திருமணக் காப்பு வழங்கும் பிராட்டி

ஆலய தரிசனம்

நின்ற கோலத்தில் வரதன்

நெடிதுயர்ந்து நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் வரதராஜர்; அபய வரத ஹஸ்தத்தோடு அருள்பாலிக்கிறார். மூலவருக்கு அருகிலேயே ஸ்ரீதேவியும், பூதேவியும் அருள் பொழிகிறார்கள். மூலவருக்கு முன்புறம் லட்சுமி நாராயணரின் மிகப் பழமையான சிலை ஒன்று உள்ளது.

கருவறையில் இருந்து அர்த்த மண்டபம் வந்து பிராகாரத்திலுள்ள தாயார் சந்நிதியை சேவிக்கிறோம். “பெருந்தேவித் தாயார்’ என்னும் திருநாமம் கொண்டு பேரழகியாக அமர்ந்திருக்கிறாள் அன்னை. வரதனை மணந்த நாணம் அவள் முகமெங்கும் பரவியிருக்கிறது. பெருந்தேவி தாயாருக்கு வெள்ளிக் கிழமைதோறும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

திரிபங்கி ராமர்

ராமர், அர்த்த மண்டபத்தில் “திரிபங்கி ராமர்’ என்னும் திருநாமத்தோடு காட்சி தருகிறார். முழங்கால், இடுப்பு, கழுத்து என்னும் மூன்று பகுதிகளையும் சற்றே ஒயிலாக வளைத்து பேரழகராக ஜொலிப்பதால், “திரிபங்கி’ என்று பெயர் பெற்றார். அவருக்கு அருகே இடது கையில் ராமரின் சூரிய வம்சக் கொடியை ஏந்தியும், வலது கையால் வாய் மூடிப் பணிவாகவும் அமர்ந்திருக்கிறார் “விநய ஆஞ்சநேயர்’.

பிராகார வலம் வந்தால் தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் துர்க்கையை தரிசிக்கலாம். கருடாழ்வார் உடலில் எட்டு நாகங்களோடு காட்சி தருகிறார். இவருக்கு சுவாதி நட்சத்திர நாளில் திருமஞ்சனம் செய்விக்கின்றனர்.

ஆண்டாள் கல்யாணம்

நல்லாத்தூர் வரதராஜர் சந்நிதியில் ஒவ்வொரு வருடமும் போகிப் பண்டிகையன்று ஆண்டாள் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். அரங்கனுக்கு மாலையிட்ட கோதை நாச்சியார், இங்கே திருமணமாகாத பக்தர்களுக்கு, தன் ஆசியுடன் மாலை வழங்குகிறாள். மாலையைப் பெற்று சென்றவர்கள் வெகுவிரைவில் திருமணமாகி மறுபடியும் இங்கு வந்து நன்றி தெரிவிப்பது உருக்கமான காட்சியாகும்.

அதேபோல் ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்தேறும் சீதா கல்யாணத்தின்போதும் இக்கோயிலுக்கு வந்து ராமர்-சீதை காப்புக் கயிறு கட்டிச் செல்பவர்களுக்கு உடனே திருமண பாக்கியம் கிட்டுகிறது. குறிப்பிட்ட நாளில் செல்ல முடியாதவர்கள், இயலும்போது பக்திப் பரவசத்தோடு வரதனை தரிசிக்க வந்தால்கூட போதும். பூமாலையை பெருமாளின் திருமேனியில் சாற்றி வழிபட்டால், திருமணச் சிக்கல் விலகுகிறது.

அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி சீதா கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடந்தது. இன்றைய தினம் (15.4.2011) ராமர் – சீதை காப்பு வழங்கும் வைபவம் நடைபெறுகிறது. இது “திருமணத் தடை’ உள்ளவர்களின் குறையைக் களையும் ஆற்றலுடையது.

ஆலய அமைவிடம்:

புதுச்சேரியிலிருந்தும், விழுப்புரம் மற்றும் கடலூரிலிருந்தும் நல்லாத்தூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. பாண்டி- கடலூர் வழியில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கிலோ மீட்டர்; பாண்டி-விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இவ்வூர்.

கட்டுரை: தினமணி – வெள்ளிமணி

Leave a Reply