்த பிச்சைக்காரருக்கு, இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும்? என்று மக்கள் ராமரிடம் கேட்டார்கள்.
அனைத்தும் அறிந்த ராமர், நாயிடமே இதனைக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். நாயும் வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியை மக்கள் கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த பிச்சைக்காரருக்கு நான் அளித்தது முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி.
சிவாலயம், மடம், கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் பசு, அந்தணர், அநாதை ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுப்பவர்கள், அந்தணரின் உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள், ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறப்பார்கள்.
சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால்தான் இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் பிச்சைக்காரனுக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன்.
இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த பிச்சைக்காரர் சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார்.
ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.
எந்த தொழில் அரசு, நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. பசு, அந்தணர், ஆதரவற்றோர் ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படக் கூடாது. திருடக் கூடாது, யாசகர்களை தடுக்கக்கூடாது. யாருடைய பொருளையும் அபகரிக்கக் கூடாது.
யார் நாயாக பிறவி எடுப்பார்? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.