54 aligncenter" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/chennaimalai-murugar.jpg" alt="" width="642" height="364" />
விசாகத் தலைவன் சண்முகத் தெய்வத்தை கந்தக் கோட்ட கடவுளை வள்ளலார் தன் திருவருட்பாவில் போற்றும் ஸ்தோத்திரம். ஒரு நான்கினை மட்டுமே இங்கு தந்துள்ளோம்.
எல்லா பலனையும் அளிக்கும் முருகவேளை போற்றி வேண்டுவன இது என வள்ளலார் கேட்கும் உயரிய இவற்றை கேட்டு அதன்படி வாழ்வோம்
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
. எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
என்உயிர்க் குயிராகும்ஓர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமேநன்
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
மூர்த்தியே முடிவிலாத
முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமைமகனே
பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
பற்றருளி என்னைஇந்தப்
படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாமல் ஆண்டருளுவாய்
சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
நாடாமை ஆகும்இந்த
நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
நாய்வந்து கவ்விஅந்தோ
தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
தளராமை என்னும்ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த்தருளுவாய்
வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
மழையே மழைக்கொண்டலே
வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
மயில்ஏறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே