பூவனூர் பூவனநாதர் ஆலயம்: சங்கரன் ஆடிய சதுரங்க ஆட்டம்!

சிவ ஆலயம்

ஒருநாள் வசுசேனர் தாமிரபரணியில் நீராடச் செல்லும்போது ஆற்றில் வழக்கத்தை விட பெரிய அளவில் பூத்த ஒரு தாமரையைக் கண்டார். அதன் மேல் பார்வதி தேவி குழந்தையாக அவதரித்திருந்தார். அதைக் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்த மன்னர் குழந்தையை அள்ளி அணைத்தார். அரண்மனைக்குக் கொண்டு வந்து ராஜராஜேஸ்வரி எனப் பெயரிட்டுப் பாச மழை பொழிந்தார்.

கனவில் தோன்றிய ஈசன்!

ஒருநாள் மன்னரின் கனவில் ஈசன் தோன்றினார். “”மன்னனே! நெல்லையில் இருந்தால் உன் மகளுக்கு சில இன்னல்கள் நேரலாம். எனவே உன் மகளை அழைத்துக் கொண்டு சோழ தேசத்துக்குப் போ. உங்களுக்குப் பாதுகாப்பாக சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டிதேவியை அனுப்பி வைக்கிறேன்.

அவள் உங்களுக்கு பாதுகாப்பாகவும், உங்கள் மகளுக்கு அத்துணை கலைகளையும் கற்றுத்தரும் தோழியாகவும் இருந்து வழி நடத்துவாள்” என்றார். ஈசனின் அருள் வாக்கால் நெகிழ்ந்த மன்னர் தனது படை பரிவாரங்களுடன் சோழ தேசம் நோக்கிப் புறப்பட்டார். சாமுண்டி தேவியும் அவர்களுடன் இணைந்தாள்.

64 கலைகள்!

ராஜராஜேஸ்வரி மற்றும் சாமுண்டியுடன் சோழ நாட்டுக் காவிரிக்கரை தலங்களை தரிசனம் செய்தபடி பூவனூர் வந்து சேர்ந்தார் வசுசேனர். மூவரும் அங்கேயே தங்கி பூவனநாதரையும் கற்பகவல்லியையும் நாள்தோறும் வழிபட்டனர். ராஜராஜேஸ்வரியின் வளர்ப்புத் தாய் சாமுண்டிதேவி அவருக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தந்தார்.

இதனால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய ராஜராஜேஸ்வரி சதுரங்க ஆட்டத்திலும் வல்லமை பெற்றார். பருவமடைந்த ராஜராஜேஸ்வரிக்கு மணம் முடிக்க நினைத்த மன்னர், “சதுரங்க ஆட்டத்தில் என் மகளை வெல்பவருக்கே அவளை மணம் செய்து கொடுப்பேன்’ என்று அறிவித்தார்.

ராஜராஜேஸ்வரியின் அழகையும், அறிவையும் கேள்விப்பட்ட இளவரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு சுயம்வரத்திற்கு வந்தனர். ஆனால் எவராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்க ஆட்டத்தில் வெல்ல முடியவில்லை. இதனால் மகளின் மணக்கோலம் காண முடியவில்லையே என்று கலங்கிய மன்னர் இறைவனிடம் முறையிட்டார்.

சித்தர் வேடத்தில் வந்த சிவன்!

மன்னனுக்குக் கருணை காட்டவும், மன்னரின் மகளை மணக்கவும் இறைவன் திருவிளையாடல் நடத்தினார். சித்தர் வேடத்துடன் அரசவைக்குச் சென்றார். “சதுரங்கப் போட்டியில் வென்று உங்கள் மகளை மணம் முடிக்க வந்திருக்கிறேன்’ என்று மன்னரிடம் சித்தர் வேடத்தில் வந்த சிவன் சொல்ல, சீற்றம் கொண்டார் வசுசேனர். ஆனாலும், “மன்னாதி மன்னர்களாலும் வெல்ல முடியாத தன் மகளை இந்தக் கிழவனா வெற்றி கொள்ளப் போகிறான்?’ என்று அரை மனதுடன் சம்மதித்தார்.

ஆட்டம் தொடங்கியது!

சதுரங்கக் களம் தயாரானது. தேவி ராஜராஜேஸ்வரி ஒரு பக்கம், சித்தர் மறுபக்கம். வாழ்க்கையே ஒரு சதுரங்க ஆட்டம்தானே! ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் குறிக்கும் 64 கட்டங்கள். இரு பக்கமும் காய்கள் நகர்ந்தன. குதிரைப்படையும், காலாட்படையும், யானைப்படையும் ஒன்றுடன் ஒன்று மோதின. காய்கள் வெட்டுப்பட்டன.

இடைவிடாத ஆட்டம் தொடர்ந்தது. சம பலத்துடன் இருவரும் மோதினர். தேவி சற்றே அயர்ந்த நேரத்தில் சித்தர் வெற்றி பெற்றார். அதாவது சதுரங்க ஆட்டத்தில் சங்கரனே வென்றார். அதிர்ச்சியடைந்த வசுசேனர், “கிழவருக்கு எப்படி மகளை மணம் செய்து கொடுப்பது?’ என்று தயங்கினார்.

அப்போதுதான் சித்தர் ஈசனாக மாறிக் காட்சி தந்தார். “ராஜராஜேஸ்வரியை மணம் முடிப்பதற்காக நான் நடத்திய திருவிளையாடலே இது’ என்றார். இறைவனின் திருவிளையாடலால் மனம் நெகிழ்ந்த மன்னர் ஈசனுக்கே மகளை மணம் முடித்து வைத்தார். இதனால் ஈசனுக்கு சதுரங்க வல்லப நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

சாமுண்டி தேவி!

மைசூருக்கு அடுத்தபடியாக பூவனூரில் தனிக்கோயில் கொண்டு அருள்புரிகிறாள் அன்னை சாமுண்டி தேவி. சரஸ்வதியாய் இருந்து ராஜராஜேஸ்வரிக்கு ஆய கலைகளையும் கற்பித்தவள். எனவே இவளை வணங்கினால் கல்வியில் உயர்ந்த இடத்தை அடையலாம். அதுமட்டுமின்றி விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் நலம் குன்றியவர்களும் ஞாயிற்றுக் கிழமை தோறும் வேர் கட்டி சிறப்பு அர்ச்சனை செய்ய உடல் பொலிவடையும்.

ராஜராஜேஸ்வரி!

பார்வதி தேவியின் மறு உருவம் ராஜராஜேஸ்வரி. இவரை வழிபடுவதால் அரச பதவி கிடைக்கும். ராஜாங்கம், குழந்தைச்செல்வம், சுற்றம், பொன், நவமணிகள், தானியம், வாகனம், பணியாட்கள் இப்படி அஷ்ட ஐஸ்வர்யங்களை வழங்கக் கூடியவளாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார் ராஜராஜேஸ்வரி.

கற்பகவல்லி

கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பகமரமாக இக்கோயிலில் கற்பகவல்லி எழுந்தருளியுள்ளார். நம்முடைய பொருளாதாரத் தேவைகள் நிறைவேறிட வழிபட வேண்டிய தெய்வம் இவர்.

இப்படியாக முப்பெரும் தேவியரும் இங்கு தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சி முனிவர் விஜயம்!

1947ஆம் ஆண்டு, தஞ்சை பகுதிக்கு திக் விஜயம் செய்த காஞ்சி முனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூவனூர் வந்தார். சதுரங்க வல்லப நாதரையும், சாமுண்டி அம்மனையும் தரிசனம் செய்தார். அப்போது கோயிலில் 48 நாட்கள் நடைபெற்ற அதிருத்ர ஹோமத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

விசேஷங்கள்!

சாமுண்டி சந்நிதியில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சாமுண்டி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக கல்வியில் ஏற்படும் தடைகள் நீங்கிட, வேலைவாய்ப்பு கிடைத்திட சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன. நேரில் வருபவர்கள் அர்ச்சனையில் பங்கு பெறலாம்.

நேரில் வர இயலாதவர்கள் தங்களின் பெயர், நட்சத்திரம், ராசி, என்ன பிரார்த்தனை ஆகிய விவரங்களோடு 100 ரூபாய்க்கு மணியார்டர் அல்லது காசோலையை,

செயல் அலுவலர், அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில், பூவனூர் (அஞ்சல்), நீடாமங்கலம் (வட்டம்) திருவாரூர் மாவட்டம்.

என்ற முகவரிக்கு அனுப்பலாம். அவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

அமைவிடம் :

தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 30வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது நீடாமங்கலம். இங்கிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 4வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது பூவனூர்.

மேலும் விவரங்கள் அறிய தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9655512532

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply