அமுதத்தை ஒளித்த இடம்!: வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும், மந்திரமலையை மத்தாகவும் கொண்டு அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். முதலில் கொடிய நஞ்சு
வெளிப் பட்டதை இறைவன் உண்ட தால் ஈஸ்வரனுக்கு “விடம் உண்ட கண்டன்’ என்றும், திருநீலகண்டன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இதையடுத்து பாற்கடலிலிருந்து அமுதம் வெளிப்பட்டது.
அதில் பாதியைத் தங்களுக்குக் கொடுக்குமாறு அசுரர்கள் வற்புறுத்தினர். “அமுதம் உண்டால் அசுரர்கள் இறவா வரம் பெறுவர். இதனால் ஆபத்து ஏற்படும்’ என்று அஞ்சிய தேவர்கள், இந்தப் பாலைமரக் காட்டில் மறைவான இடத்தில் அமுதக் குடத்தை ஒளித்து வைத்தனர். இறைவனுக்கு பூஜை செய்த பின்புதான் அமுதம் உண்ண வேண்டும் என்று எண்ணிய தேவர்கள், தாங்கள் கொண்டு வந்த அமுதத்தின் ஒரு பகுதியை சிறிய லிங்க வடிவமாக்கி பிரதிஷ்டை செய்தனர்.
அந்த லிங்கத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். இதனால் இறைவன் பால்வண்ணநாதர் என்னும் திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறார்.
அமிர்தலிங்கேஸ்வரர்!: திருப்பாலீஸ்வரர் கோயிலின் நுழைவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் கம்பீரமாகத் திகழ்கிறது.
முன்மண்டபம் அழகாகக் காணப்படுகிறது. பதினாறு கால் மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நந்தியெம்பெருமான் “ஆஹா என்ன அழகு!’ என்று வியக்கும் வகையில் திகழ்கிறார்.
உள்ளே நுழைந்தவுடன் ஸ்ரீநடராஜப் பெருமான் சிவகாமியம்மையுடன் பிரகாசமாய், சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார்.அர்த்த மண்டபம், கருவறைகளுடன்
கஜபிருஷ்டம் என்னும் விமான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாமி பாலீஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரராய், சுயம்புலிங்கமாய் ருத்ராட்சப் பந்தலின் கீழ் காட்சியளிக்கிறார். மூலவர் சந்நிதியில் துவார பாலகர்களுக்குப் பதிலாக ஸ்ரீகணபதியும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளது சிறப்பு.
பிரியாநாச்சி: சுவாமியின் வலப்பக்கத்தில் உள்ள சந்நிதியில் கல்யாணக் கோலத்துடன் அம்பாள் அருள்புரிகிறார். ஸ்ரீலோகாம்பிகா தேவி என்றும் உலகநாயகி என்றும் போற்றப்படும் அம்பாள், அழகு மிளிரக் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி “பிரியாநாச்சி’ என்ற தன் தாயாரின் பெயரை அம்பாளுக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளான் சோழராஜன். அம்பாள் சந்நிதியில் ஸ்ரீசக்கரமும் உள்ளது. இது காஞ்சி மகா சுவாமிகள் இக்கோயிலுக்கு விஜயம் செய்தபோது வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அம்பாளை மனமுருகி வழிபடத் திருமணத் தடைகள் விலகும். இக்கோயிலில் பக்தர்கள் சஷ்டியப்த பூர்த்தி சாந்தி பரிகாரம் செய்யும் வழக்கமும் உள்ளது.
ஸ்ரீஆஞ்சநேயர் சந்நிதியும் இக்கோயிலில் உள்ளது. ஸ்ரீதுர்க்கை அபய, சக்கரம் கையில் தாங்கி அநுக்கிரகம் செய்பவளாகக் காட்சியளிக்கின்றாள். பிச்சாண்டவர் அபூர்வக் கோலத்தில் கற்சிலா ரூபமாக அருள்புரிகிறார். இக்கோயிலில் சுந்தர கணபதி, வினை தீர்த்த விநாயகர், கதவிற்கணபதி ஆகிய மூன்று கணபதிகளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளது சிறப்பு.
கல்வெட்டுகள்: கோயிலில் நான்கு மொழிகளில் சுமார் 71 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்குப் பலரும் அளித்த தானங்கள் பற்றி, கல்வெட்டுகளில் தகவல்கள் உள்ளன.
தல விருட்சம்: கோயிலின் எதிரே அமிர்த புஷ்கரணி உள்ளது. இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட சகல பிணிகளும் நீங்கும். ஆலயத்தின் தல விருட்சம் பாலை மரம்.
விசேஷங்கள்: இத்திருக்கோயிலில் அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. குறிப்பாக பிரதோஷ நாளில் பாலீஸ்வரரை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீபாலீஸ்வரரை வழிபட பாலையும் சோலையாகும்.
தகவல்: வெள்ளிமணி