682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true"> விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் கோலாகலமாக நடந்த “மது” பொங்கல் திருவிழா பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.மது கலய ஊர்வலத்தில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள வடக்காச்சி அம்மன் கோவிலில் நடந்த “மது” பொங்கல் திருவிழாவில் “மது” பொங்கியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
வத்திராயிருப்பு பகுதியில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவையொட்டி அங்குள்ள வடக்காச்சி அம்மன் கோவிலில் மது பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இதில் விரதம் இருந்த சிறுமியின் தலையில் பல்வேறு தானியங்களின் மாவுக் கலவை அடங்கிய கலயம் ஒன்று வைக்கப்படும். அதற்கு “மது” கலயம் என்று பெயர். அதனை அச்சிறுமி தலையில் சுமந்தபடி வடக்காட்சி அம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வருவார்.
கலயத்தை அவர் இறக்கி வைத்த சிறிது நேரத்தில் அதில் உள்ள மாவு கலவை பொங்கி வழியும். அவ்வாறு பொங்கி வழிந்தால் நன்கு மழை பெய்து ஊர் செழிப்படையும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளைக் கொண்ட இத் திருவிழாவானது நேற்று கோவிலில் துவங்கியது காலையில் வடக்காட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடந்தது கோவில் முன்பாக உள்ள மைதானத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மாலையில் மது பொங்கல் விழா நடந்தது. இதில் சிறுமி கஞ்சி கலயத்தை சுமந்தபடி கோவிலை வலம் வந்தார். பக்தர்கள் அவரை பயபக்தியுடன் கோவில் முன்பாக ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
சிறுமி கலயத்தை பலிபீடம் முன்பாக இறக்கி வைத்தார். சிறிது நேரத்திலேயே கலயத்திலிருந்த மதுக்கலவை பொங்கி வழிந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் குலவையிட்டும், கைதட்டி ஆரவாரம் செய்தும் வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த விழாவான முத்தாலம்மன் கோவில் தேரோட்ட விழாவிற்கான பறைசாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நடு இரவில் தீப்பந்தங்களுடன் தப்பை மேளம் முழங்க ஊர் முழுவதும் தேரோட்டம் நடைபெறும் தேதி நேரம் உள்ளிட்ட தகவல்கள் பறை அறிவிப்பு செய்யப்பட்டது. முத்தாலம்மன் கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் முக்கியஸ்தர்கள், கமிட்டி நிர்வாகிகள், முத்தாலம்மன் பக்த சபை தலைவர் சுந்தர்ராஜ பெருமாள், செயலாளர் விவேகானந்தன் விழா ஏற்பாடுகளை செய்தனர்.