சுற்றுலா: பழைமையைப் பறைசாற்றும் ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில்!

ஆலய தரிசனம்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

ayyangarkulam temple1

காஞ்சித் தலம் ஐயங்கார் குளம்

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மையானது காஞ்சிபுரம். இங்கே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் அநேகம். நாயன்மார்களால் பதிகங்கள் பாடப்பெற்ற ஆலயங்களும் அதிகம்.
பழங்காலத்தில் சிறப்புறத் திகழ்ந்தது தொண்டை மண்டலம். அதன் சிறப்பைப் பறை சாற்றுவது பல்லவர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த காஞ்சி மாநகரம். பட்டுக்கு மட்டுமல்ல பக்திக்கும் புகழ்பெற்ற தலம் இந்தக் காஞ்சிபுரம்.

sanjeevi1

பூவோடு சேர்ந்த நாரும் மணப்பதுபோல் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் பலவும் அதே ஆன்மிக மணம் கொண்டு திகழ்கின்றன.
அத்தகைய திருத்தலங்களில் ஒன்றுதான் அய்யங்கார்குளம் என்ற திருத்தலம். இது, காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்குச் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் தென்புறத்தில் இயற்கை எழிலுடன் காட்சி தருகிறது.

அய்யங்கார்குளம் என்ற இந்தக் கிராமத்துக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த கிராமத்தில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று. இங்கே கோயில் கொண்ட அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனை சஞ்சீவிராயர் என்று போற்றி வணங்குகிறார்கள். அழகான கற்றளிக் கோயில் இது.

sanjeevi3

கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்புறம் நெடிதுயர்ந்த தூண்களுடன் கூடிய கோபுரம் மூலவர் விமானம் மூன்று சுற்று பிராகாரங்கள்…ப்உள் பிராகாரத்தில் கல்யாண மண்டபங்கள் வெளிபிராகாரத்தில் நான்கு திசைகளிலும் அலங்கார மண்டபங்கள் வடக்கு வாயில் கோபுரம் என அழகிய வடிவமைப்பு. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டு மிக அழகாகக் காட்சி தருகிறது இந்தக் கோயில்.

sanjeevi4

கி.பி. 1541 முதல் 1614 வரை விஜயநகரை ஆட்சி செய்த வேங்கடபதியின் அவையில் அமைச்சராக இருந்தவர் லட்சுமிகுமார தாததேசிகர். இவர் ஒருமுறை தலயாத்திரை செய்துவந்தபோது இங்கே திருடர்கள் வழிமறித்து அவரிடம் இருந்த திரவியங்களைக் கொள்ளை அடித்தனர். உடனே லட்சுமிகுமார தாததேசிகர் அந்த இடத்தில் அமர்ந்து அனுமனை நினைத்து அனுமந்தஸ்ரீ என ஒரு ஸ்தோத்திரத்தைக் கூறினார். அடுத்த நிமிடம் திருடர்களுக்கு கண் பார்வை பறிபோனது. பயந்துபோன திருடர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டினர். பிறகு, தங்களிடம் இருந்த பொருட்களையும் சேர்த்து தாததேசிகரிடமே திருப்பிக் கொடுத்துச் சென்றனர். தன்னிடம் இருந்த பொருள்செல்வத்தையும் சேர்த்து தாததேசிகர், இங்கே ஆஞ்சநேயருக்கு அழகான இந்தக் கோயிலைக் கட்டினார்.

sanjeevi5

மூன்று சுற்று பிராகாரங்களுடன் கூடிய இந்த ஆலயத்தின் உள்ளே சென்றவுடன் 50 தூண்களுடன் கூடிய மகாமண்டபத்தையும், 25 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபத்தையும் காண்கிறோம். ஆலயத்தின் உள்ளே செல்லும் முன், அஞ்சனை மைந்தனின் பூரண அருளைப் பெற்றுச் செல்லவேண்டும் என்பதற்காக அனுமனைப் போற்றும் 20 ஸ்லோகங்களை கல்வெட்டுகளில் வடித்து அர்த்த மண்டப வெளிச்சுவரின் பொறித்து வைத்துள்ளனர்.

இங்கே மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருநாமம் ஸ்ரீசஞ்சீவிராயர் என்பது. வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். அண்டி வந்தவருக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும் அழகுக் கோலம். தான், தாசரதியான ராமபிரானின் தாசானுதாசன் என்பதால், அயோத்தி இருக்கும் வடக்குத் திக்கைப் பார்த்தபடி இருகரம் கூப்பிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீசஞ்சீவிராயர்.

sanjeevi6

ராம&ராவண யுத்தத்தின்போது, இந்திரஜித் விடுத்த கொடிய அஸ்திரத்தால் மூர்ச்சையடைந்த லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தபோது, அதன் ஒரு பகுதி இங்கே விழுந்ததாம். அதில் இருந்து சுயம்புவாகத் தோன்றியவர் இங்குள்ள சஞ்சீவிராயர் என்கிறார்கள். இந்தக் கோவிலுக்கே உரிய சிறப்பான அம்சங்கள் சிலவும், இந்தக் கோயிலின் பெருமையைப் பறை சாற்றுகின்றன… அவை… தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோவில் … இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு என்று அமைந்திருப்பது… அதுவும், ராஜகோபுரம் உள்ள அனுமனின் தனிக்கோயில் என்பது மிகவும் சிறப்பான ஒன்று.

sanjeevi8

இந்த ஆலயத்தின் அர்த்த மண்டப மேற்கூரைகளில் உள்ள கருங்கல் வளையங்கள், சிற்பக் கலை நயத்தை நமக்குக் காட்டுகின்றன. ஆயினும், சிற்பங்கள் சில சிதிலமடைந்து காணப்படுகின்றன.

சித்ரா பௌர்ணமி நன்னாளில் காஞ்சிப் பேரருளாளன் ஸ்ரீ வரதராஜப் பெருமான் இந்த ஆலயத்துக்கு எழுந்தருள்கிறார். இங்கே திருமஞ்சனம் கண்டு, இங்குள்ள நடவாவி திருக்கிணற்றுக்கும் எழுந்தருள்கிறார் ஸ்ரீவரதராஜர்.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மூல நட்சத்திர நாளிலும் ஸ்ரீசஞ்சீவிராயப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தியான மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய அனுமனின் தரிசனம் சகல தடைகளையும் நீக்கி, சகல நலன்களையும் வாரி வழங்கும் அழகு தரிசனமாகும்.

sanjeevi9

முற்காலத்தில் இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் போன்றவை அடிக்கடி நடைபெற்றுள்ளன. அதற்கு அடையாளமாக கற்படுகைத் தளங்கள் இருப்பதைக் காண்கிறோம். கற்படுகைகள் 15 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டிருக்கின்றன. பிரசாதம் செய்யப்படும் திருமடப்பள்ளியில் சாதத்தை கிளறுவதற்கென்றே இரண்டு கற்படுகைகள் இருப்பதைக் காண்கிறோம். இதன் மூலம், அதிக அளவில் ஏழை எளிய மக்கள் கோயில்களில் அன்னத்தை உண்டு பசியாறியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

ஒருமுறை இந்த ஆலயத்தில் இருந்த விக்ரஹத்தை மூன்று பேர் திருடிச் சென்றுவிட்டனராம். திருடியவர்களின் வீட்டுப் பெண்மணிகள், சேலைகள் வாங்குவதற்காக தென்மாவட்டத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார்களாம். அங்கே கடைக்குச் சென்று, சேலையை எடுத்துப் போடு என்று சொல்ல முயன்றபோது, அவர்களின் வாயிலிருந்து சிலை சிலை என்றே பேச்சு வந்ததாம். இவர்களின் பேச்சில் சந்தேகப்பட்ட கடைக்காரர், போலீசுக்கு தகவல் சொல்ல, போலிசார் வந்து அவர்களை விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டதாம். அதன்பிறகு கோயில் சிலைகளை திருடர்களிடம் இருந்து மீட்டார்களாம். அதன்பிறகு, இந்த சஞ்சீவிராயரை வணங்கிச் சென்றால், கைவிட்டுப் போகும் தங்கள் பொருள்களும் திரும்பக் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

sanjeevi10

கோயிலின் பின்புறத்தில் படித்துறையுடன் கூடிய மிகப்பெரிய குளம் ஒன்று இருப்பதைக் காண்கிறோம். மன்னர் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுததேவராயர் உதவியுடன் லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் இந்தக் குளத்தை சுமார் 133ஏக்கர் பரப்பில் வெட்டினாராம். அதனால்தான் இந்த கிராமத்துக்கு அய்யங்கார் குளம் என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். ஸ்ரீதாதசமுத்திரம் என்றும் இந்தக் குளத்துக்கு ஒரு பெயர் உண்டாம்.

nadavavi2

இந்த ஆலயத்தின் இன்னுமொரு சிறப்பம்சம், இங்குள்ள நடவாவி கிணறு. இது இங்கே அமைந்த விதமே சுவாரசியமானதுதான்!
இந்த ஆலய வளாகத்துக்கு உள்ளேயே ஒரு கிணறு தோண்ட முயன்றபோது, கோழி கூவியது போல் குரல் கேட்டதாம். அதனால் அந்தப் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்களாம். பின்னர் மீண்டும் ஒரு முறை தோண்ட முயன்றபோது, எண்ணெய் விற்பதுபோல் குரல் கேட்டதால், அப்போதும் பணி நிறுத்தப்பட்டதாம். அதன் பிறகு, மூன்றாவது முறையாக கோயிலுக்கு நேர் எதிரில் குளக்குரைக்கு கீழே கிணறு வெட்டப்பட்டது. அதுவே பாதாளக் கிணறாக, நடவாவி கிணறாக விளங்குகிறது.

nadavaavi1 1

சித்ரா பௌர்ணமியில் திருவிழாக் காணும் அன்றைய தினம் பக்தர்கள் படியிறங்கிச் செல்லும் விதமாக கிணறு அமைந்துள்ளது. கிணற்றில் உள்ள தூண்களில் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன. நாலாப்புறங்களிலும் உள்ள பக்கவாட்டுக் கற்களில் சப்தகன்னியர் சிலைகள் அழகுறக் காட்சி தருகின்றன. கிணற்றுக்குள் வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில்தான் காஞ்சிப் பேரருளாளன் ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருள்கிறார்.

sanjeevi11

கிணற்றுக்குள் செல்லும் வழியில் கஜலட்சுமியுடன் கூடிய பிரபை ஒன்றும் உள்ளது. வற்றாத கிணறாக இது உள்ளது என்பது சிறப்பம்சம். சித்ரா பௌர்ணமி நடவாவி திருவிழா அன்று மட்டும் பக்தர்கள் உள்ளே செல்ல நீர் இறைக்கப்படுகிறது. அதற்கு பிறகு அடுத்த ஆண்டுதான் உள்ளே செல்ல முடியும்.

sanjeevi12

ஸ்ரீசஞ்சீவிராயர் திருக்கோவிலில் புத்தாண்டு மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பெருமான் தெப்பத்தில் எழுந்தருளும் தெப்போற்ஸவமும் இங்கே வெகுசிறப்பாக நடக்கின்றது. அதுமட்டுமா? பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது, ஸ்ரீ சீதாகல்யாண வைபவமும் மிக விசேஷமாக நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தில், ஸ்ரீசீதாபிராட்டியார் சமேத ஸ்ரீராமபிரான், இளையாழ்வார் ஸ்ரீலட்சுமணர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளதால் நவராத்திரிப் பெருவிழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றது. அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துக்கொண்டு வரும்போது அதன் சில பகுதிகள் இங்கே விழுந்தன என்பதால், இந்த கிராமத்தில் சஞ்சீவி மூலிகை பரவிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு விஷ ஜந்துக்களால் தீங்கு ஏதும் ஏற்பட்டதில்லையாம்.

மனதுக்கு நிம்மதி அளிக்கும் இந்தத் தலத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாலும் கொஞ்சமும் சலிக்காமல் மனம் ஒருவயப்படுவதை உணரலாம். ஸ்ரீசஞ்சீவிராயர் அருளும் அய்யங்கார்குளம் திருத்தலத்துக்குச் செல்வோம். அனுமனின் பூரண அருளைப் பெறுவோம்.

Leave a Reply