ஸ்ரீ நாராயண பட்டத்ரி எழுதிய புகழ் பெற்ற நூல், “ஸ்ரீமந் நாராயணீயம்’. அந்நூலில், “சிருஷ்டியின் ஆறா வது மன்வந்தரத்தின் முடிவில், பகவான் மத்ஸ்யாவதாரம் செய்ததாக’ நம்பூதிரி வர்ணிக்கிறார்.
ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்ததே ஒரு மன்வந்தரமாகும். ஒவ்வொரு மன்வந்தரமும் முடியும் நேரத்தில் ஒரு பிரளயம் (பேரூழிக் காலம்) ஏற்படுமாம். அத்தகைய பிரளயம், ஆறாவது மன்வந்தரத்தின் முடிவிலும் ஏற்பட்டது. பொதுவாக ஒரு மன்வந்தரத்தின் முடிவில்தான் படைப்புக் கடவுளான நான்முகன் ஓய்வெடுப்பாராம். அவ்வாறு அவர் ஓய்வெடுக்கும் தருணத்தில், “ஹயக்ரீவன்’ (சோமுகாசுரன் என்றும் சொல்வது உண்டு) என்ற அசுரன், அவருடைய வாக்கிலிருந்து வேதங்களைத் திருடிவிட்டான். (பிரம்மதேவனுடைய வாக்கிலிருந்து வேதத்தை அபகரிப்பது என்பது அவருடைய வாக்கிலிருந்து வரும் வேத சப்த உச்சாரணத் திறனைக் கவர்வது).
அசுரனை அழித்து, வேதங்களை திரும்பவும் பிரம்மனிடம் ஒப்படைக்கத் திருவுள்ளம் கொண்டார் பகவான். உடனே பிரம்மாண்டமான “மச்ச’ உருவம் எடுத்தார். ஏனெனில் வேதங்களைக் கவர்ந்த அசுரன், ஆழ்கடலில்தான் சென்று பதுங்கியிருந்தான்.
திருமால், மீனாக அவதரிக்க வேறொரு காரணமும் இருந்தது. சத்தியவரதன் என்ற அரசனுக்கும், அவனைப் போன்ற மற்ற பக்தர்களுக்கும் பிரம்ம ஞானத்தை உபதேசிப்பதற்காகவும் இந்த மத்ஸ்யவதாரம் காரணமாக அமைந்தது. இதை ஸ்ரீமத் பாகவத புராணம் இயம்பும்.
திருமாலின் இந்த “மத்ஸ்ய’ அவதாரத்தை திருமங்கையாழ்வார் தன்னுடைய பெரிய திருமொழியில் “”மீனோடு ஆமை கேழல்” என்று தொடங்கும் திருக்கண்ணபுர பாசுரத்தில் பாடியுள்ளார். சுவாமி தேசிகன், தன்னுடைய தசாவதார ஸ்தோத்திரத்தில் மத்ஸ்யவதார வர்ணனையில், “”பகவான் பெரிய மீன் வடிவுடன் கடலினுள் புகுந்து, அசுரன் ஒளித்து வைத்த வேதங்களைத் தேடினார். பிறகு அசுரனைக் கண்டு, கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்தார்” என்பார்.
ஸ்ரீஜயதேவஸ்வாமிகள், தான் இயற்றிய கீதகோவிந்தத்தின் முதல் அஷ்டபதியில்
“”பிரளய பயோதி ஜலே த்ருத வாநஸி வேதம்
விஹித வஹித்ர சரித்ரம் அகேதம்
கேசவ! த்ருத மீன சரீர! ஜய ஜகதீச ஹரே!
ஹரே முகுந்த ஜயஜகதீச ஹரே!” என்று பாடியுள்ளார். இதன் பொருள், “பிரளய காலத்தில் மீனுருவை எடுத்து படகு போல் எளிதில் கடலில் சஞ்சரித்து, மூழ்கி, கடல் நீரிலிருந்து வேத சப்தங்களை மீட்டுக் காத்தருளினாய்! ஓ கேசவனே! ஜகதீசனனே! “ஹரியே’ நீர் வெல்க!’ என்பதாகும்.
திருமால் மச்ச அவதாரம் எடுத்து வேதங்களை மீட்ட நாளை “மத்ஸய ஜெயந்தி’ என்று கொண்டாடுவது மரபு. முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.
16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர்தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.
இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.
ஸ்ரீ வேத நாராயண சுவாமி ஆலயம், திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் சிறப்புற நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை.
அபூர்வமான இத்திருத்தலம், திருப்பதிக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் உள்ளது. “சுருட்டப்பள்ளி’ சிவன் ஆலயத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அடியார்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம்.
ஆலயத்தைப் பற்றி மேலும் தகவல்கள் அறிய ஆலயத்தைச் சேர்ந்த நாகராஜ பட்டாச்சாரியாரை தொலைபேசி எண் 08576-270704-ல் தொடர்பு கொள்ளலாம்.
செய்திக் கட்டுரை: தினமணி- வெள்ளிமணி