பகவான் பூதேவியிடம் அதிக அன்பு கொண்டு தென் திருப்பேரையில் இருப்பதைக் கண்ட மகாலட்சுமி, துர்வாச முனிவரிடம் தன் மனக் குறையைத் தெரிவித்தார். அவர் தென்திருப்பேரை சென்ற போது, பூமாதேவி பெருமாளின் மடியை விட்டு அகலவில்லை; துர்வாசரையும் உபசரிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட முனிவர், பூமா தேவி உருவம் ஸ்ரீ தேவி உருவம் போல் மாற சாபமிட்டார். பின் பூமி தேவி அவரை அடிபணிய தாமிரபரணியில் நீராடி தவம் புரிந்தால் பழைய உருவம் கிட்டும் என்றார்.
பூ தேவி பங்குனி பௌர்ணமியில் தாமிரபரணியில் ஸ்ரீதேவி உருவில் நீராடும்போது, மீன் போன்ற வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அதை திருமாலின் காதுகளுக்கு அணிவித்தார். அதனால் பெருமாள் மகர நெடுங்குழைக் காதர் ஆனார். பூமிதேவி லட்சுமியின் உடல் (ஸ்ரீபேரை) போன்று மாறியதால் இவ்விடம் ஸ்ரீ பேரை என்றழைக்கப்பட்டது.
இத்தலத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று பிரம்மோற்ஸவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 5வது நாள் கருடசேவையும் 9வது நாள் தேரோட்டமும் நடைபெறும்.
நவதிருப்பதிகளின் கருடவாகனத்திலேயே இங்குள்ள கருடவாகனம்தான் பெரியது.
இங்கே, குழந்தைகளின் விளையாட்டு ஒலி, வேத முழக்கம், பிரபந்தம் போன்றவற்றை பெருமாள் நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக கருடாழ்வார் பெருமாளுக்கு நேர் எதிரே இல்லாமல் சற்றே விலகியிருக்கிறார்.
இந்தத் திவ்யதேசத்துக்கு வந்து, பெருமானை வழிபடுபவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும். திருமணத் தடை அகலும். சுக்ரதோஷம் சரியாகும்.
தலத்தின் பெயர் : தென்திருப்பேரை
அம்சம் : சுக்கிரன்
மூலவர் : மகர நெடுங்குழைக்காதர்
உற்ஸவர் : நிகரில் முகில் வண்ணன்
தாயார் : குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்
இருப்பிடம் : திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் நெல்லையில் இருந்து 3 5 கி.மீ. தொலைவு.
நடைதிறக்கும் நேரம் காலை 7 – 12 மாலை 5 – 8.30
தரிசன உதவிக்கு: திருவேங்கடத்தான்(அனந்து) 9360553489, 04639- 273902