சிறப்புத் தகவல்: ஐயப்பனின் ஐந்து படை வீடுகள்; மண்டல பூஜைகள் தொடக்கம்!

ஆலய தரிசனம்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களான அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எரிமேலியில் மண்டல பூஜை மகோத்சவம் இன்று கோலாகலமாகத் துவங்கியது. திரளான பக்தர்கள் இக் கோவில்களுக்கு சென்று சபரிமலை செல்வதற்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கியும் வழிபாடு நடத்தியும் வருகின்றனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சுவாமியாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவருக்கு தமிழகத்தில் முருகனுக்கு படைவீடு கோவில்கள் உள்ளது போல் கேரளாவில் படைவீடு கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு வரலாற்றையும் ஒவ்வொரு தத்துவத்தையும் உணர்த்தி வருகிறது.

செங்கோட்டை அருகில் உள்ள குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில் ஆகிய கோயில்கள் மிக முக்கிய ஐயப்பனின் படை வீடு கோவில்களாக உள்ளன.

kulathupuzha sastha temple

முதல் படைவீடு:குளத்துப்புழா: செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குளத்துப்புழா. இங்கு தர்ம சாஸ்தா மிகப்பெரிய குளத்துப்புழா நதிக்கரையோரம் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சாஸ்தா குழந்தை ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

முன்பு கொட்டாரக்கரை மகாராஜா இந்த வழியாக குதிரையில் சென்றபோது ஆற்றங்கரையில் ஐயப்பன் குழந்தை வடிவிலான 8 விக்கிரகங்கள் இருந்தது. இது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் பாலகன் ஐயப்பன் உருவம் வரும். இதை நதிக்கரையில் கோயில் கட்டி இங்கு பிரதிஷ்டை செய்தார். இன்னும் இந்த உருவம் அப்படியே உள்ளது. மேலும் திருவாசி அணிந்த ஐயப்பனும் அபிஷேகத்திற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இக்கோவில் ஐயப்பனின் படை வீடு கோவில்களில் முதல் கோவிலாக பாலாசாஸ்தா கோயிலாக அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இன்று மண்டல பூஜை துவங்கியது. நேற்று மண்டல பூஜை துவங்குவதற்கான அனைத்து பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டு இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து 41 நாள் மண்டல பூஜை வழிபாடுகள் துவங்கி பூஜைகள் நடந்து வருகிறது.

இக்கோவில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் .

சபரிமலை செல்லும் பக்தர்கள் இக்கோவிலுக்கு அதிக அளவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் 41 நாள் மண்டல பூஜை நாட்களிலும் இரவு விளக்கு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

இரண்டாம் படை வீடு:ஆரியங்காவு: குளத்துப்புழாவில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில், 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆரியங்காவு. செங்கோட்டையில் இருந்து புனலூர் – கொல்லம் சாலையில் சுமார் 16 கி.மீ., சென்றால் முதலில் வருவது இந்தத் தலம். இது, ஐயப்பனின் இரண்டாவது படை வீடு கோவிலாக உள்ளது. இங்கே தர்ம சாஸ்தா இளைஞனாக மதகஜ வாகன ரூபனாக மதம் பிடித்த யானையை அடக்கிய வீரனாகக் காட்சி தருகிறார்.

இக்கோவிலில் தர்மசாஸ்தாவுக்கு திருமணம் நடந்ததாக ஒரு ஐதிகம் நிலவி வருகிறது. தமிழ்ப் பெண், சௌராஷ்ட்ரா குலத்தைச் சேர்ந்த புஷ்களா தேவி என்பவருடன் ஐயப்பன் ஆரியங்காவு தர்மசாஸ்தா திருமணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் ஐதீகப்படி திருமணம் நடக்கும் போது நின்று விட்டதாம்!

தற்போது கோவிலில் திருமணம் மார்கழி மாதத்தில் மண்டல பூஜைக்கு முதல் நாள் இரவு நடத்தப்படுகிறது. மிகப் பிரமாண்ட விழாவாக மார்கழி ஒன்று முதல் இந்தக் கோவிலில் பத்து நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை – 1 இன்று முதல் மண்டல பூஜை வழிபாடு துவங்கி 41 நாட்கள் இவ்விழா விமர்சையாக நடைபெறும். இக்கோவிலில் 30-வது நாள் ஆரியங்காவு தர்ம சாஸ்தாவுக்கு திருபாவரணங்கள் அணிவித்து பூஜைகளும் மார்கழி 1 முதல் உத்ஸவ வழிபாடுகள் துவங்கி மண்டல பூஜைக்கு முதல் நாள் திருக்கல்யாண வைபோகம் மிக விமர்சையாக நடைபெறும்.

41 வது நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா மிகச் சிறப்பானது. மண்டல பூஜை சபரிமலையில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இங்குதான் மண்டல பூஜையை மதுரை பாண்டிய மகாராஜா 41 நாட்கள் கடும் பூஜை செய்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. பாண்டிய மகாராஜா இக்கோவிலைக் கட்டி பூஜைகள் நடத்தி, கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை வழிபாடு நடத்தி, இதில் 30 வது நாள் முதல் 41வது நாள் வரை தினசரி உத்ஸவம் நடத்தி 40வது நாளில் ஆரியங்காவு தர்ம சாஸ்தாவுக்கும் பூர்ண புஷ்களா தேவிக்கும் திருக்கல்யாண வடிவம் நடத்தி வைத்தாராம்! 41 நாள் மண்டல பூஜை கும்பாபிஷேகம் நடந்ததாகக் கருதப்படுகிறது! இதுவே தற்போது சபரிமலையில் மிகப்பெரிய விழாவாக நடந்து வருவதாக புராண வரலாறு கூறுகிறது.

ஆரியங்காவிலிருந்து மலை வழியில் செல்லும் பாதையில் அடர்ந்த வனத்தில் புஷ்கலாதேவி கோவில் உள்ளது. திருவிழாவிற்காக இங்கிருந்து புஷ்கலாதேவியை கார்த்திகை மாதம் கடைசி நாள் அழைத்து வரும் சம்பிரதாய நிகழ்வும் மார்கழி 1 முதல் பூஜை வழிபாடு திருவிழா பூஜை வழிபாடுகளும் நடைபெறும். இக்கோவில் ஐயப்பனின் இரண்டாவது படை வீடு கோவிலாக அழைக்கப்படுகிறது.

தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

மூன்றாம் படைவீடு: அச்சங்கோவில் : கடந்த சில ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்கள் மிக அதிக அளவில் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

செங்கோட்டையிலிருந்து பண்பொழி வழியாக சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த வனத்தில் அச்சன்கோவில் உள்ளது. இது ஐயப்பனின் மூன்றாவது படை வீடு கோவிலாக உள்ளது. இங்கு தர்மசாஸ்தா அரசனாக பூரண புஷ்கலாதேவியுடன் அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும்.

அச்சங்கோவில் தர்மசாஸ்தாவிடம் எது கேட்டாலும் உடனே தருவார் என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. சபரிமலையில் உள்ளது போல் இங்கும் 18 படி நடை, சபரிமலையில் உள்ளது போல் இங்கும் தங்கக் கொடிமரம், ஆராட்டு உற்சவம் 10 நாள் வெகு விமர்சையாக நடைபெறும். வனப்பகுதியில் இருந்தாலும் தினமும் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது மண்டல பூஜை விழா இன்று காலையில் தொடங்கியது. கோவில் முழுவதும் பனை ஓலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி, தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தி, கார்த்திகை ஒன்றாம் தேதி இன்று மிகப்பெரிய பாக்கு மரம் வெட்டி மண்டல பூஜை துவங்கியது. இதற்காக சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டு, 41 நாள் மண்டல பூஜை விழா துவங்கியுள்ளது!

கோவிலில் மார்கழி 1 முதல் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு உத்ஸவம் மிகப் பிரபலமானது. இதற்காக கார்த்திகை மாதம் கடைசி நாள் மண்டல பூஜை 30 ஆவது நாள் அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு தங்கத் திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டு அணிவிக்கப்படுகிறது.

இந்த திருவாபரணங்கள் மார்கழி ஒன்று முதல் 10 நாட்கள் தர்மசாஸ்தாவுக்கு அணிவிக்கப்படுவது மிக சிறப்பம்சமாகும். திருவிழாவின் கடைசி நாளில் பம்பா அச்சன்கோவில் நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடத்துவது தனிச்சிறப்பாகும். மிகப் பிரபலமான இக்கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 9 மணி வரையிலும் பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்

தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்களில் வரும்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவில் சென்று, அச்சன்கோவிலில் இருந்து பத்தணாபுரம் பத்தனம்திட்டா வழியாக சபரிமலை செல்வதற்கு மிக நல்ல சாலை வசதி உள்ளது. மகரஜோதி காலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த வழியில் நடந்து செல்வது சிறப்பம்சமாகும்.

பிரசித்தி பெற்ற இந்த மூன்று ஐயப்பனின் படை வீடு கோவில்களுக்கும் செல்ல, செங்கோட்டை மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது!

erumeli darmasastha temple

நான்காம் படைவீடு: எரிமேலி: ஐயப்பனின் அடுத்த படை வீடு கோவிலான எரிமேலி தர்மசாஸ்தா கோவிலிலும் இன்று முதல் 41 நாட்கள் மண்டல பூஜை விழா கோலாகலமாகத் துவங்கியுள்ளது. இக்கோவிலில் சபரிமலை செல்லும் கன்னி ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளி எரிமேலி சாஸ்தாவுக்கு பேட்டை நேர்ச்சை செலுத்தி சபரிமலைக்குச் செல்வதை முக்கிய வழிபாடாகக் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்!

எரிமேலியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பம்பை. எரிமேலியிலிருந்து சபரிமலைக்கு மிக சிறப்பான ரோடு வசதியும் உள்ளது. பெருவழிப்பாதையில் செல்லும் பக்தர்கள் எரிமேலி சென்று இங்கிருந்து 41 கிலோமீட்டர் தொலைவு நடந்து சபரிமலைக்கு செல்வதும் சிறப்பம்சம். எரிமேலி கோவிலும் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

இந்த நான்கு கோவில்களுக்கும் செல்ல போதிய பஸ் வசதி இருந்தாலும் பக்தர்கள் அதிக அளவில் தனி வாகனங்களிலேயே சென்று வருகின்றனர்.

sabarimala nada opened

ஐந்தாம் படைவீடு சபரிமலை : ஐயப்பனின் ஐந்தாவது படை வீடு கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோவிலும், ஆறாவது படை வீடாக காந்தமலையும் உள்ளதாகக் கூறுகின்றனர். ஐயப்பனின் ஐந்து படை வீடுகளுக்குச் சென்றாலும் காந்த மலைக்கு செல்ல முடியாது என ஒரு ஐதீகம் நிலவி வருகிறது.

ஆனால், தொடக்க காலத்தில் ஐயப்பன் வழிபாடு சாஸ்தா வழிபாடாகவே தமிழகத்தில் பரிமளித்ததாகக் கூறுவர். எனவே சாஸ்தா ஆலயங்களில் முதல் ஆலயமாக, தமிழகத்தின் பாபநாசம் மலைக்கு மேல் உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலின் தர்மசாஸ்தாவையே வணங்கி, அதன் பின்பே இந்த ஐந்து ஐயப்ப தலங்களுக்கும் செல்வது பழங்கால மரபாக இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் மற்ற ஐந்து தலங்களும் கேரளத்தில் அமைந்துவிட்டதால், இந்த ஐந்து தலங்களுக்கு மட்டுமே சென்று வருவதை வழக்கமாகக் கொண்டனர்.

author avatar
Media News Reporter, Rajapalayam

Leave a Reply