“அணைத்தெழுந்த பிரான்’ என்ற அந்த அற்புதத் திருக்கோலம், வேறு எந்தத் திருத்தலத்திலும் நாம் காணக் கூடியது அல்ல. இந்த “சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி’யை வழிபட்டால் தடைபட்டு நிற்கும் திருமணம் விரைந்து கைகூடும். குறிப்பாக, பிணக்குகளால் பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் விரைவில் இணைந்து வாழ்ந்திட இறையருள் கிட்டிடும்.
3 8 ஆண்டுகளுக்குப் பிறகு, திருவாவடுதுறை அருள்மிகு சோமுக்தீசுவரர் ஆலயத்தில் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. இத்தருணத்தில் கோகழிநாதரின் சிறப்புக்களைச் சிறிது அறிந்து கொள்வோமே!
கோகழி, கோமுக்தி நகர், நந்தி நகர், நவகோடி சித்திபுரம், அரசவனம், முக்தி úக்ஷத்திரம், அகத்திய புரம், சிவபுரம், பிரமபுரம், துறைசை, கஜாரண்யம், தரும நகர் என்று வேறு பல காரணப் பெயர்களையும் கொண்டுள்ள தலம்தான் திருஆவடுதுறை. இதன் தல புராணம், “துறைசைப் புராணம்’ என்றழைக்கப்படுகிறது.
மயிலாடுதுறை} கும்பகோணம் சாலையில், நரசிங்கம் பேட்டைக்கு முன், இடதுபுறம் சாலையில் உள்ள ஆதீன வளைவின் வழியேயும், (கும்பகோணம் தடத்தில் உள்ள) திருவாலங்காடு எனும் தலத்தில் இறங்கி, (1 கி.மீ.) குறுக்குச் சாலை வழியேயும் கோமுக்தீசுவரர் ஆலயத்தைச் சென்றடையலாம். காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்த தேவாரத் திருத்தலம் இது. மயிலாடுதுறையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பதிகம் பெற்றது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெற்றது. திருமந்திரம், திருவிசைப்பா, திருவாசகம், பெரியபுராணம் ஆகிய நூல்கள் இத்தலத்தின் சிறப்பைப் போற்றுகின்றன. திருமூலர், “திருமந்திரம்’ என்னும் திருமுறையை இத்தலத்தில்தான் படைத்தருளினார்.
ஆதீன திருமடம்
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இத்திருக்கோயிலையொட்டியே, திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனமும், திருமடமும் அமைந்துள்ளது. திருமடத்தின் நூலகம் பல அரிய நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும் கொண்டுள்ள கருவூலம் ஆகும். ஆதீனத்து “சரசுவதி மகால்’ நூலகத்தின் மூலம், பல எண்ணற்ற அரிய நூல்களை வெளியிட்டுள்ள பெருமை திருமடத்தையே சாரும்.
அதுமட்டுமல்ல…. திருவாவடுதுறை ஆதீனம், இருபத்தி மூன்றாவது குரு மகாசன்னிதானம், சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் அருளாட்சிக் காலத்தில், ஆதீனத்திற்கு சொந்தமான அத்தனைத் திருக்கோயில்களிலும் திருப்பணிகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டு, குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இது ஆன்மிக அன்பர்களை மகிழ வைக்கும் செய்தியாகும்.
பசுவாய் வந்தனன்!
தேவர் உலகில் பரமனுக்கும் பரந்தாமனுக்குமிடையே “சொக்கட்டான்’ ஆட்டம் நடைபெறுகிறது. நடுவராக அமர்ந்தது, அன்னை பராசக்தியே! விறுவிறுப்பான ஆட்டம்! ஒரு புறம் மணாளன் மகேசன்! மறுபுறம் சோதரன் மாலவன்! பகடைகள் உருளுகின்றன. எண்ணிக்கையில் பிரச்சனை உருவாக, அன்னை பகடையைச் சிறிதே நகர்த்தினாள்.
அண்ணனுக்காக நெறி தவறியதால் பசுவாக மாறி பூவுலகில் திரியும்படி அன்னையிடம் ஆணையிடுகிறார் ஈசன். உடனே தெய்வப்பசுவாக பூமிக்கு வந்தாள் அன்னை. பல தலங்களை வலம் வந்தாள். மாதவனும் இடையனாக மாறி, சோதரிக்கு துணையாகத் திரிந்தான். இந்த நெடிய பயணம் தேரழுந்தூரில் துவங்கியது. தொழுதாயங்குடி எனும் தலத்தில் பசு மந்தையோடு சில காலம். அடுத்து, அசிக்காடு எனும் தலம்! அங்கே பொன்னே வடிவாக அமைந்திருந்த ஈசனின் திருமேனியில் தனது ஆபரணங்களை சார்த்தினாள் அன்னை. கோமல் எனும் தலத்தைக் கடந்து நச்சினார் குடியை அடைந்தாள். மாதவன் மாட்டுமந்தையை மேய்த்தது மாந்தை எனும் தலத்தில்! அடுத்து திருக்கோழம்பம் எனும் தலத்தைக் கடந்து, நந்தி புரத்தை அடைந்தாள்.
திருக்குளத்தில் நீராடியபின் கரையேறி, அங்கிருந்த அரச மரத்தடிக்குச் செல்கையில், ஈசனை துதிக்கிறாள் பசுவடிவிலான, அன்னை! அங்கே, தானே முளைத்தெழுந்த ஈசனின் திருமேனி மீது பாலைப் பொழிந்தாள். இதனால் மகிழ்ந்த சிவபெருமான், உடனே காட்சி தந்தருளினார்.
“அணைத்தெழுந்தபிரான்’
பசு வடிவில் பல தலங்களை வலம் வந்து, பெருமானுடன் இணையாது பிரிந்திருந்த அன்னைக்கு, ஈசனோடு இணைகின்ற “முத்தி’ இங்கே கிட்டுகிறது. பசுவிற்கு முத்தி தந்த ஈசனாக “கோமுக்தீசுவரராக’ எம்பெருமான் திருவாவடுதுறையில் காட்சி தந்து, அன்னையை ஆரத் தழுவிக் கொண்டார். அப்போது அன்னையை தழுவிக் கொண்ட மகாதேவரே, “அணைத் தெழுந்த பிரான்’ என்று அழைக்கப்படுகிறார்.
அம்பிகை ஒயிலாக நிற்க, அவளது தோளில் கரத்தை வைத்து அணைத்துக் கொள்வதற்கேற்ப இடுப்பை வளைத்துள்ள கோலம், அற்புதமானது! ரத சப்தமியன்று, குளத்தருகே எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார், அணைத்தெழுந்த பிரான்தான், ஜீவகோடிகளாகிய “பசு’க்களுக்குப் பதி என்பது அப்புறம்! அம்பிகைக்குதான் முதல் “பதி’ அதாவது, உயிர்த் துணைவன் என்று உலகிற்குக் காட்ட நினைத்த பசுபதியாகிய பரமேஸ்வரன், ஆடிய திருவிளையாடல் இது.
திருக்கோயில் அழகு
திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் திருக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள பெரிய கோயில் ஆகும். ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. வடக்குப் புற நுழைவாயிலில், புதிதாக 3 நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது.
கோமுக்தி தீர்த்தம், திருக்கோயிலுக்கு முன்பு உள்ளது. அருகிலேயே தல விருட்சமான அரச மரம் உள்ளது. நடராஜர் சபை, போதியம்பலம் எனும் அரசம்பலம் ஆகியனவும் உள்ளன. தேவர்கள் வேண்டியதற்கேúற்ப இறைவன் அரசமரத்தின் நிழலில் அமர்ந்து, அம்பலத்தில் தாண்டவம் ஆடியதால் “அரசம்பலம்’ என்று இவ்விடம் பெயர் பெற்றது.
புத்திர தியாகேசர்
முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அருளி, “சுந்தர நடனம்’ ஆடியருள் செய்த கோலமே, “புத்திர தியாகேசர்’ கோவம் ஆகும். போகர் முதலான நவகோடி சித்தர்களுக்கு அட்டமா சித்திகளை அருளிய பெருமையுடைய தலம் இதுவே!
நந்தித்தலம்
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் திருக்கோயில்களின் பரிவாரத் தலங்களில், நந்தித் திருத்தலமாக விளங்குகிறது திருவாவடுதுறை. அதற்கேற்ப இங்கே எழுந்தருளியுள்ள நந்தி, மிகப் பெரியது. இது நந்தியெம்பெருமானின் உடலமைப்புக் கேற்ப வடிவமைக்கப்பட்ட கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட மிக வித்தியாசமான நந்தியாகும். இதனை “விஸ்வரூப நந்தி’ என்பர்.
இத்தலத்தில் வாழ்ந்திருந்த திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனின் படைகளை அழித்திட, அதுல்ய குஜாம்பிகை, மதில்களிலிருந்த நந்திகளையெல்லாம் சேர்த்து ஏகநந்தியாக்கி அனுப்பினாள் என்கிறது தலபுராணம். அதனால் திருமதிலில் நந்திகள் இல்லை.
கோகழி நாதர்
கருவறையில், அணைத்தெழுந்தபிரான், “கோகழிநாதர்’ சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். ஆவின் வடு திருமேனி மீது காணப்படுவதால், திரு ஆவடு துறை எனப் பெயர் கொண்டது இத்தலம். போதியம்பலவாணர், மகாதாண்டவேசுவரர், கோமுக்தீசுவரர், பூஜைவாசேசுவரர், ஸ்வயம்வியக்தேசுவரர் (தானே முளைத்தெழுந்தவர்) என்று வேறு திருநாமங்களும் கொண்டவர். கம்பீரமான திருமேனியை பட்டாடை கொண்டு அலங்கரித்து, ஐந்து வகை மலர்மாலை கொண்டு அழகூட்டி, நாகாபரணமும் அணிவித்து, அலங்கார தீப ஒளியில் தரிசித்திட கோடி புண்ணியம் செய்திட வேண்டும்.
ஒப்பிலா முலையம்மை
தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளாள் “அதுல்ய குஜாம்பிகை’. “ஒப்பிலா முலையம்மை’ என்று இத்தேவியை அழைக்கின்றனர். நான்கு கரங்களோடு அபய வரதம் தாங்கி, நின்ற கோலத்தில் காட்சி தரும் கருணையே வடிவானவள். திருமாளிகைத் தேவர் வாழ்ந்த இடமே ஆதீனம் ஆகும். அங்கு நமசிவாயமூர்த்திகள் திருக்கோயிலும், திருமாளிகைத் தேவர் ஆலயமும் உள்ளன.
திருமூலர்
திருக்கோயிலின் மேற்குத் திருச்சுற்றில் “திருமூலர்’ சந்நிதி உள்ளது. ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைத் திருமந்திரமாகத் தொகுத்து இப்பூவுலகிற்கு வழங்கிய திருமூலர் சந்நிதி, நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஐப்பசி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
துணை வந்த விநாயகர்
பசு வடிவில் இருந்த உமையம்மைக்கு துணையாக வந்ததால் இத்தலத்தில் துணை வந்த விநாயகராகக் காட்சி தருகிறார் கணபதி.
படிக்காசு
நந்தியெம்பெருமானுக்கு பின்னால் உள்ள பலிபீடமே திருஞானசம்பந்தர் “பொற்கிழி’ பெற்ற பலிபீடம். தனது தந்தையார் நடத்திய வேள்விக்காக, பூதம் வாயிலாக 1000 பொற்காசுகளைப் பெற்ற அதிசயம் இத்தலத்தில் நிகழ்ந்தது.
நால்வர் சந்நிதி
புத்திரத் தியாகேசர் முன்னே, இரு கரங்கூப்பியபடி சுந்தரர் எழுந்தருளியுள்ளதும், நால்வர் பெருமக்களுக்கும், சந்தானக் குரவர்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளதும் இக்கோயிலின் தனிச் சிறப்பு ஆகும். பெரிய புராணத்தை நமக்கருளிய சேக்கிழார் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
குடமுழுக்கு விழாக்கோலம்
நாளது 26-ம் தேதி, புதன் கிழமை, காலை 9.00 மணிக்கு மேல் -10.30 மணிக்குள் இவ்வாலயத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்று, அணைத்தெழுந்த பிரானின் அருளைப் பெறுக!
செய்தி :: https://www.dinamani.com/edition/story.aspx?artid=360722