இந்த மனிதப் பிறவி என்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தால் கிடைக்கப் பெற்ற வரப் பிரசாதம். இப்பிறவியின் உன்னதமான நிலைகளை அறிந்து, எவன் ஒருவன் பைரவரின் துணை கொண்டு கர்மவினையெனும் காலத்தை எதிர்கொள்கிறானோ அவனே ஞானத்தைப் பெற்று பிறவிப் பிணியை வென்றவனாகி விடுகிறான். எனவேதான் கால பைரவரின் ஆட்சியைக் கொண்டிருக்கும் காசியில் இறந்தவர்கள் எல்லோருமே மோட்சத்தைப் பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.
பைரவர், நாயை தன் வாகனமாகக் கொண்டுள்ளார். இதற்கான காரணம், ஒரு மனிதனுக்கு பொதுவான குணங்கள் கெட்டிருந்தால் அவனை “நாய்க்குணம்’ பெற்றவன் என சொல்வது வழக்கிலுள்ள ஒன்று. நாய்க்குணம் கொண்டவர்கள் யாரைப் பார்த்தாலும் எரிச்சலுடன் நல்லவன், கெட்டவன் என்றில்லாமல் கத்துவார்கள். தகாத வார்த்தைகளால் சண்டையிடுவார்கள். அதே போலத்தான் நாயும் அனைவரையும் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கும். காக்கையைப் போல் இல்லாமல் தான் மட்டுமே சாப்பிட, மற்ற நாய்களை நெருங்கவிடாமல் கடித்துத் துரத்திவிடும். மிகவும் மோசமாக நடுத்தெருவில், வெட்டவெளியில் நான்கு பேர் பார்க்கும் வகையில் தன் காமத்தை வெளிப்படுத்தும். மோசமான குணமுடைய நாயை அதன் எஜமான் (நாயை வளர்ப்பவர்) எப்படி அடக்கி ஆள்கின்றாரோ, அவருடைய நாயும், அவரையும் அவருடைய வம்சத்தாரையும், அவரது இருப்பிடத்தையும் எல்லா விதமான பயத்திலிருந்தும் எப்படிப் பாதுகாக்கின்றதோ அதுபோலவே பைரவரும் காத்து நிற்பார்.
பைரவரின் உருவம் மற்ற எல்லாத் தெய்வங்களில் இருந்தும் முற்றிலுமாய் மாறுபட்டது. சிவந்த நெருப்பு ஜுவாலைகளுடன் திகழும் சடையும், ஒரு கையில் கபாலமும், ஒரு கையில் சூலமும், ஒரு கையில் கதையும், ஒரு கையில் நாகமும், இடுப்பில் நாகத்தையும் கொண்டவர் அவர். மாயைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராய் நிர்வாண கோலத்துடன், கோரைப் பற்களுடன், பொன் மேனியராய், கனல் பார்வையும் கொண்டவர் ஸ்ரீபைரவர்.
ஸ்ரீகால பைரவருக்கு “க்ஷேத்திர பாலகர்’ என்ற பெயரும் உண்டு. “க்ஷேத்திரத்தைக் காப்பவர் பைரவர்’ என்று பொருள். இதனால்தான் பண்டைய காலத்திலிருந்தே இரவில் கோயில்களின் சந்நிதிகளை சாத்திவிட்டு, சாவியை பைரவரிடம் வைத்துவிட்டு, மறுநாள் காலை பைரவரை வணங்கி சாவியை எடுத்து பிறகுதான் சந்நிதிகளைத் திறப்பது வழக்கம். இன்றும் பல சிவாலயங்களில் இந்த வழக்கம் உள்ளது.
ஸ்ரீகால பைரவர், அசிதாங்க பைரவர், குருபைரவர், குரோதபைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சண்ட பைரவர், சம்ஹார பைரவர், ஊர்த்துவ வடுக பைரவர், ஸ்வம்புநாத பைரவர், க்ஷேத்ர பால பைரவர், சட்டநாத பைரவர் மற்றும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் – இப்படி அறுபத்து ரூபங்களை உடைய பைரவர்களில் மேலே சொன்ன பதினா ன்கு பைரவ மூர்த்திகளைத்தான் காலப்போக்கில் குறிப்பாக வழிபடுகிறார்கள்.
“பராக்யம்’ என்ற நூல் பைரவர் வழிபாட்டையும், அஷ்ட பைரவர்களைப் பற்றியும் அவர்களுக்கு உண்டான சக்தி தேவதைகளைப் பற்றியும் மிக விளக்கமாகக் கூறியுள்ளது.
அஷ்ட பைரவர்கள் :
ஸ்ரீ அசிதாங்க பைரவர் – பிராம்ஹி
ஸ்ரீ குரு பைரவர் – மாகேஸ்வரி
ஸ்ரீ சண்ட பைரவர் – கெüமாரி
ஸ்ரீ குரோத பைரவர் – வைஷ்ணவி
ஸ்ரீ உன்மத்த பைரவர் – வாராஹி
ஸ்ரீ கால பைரவர் – இந்திராணி
ஸ்ரீ பீஷண பைரவர் – சாமுண்டி
ஸ்ரீ சம்ஹார பைரவர் – சண்டிகா.
27 நட்சத்திரக்காரர்களும்
வழிபட வேண்டிய பைரவ தலங்கள்:
அஷ்ட பைரவர்கள் – காசி, சீர்காழி.
சதுர்கால பைரவர்கள் – திருவிசநல்லூர் (கும்பகோணம் அருகில்)
சதுர்கால பைரவர்கள்
இவர்களை த்ரேதாயுகம், கிருதயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகத்துக்குமான பைரவர்கள் என்றும், சதுர்கால பைரவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவர்கள் நால்வரும் ஏழரைச் சனி நடப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தில் வரும் நான்கு ஏழரை சனியிலிருந்தும் காப்பாற்றுகிறார்கள். சதுர்கால பைரவர்களை வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் தரிசிப்பது மிகவும் உகந்தது.
ஸ்ரீ கால பைரவரை ஆராதிக்கும் வழியும், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும்!
நவகிரகங்களின் பெயர்ச்சியால் துன்பம் ஏற்படும்போதும், மனதில் தேவையில்லாத பயம் குடி கொண்டிருக்கும்போதும் பைரவருக்கு செவ்வரளி அல்லது சிகப்பு ரோஜா புஷ்பங்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் அவை விலகும்.
குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் சதுர் கால பைரவர்களுக்கு சிவப்பு அரளியால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் மழலை பாக்கியம் கிடைக்கும்.
வளர்பிறை அஷ்டமியில் மாலை நேரத்தில் வில்வ இலைகளாலும், இதர வாசனை மலர்களாலும் அஷ்டோத்திரம் அல்லது சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, 11 மிளகுகளை ஒரு சிறு வெள்ளைத்துணியில் கட்டி நல்லெண்ணையோ அல்லது பசும் நெய்யோ விட்டு அகல் விளக்கு ஏற்றினால் வறுமை நீங்கும். இதைத் தொடர்ந்து 11 அஷ்டமிகள் செய்ய வேண்டும். இதனால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்.
பைரவர், சனி பகவானுக்கு குரு என்பதால் சனிக்கிழமைகளில் நான்கு விளக்குகள் ஏற்றி, அரளி அல்லது ரோஜா சாற்றி வழிபட்டால் ஏழரையாண்டு சனி, அஷ்டமத்து சனி, கிரக உபாதைகள் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள் கிழமைகளில் பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்து, வடை மாலை, புஷ்பம் சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் மகன் அல்லது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
பைரவ சகஸ்ர நாமத்தை செவ்வாய்க்கிழமைகளில் ஒன்பது முறை அர்ச்சனை செய்து தயிர்சாதம், தேங்காய், தேன், வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பில்லி, சூனியம் போன்றவை அகலும்.
தேய்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவர்களுக்கு பைரவர் ஹோமம், அஷ்டகலச அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை அருந்தினால் தீராத மனநோய், சித்த பிரமை போன்ற நோய்கள் நீங்கும்.
வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் (சிறிய வெள்ளியில் ஆன காசுகள் அல்லது ஒரு ரூபாய் நாணயம்) அர்ச்சனை செய்து அந்தக் காசுகளை வீட்டிலோ, தொழில் புரியும் அலுவலக பணப்பெட்டியிலோ வைத்தால் சதுர்கால பைரவர்கள் செல்வச் செழிப்பை ஏற்படுத்துவார்கள்.