பழநி – ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில்

முருகன் ஆலயம்

அதனால் அந்தக் கனி தனக்குக் கிடைக்கவில்லையே என்ற காரணத்தாலும், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற வருத்தத்தாலும் தாய் தந்தையிடம் கோபித்துக் கொண்டு, முருகப் பெருமான் மயில் ஏறி இந்தக் குன்றிலே வந்து நின்றார். அவரை சமாதானம் செய்ய, அம்பிகையும், சிவபெருமானும் பின்தொடர்ந்து வந்தனர். எவ்வளவோ சமாதானம் சொல்லியும், முருகப் பெருமான் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லிவிட்டார்.

முருகன் வந்து நின்ற இந்தக் குன்றின்மீது பின்னாளில் அழகிய கோயில் ஒன்றும் எழுந்தது. சுவாமி பாலகனாக இங்கே எழுதருளி, கையில் கோலூன்றி, பால தண்டாயுதபாணி என்னும் திருநாமம் பெற்றார். ஒரு பழத்தைக் காரணமாக வைத்து, முருகன் கோபம் மேலிட இங்கே வந்தபோது, வழிமறித்த அவ்வைப்பிராட்டி, நீயே பழமானவன் (நீயே ஞானவடிவானவன்) பழம் நீ பழத்துக்காக கோபம் கொள்ளலாமா என்று ஆறுதல் சொன்னார். இப்பெயரே மருவி, பழநி என ஆனதாம். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி (மூலவர்) படம் (விஸ்வரூபதரிசனம்).

நவபாஷாண சிலை:

பழநி மலைக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவபாஷாணம் எனும் மூலிகைக் கலப்பால் ஆனது. பதினெண் சித்தர்களுள் முதன்மையானவராகக் கருதப்பட்ட போகரால் உருவாக்கப்பட்டது இந்தச் சிலை. இவரே இந்தச் சிலையை வடித்து பிரதிஷ்டையும் செய்தார். உயிர்ப்புள்ள சிலை என்றும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் இந்தச் சிலையைப் பற்றிச் சொல்லப்படும் பாரம்பரிய அதிசயங்கள். வியர்வை கொட்டுவதால் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்க, கொடுமுடித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். சுவாமிக்கு சாத்தப்படும் ராக்கால சந்தனமும், திருவாடைத் தீர்த்தமும் மருத்துவ குணம் மிகக் கொண்டவை.

உத்ஸவர் திருப்பெயர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இந்தத் தலம் மூன்றாம் படை வீடாகும். இங்குதான் காவடி எடுக்கும் பழக்கம் முதன்முதலில் ஏற்பட்டதாம். பழநிக்குக் காவடி தூக்கி, வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள். பழநியின் இன்னொரு சிறப்பு, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்குபெறும் பழநி பாதயாத்திரை விழா. இது ஒரு திருவிழாவாகவே இங்கு நடைபெறுகிறது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி(மூலவர்) இராஜஅலங்காரம்.  பழநியின் பெருமை:

அகத்தியரின் ஆணையை ஏற்று, இடும்பன் சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை தென்பொதிகைக்குக் கொண்டு செல்வதற்காக எடுத்து வந்தான். வழியில் இந்தத் தலத்துக்கு வந்தபோது, பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான்.

திருஆவினன்குடியில் இருந்த முருகன் சிவபிரானின் அம்சமான சிவகிரியை விடுத்து, அம்பிகை அம்சமான சக்திகிரியில் ஏறி நின்றார். இடும்பன், அவரை அங்கிருந்து இறங்கும்படி சொல்ல, முருகனோ அதைக் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்த்தான். ஆனால், தன் கருணையால் முருகப் பெருமான் அவனைத் தன் அடியவனாக்கி, அருகில் இருத்திக் கொண்டார். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், தண்டாயுதபாணி என்று பெயர் பெற்றார். முருகனின் இந்தக் காட்சி, ஞானப் பாடத்தைக் கற்பிக்கும் ஞானாசிரியராக இருப்பதைக் காட்டுகிறது.

மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகப் பெருமான் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரைப் பழிவாங்க நினைத்தான்.

ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிடச் செய்தான். அருணகிரியார்,கூடு விட்டு கூடு பாயும் வித்தை அறிந்திருந்ததால், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார்.

இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து கிளி உருவத்திலேயே தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இதன் காரணமாகவே தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன் காட்சி தருகிறார்.

முருகனிடம் இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் முருகனின் உதவிக்கு வந்தார். தம்பிக்கு தன் மீது வருத்தம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில் வந்து, இடும்பனுடன் சண்டையிட்டார்.

அருள்மிகு சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.இந்த விநாயகர் மலைக்கோயிலுக்கு ஏறும் வழியில், இடும்பன் சந்நிதி அருகில் சர்ப்பத்தின் மீது காலை ஊன்றி காட்சி தருகிறார். இவருக்கு, சர்ப்பவிநாயகர் என்று பெயர். மலை அடிவாரத்தில் பாதவிநாயகர் காட்சிதருகிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும்.

திருவாவினன்குடி என்ற பழைமையான பெயர் கொண்டு திகழும் திருத்தலம் பழநி. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தட்சிணாமூர்த்தி, பிராகாரத்தில் பைரவரும், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.

பழநிக்குச் செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., தொலைவிலுள்ள பெரியாவுடையாரை தரிசித்து, பெரியநாயகியையும், அடுத்து, மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலனையும் வணங்கிய பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும்.

ஆவினன்குடி அழகனை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலத்துக்கு இப்படி ஒரு பெயர் ஏற்பட்டதாம்.

பழநி மலைக்கோயில் உற்சவர் அருள்மிகு சின்னக்குமாரர்.  பழநி மலையின் வடபுறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர்.

இந்தப் புனித நீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது வழிவழியாக வந்த நம்பிக்கை. பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளி சுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக் கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள்.

பழநி தலத்தில் முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வித்தியாசமானதும் சிறப்பானதும் ஆகும். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயில் தண்டாயுதபாணி சுவாமிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சந்தியாகால பூஜையின்போதும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அடுத்த இரண்டு நாள்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகள் உள்ளன. இங்கே இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது.

தினமும் அதிகாலை 3 மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5 மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் உள்ள முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி எடுக்கும் பக்தர்கள் இந்த சந்நிதியில் பூஜை செய்த பின்பே எடுத்துச் செல்கின்றனர். இங்கே, குரு அகத்தியரும் உள்ளார். அதனால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. அகத்தியரே இதனைத் தருவதாக நம்பிக்கை. இந்தத் தீர்த்தத்தைப் பருகிட நோய்கள் நீங்குமாம்.

பழநி மலைக்கோயில் தங்கத்தேரில் உத்ஸவர் அருள்மிகு சின்னக்குமாரர்.பழநியின் சிறப்பு தைப்பூசத் திருவிழாதான். இந்த விழா, பெரியநாயகி அம்மன் கோயிலில் நடக்கிறது.

விழாவின்போது, உத்ஸவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருள்வார். விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதிவுலா செல்கிறது.

ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தில் முருகப் பெருமானையும் ஒரு பங்குதாரராக வைக்கின்றனர். தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகனுக்குத் தந்து விடுகின்றனர்.

சித்தர் போகரின் சமாதி இந்தக் கோயிலுக்குள் அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.

பழநி என்றாலே இங்கே தரப்படும் பிரசாதமான பஞ்சாமிர்தம்தான் நினைவுக்கு வரும். இது உலகப் புகழ் பெற்ற ஒன்று.

இங்கே தினந்தோறும் தங்கத் தேர் இழுத்தல் சிறப்பானது. இதன்மூலம் வருவாயும் அதிகம். தமிழகக் கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் கோயில் பழநிதான்.

பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச், ரோப் கார் வசதிகள் உள்ளன. திண்டுக்கல்லில் இருந்து 56 கி.மீ., மதுரையிலிருந்து 120 கி.மீ., கோவையிலிருந்து 115 கி.மீ. தொலைவில் உள்ளது பழநி.

பழநி தலத்தின் தலவிருட்சம் நெல்லி மரம். தீர்த்தம்-சண்முக நதி. அருணகிரிநாதர் பழனி முருகப்பெருமானை திருப்புகழ் பாடிச் சிறப்பித்துள்ளார். நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி அழகனைப் பாடியுள்ளார்.

இங்கே, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகன் தொடர்பான திருவிழாக்களே முக்கியமான திருவிழாக்கள். முருகனுக்குக் காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர்.

திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

கோயில் தொடர்புக்கு: 04545  242 293 / 242 236

 

Leave a Reply