தில்லைச் சிற்றம்பலம் : சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம்

சிவ ஆலயம்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது. இங்கே மூலவர் சுயம்புமூர்த்தி. ஆனால், சிற்றம்பல நடராஜப் பிரானே இங்கே முக்கியமான மூர்த்தி. மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களைக் கண்டெடுத்த தலமும் இதுதான்.

சிதம்பரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர், திருநாளைப்போவார் என்றழைக்கப்பட்ட நந்தனார். அவர் சிவபிரானின் பாதத்தை அடைய அக்னிக் குண்டத்தில் இறங்கிய தலமும் இதுதான்.

இத்தலம், தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றதாம். நடராஜர் சந்நிதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சந்நிதிக்கு மிக அருகில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி கொண்டிருப்பது மிக விசேஷமான ஒன்று. பிரம்மாண்டமான சிவத்தலமான இது, கோயில் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இறைவன் இங்கே, நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார்.

கலைகளின் நாயகனாக சிவபிரான் நடனக் கலையை உணர்த்தும் வண்ணம் காட்சி தருகிறார். நடனக் கலை நாயகனாக இவர் திகழ்வதால், கலைகளில் தேர்ச்சிபெற விரும்புவோர் இங்கே பிரார்த்தனை செய்தால், அவர்கள் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர்காலம் அமையும்.

பிரார்த்தனை நிறைவேறப் பெற்ற பக்தர்கள், இங்கே பல வித நேர்த்திக் கடன்களைச் செய்கிறார்கள்.சுவாமியின் பாதுகையை வெள்ளிதங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து நடராஜரின் அருகில் வைத்து, பால், பழம், பொரி நிவேதனம் செய்து, தீபாராதனை செய்கிறார்கள். இதற்கு திருவனந்தல் என்று பெயர். சுவாமிக்கு வழக்கமான முறையில் அபிஷேகம் செய்துவைக்கலாம். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் போன்றவையும் செய்யப்படுகின்றன.

சிதம்பர ரகசியம் :

சிற்சபையில் சபாநாயகரின் வலப்புறம் சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படும். இதனுள் திருவுருவம் ஏதும் தெரியாது. தங்கத்தால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. மூர்த்தி இல்லாது வில்வதளம் தொங்குவது, இறைவன் இங்கே ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயம் எல்லை அற்றது. தொடக்கமும் முடிவும் இல்லாதது.  அதுபோல் எல்லையற்ற இறைவனை உணரத்தான் முடியும் என்பதே சிதம்பர ரகசியம் சொல்லும் விளக்கம். சித்அம்பரம்  சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி.

தேவாரப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தலமும் இதுதான். திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பியும், திருமுறைகண்ட சோழனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொள்ளாப் பிள்ளையாரை வணங்கி, அவர் அருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தருகே மூவரின் திருக்கர முத்திரையோடும் தேவார ஏடு உள்ளதென அறிந்தனர். அதன்படி இங்கே வந்து, தேடியபோது கரையான் புற்றுக்குள் ஏடுகள் கிடைத்தன. அவற்றை எடுத்து பத்திரமாக வைத்து, பின்னர் தொகுக்கப்பட்டதே தேவாரப் பதிகங்கள்.

நால்வர் இத்தலத்தில் எழுந்தருளியபோது நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்தனர் என்கின்றனர். கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் தெற்கில் ஞானசம்பந்தரும், மேற்கில் அப்பரும், வடக்குக் கோபுரம் வழியாக சுந்தரரும் சென்று சிற்சபையில் இறைவனை தரிசித்துள்ளனர். சிதம்பரத்தின் தேரோடும் வீதிகளில் அப்பர் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இத்தலத்தின் முருகப்பெருமானை அருணகிரிநாதர் பத்து திருப்புகழால் பாடிப் பரவியுள்ளார்.

இத்தலத்தின் மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதராக அருள்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோர் கயிலையில் தாங்கள் கண்ட சிவபிரானின் நாட்டியத்தை, பூலோகவாசிகளும் கண்டு மகிழ விரும்பி ஆதிமூலநாதரை வேண்டினர். அதனை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனிவர்களை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தை பூசத்தில் பகல் 12 மணிக்கு நடன தரிசனம் தந்தார். திரிசகஸ்ர முனிவர்களையே தில்லை மூவாயிரவர் என்பர். மனித உருவ அமைப்புக்கும், தங்கத்தாலான நடராஜர் சந்நிதிக்கும் ஒற்றுமை உண்டு.

பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும். பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கும். கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள நவ துவாரங்களைக் குறிக்கும்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளனவாம்.

மார்கழித் திருவிழா – 10 நாள்கள் நடைபெறும்.

திருவாதிரை உத்ஸவம் இத்தலத்தில் மிகவும் விசேஷம். பத்து நாட்களிலும் சாயங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமி சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடி சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். ஆனித் திருமஞ்சனம் பத்து நாள்விழா களைகட்டும். சித்திரை வருடப்பிறப்பு, தமிழ் மாதப்பிறப்புகள், பிரதோஷம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பெüர்ணமி ஆகிய நாட்களில் விழாக்கோலம்தான்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்துக்கு பஸ் வசதி உள்ளது. நகரின் நடுநாயகமாக சபாநாயர் கோயில் அமைந்துள்ளது. தலத்தின் மூலவர் திருமூலநாதர். அம்மன்- உமையாம்பிகை(சிவகாமசுந்தரி). தில்லைமரமே தல விருட்சம்.

 

Leave a Reply