தேவர்மலை ஸ்ரீநரசிம்மர்: சிங்கக் குகையில் சீரான விழா!

ஆலய தரிசனம்

திருமாலின் காக்கும் தன்மை தெளிவாக வெளிப்பட்ட அவதாரம் “நரசிம்ம அவதாரம்’. மற்ற அவதாரங்களில் திருமால் ஒரு குறிக்கோளுடன் உலக நன்மைக்காக அவதரித்து, அந்த அவதார நோக்கம் முடிந்ததும் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளினார். ஆனால் ஸ்ரீநரசிம்மரோ அவதரித்த தினம் முதல் இன்று வரை எங்கும் எதிலும் வீற்றிருந்து இவ்வுலகைக் காத்தருளுகிறார். இப்படி நரஸிம்ஹ ரூபத்துடன் திருமால் திருக்கோயில் கொண்டு அருள்புரியும் தலங்களில் ஒன்றுதான் தேவர்மலை.

மலை எனப்படுவதால் இங்கு ஏதாவது மலை உள்ளது என்றோ அதன் மீது பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது என்றோ நினைக்க வேண்டாம். நரசிம்ம அவதாரத்தின் போது, இரண்ய வதம் முடிந்த பின்னும் உக்கிரம் சிறிதும் குறையாமல் இருந்த இறைவன் நிலைகொள்ளாமல் திரிந்தார்.

அவரது உக்கிரத்தைத் தணிப்பதற்காக தேவர்கள் ஒன்றுகூடி இறைவனை மறித்து சாந்தப்படுத்திய இடம்தான் “தேவர் மறி’. அதுதான் பிற்காலத்தில் மருவி “தேவர்மலை’ ஆனது. இங்கே எம்பெருமான் உக்கிர ரூப மூர்த்தியாய் விளங்கிய போதிலும் ஒரு திருக்கரம் அபய ஹஸ்தமாக விளங்குகிறது. மற்றொன்றில் யோக முத்திரை காட்டியருளும் நரசிம்மர், பின்னிரு கரங்களில் சங்கு சக்கரதாரியாய், இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார்.

இந்தத் திருக்கோலத்தைக் காணக் கண் கோடி வேண்டும். சற்று உற்று நோக்கினால் திருமுகமண்டலத்தில் மூன்றாவது கண் இருப்பதையும், புன்னகை பூத்த வதனத்தையும் சேவிக்கலாம். நரசிம்ம அவதாரம் பற்றிக் குறிப்பிடுகையில் “சிங்கம் சிரித்தது’ (சிரித்தது செங்கச் சீயம்) என்பார் திருமங்கையாழ்வார். அந்த வாக்கியம் முற்றிலும் இந்தப் பெருமானுக்குப் பொருந்தும். இத்திருத்தலத்தில் கமலவல்லி என்னும் திருநாமத்துடன் தாயார் சந்நிதி அமைந்துள்ளது.

இத்துடன் லட்சுமி நாராயணருக்கும், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மகான்களுக்கும் தனித்தனியே சந்நிதிகளும், திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் விசேஷமாக பைரவர் சந்நிதியும் இருக்கின்றன. இத்திருத்தலத்தில் உள்ள “மோட்ச தீர்த்தம்’ என்னும் திருக்குளம் மிகவும் புனிதமானது. சகல தோஷங்களையும் போக்கவல்லது. இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் ஆலயத்தின் பழமையைப் பறைசாற்றுகின்றன.

பாண்டிய மன்னர்கள் பேராதரவுடன் ஒரு காலத்தில் எந்நாளும் விழாக்கோலம் பூண்டிருந்த இத்திருக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதைக் கண்டு ஆன்மீக அன்பர்கள் வருந்தினர். அவர்களின் துயரத்தைப் போக்குவதற்கு நரசிம்மரே அருள்புரிந்தார். “ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பக்த சபா டிரஸ்ட்’ என்ற அமைப்புக்கு பக்த கோடிகள் உறுதுணையாக இருந்து செயல்பட, திருப்பணி இனிதே நடந்தேறி, குடமுழுக்கு விழாவும் நடக்கவுள்ளது.

இவ்விழாவில் ஆன்றோர்கள் சான்றோர்கள் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குடமுழுக்கை முன்னிட்டு பூர்வாங்க யாகசாலை பூஜைகள் வருகிற 12ஆம் தேதி தொடங்குகிறது.

திருக்கோயில் அமைவிடம்:-

கரூர் – குஜிலியம்பாறை – திண்டுக்கல் மார்க்கத்தில் கரூரிலிருந்து சுமார் 3 0 கி.மீ. தூரத்தில் உள்ள பாளையத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது தேவர் மலை. பாளையத்திலிருந்து கோயிலுக்கு செல்ல டிரஸ்ட் சார்பில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு நன்கொடைகள் அனுப்பவும், மேலும் தகவல்கள் அறியவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 94433 38941/ 9940182717.

Leave a Reply