682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
வைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விசாக திருவிழா நேற்று துவங்கியது. திருவிழா தொடக்கமாக நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்பட்டது.
வசந்த உற்சவம்: இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புஷ்ப அலங்காரத்தில், வசந்த மண்டப மேடையில் எழுந்தருளினர். மேடையின் அடிப்பாகத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பலகையில் சுவாமி எழுந்தருளினார். அங்கு வசந்த உற்சவம் முடிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்த உற்சவம் ஜூன் 2 வரை நடக்கும்.
பால்குட திருவிழா: ஜூன் 3 அதிகாலை ஐந்து மணிக்கு சண்முகர், வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7 மணிக்கு சுவாமி கம்பத்தடி மண்டபம் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வார். பாதயாத்திரை பக்தர்கள் சுமந்துவரும் குடங்களில் உள்ள பால், சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காலை 9 முதல் 2 மணிவரை அபிஷேகம் செய்யப்படும்.
மொட்டையரசு திருவிழா: ஜூன் 4ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்க குதிரை வாகனத்தில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவர். தங்கரதம் புறப்பாடு இல்லை: மே 25 முதல் ஜூன் 4வரை நடக்கும் வைகாசி விசாக திருவிழாவில், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பங்கேற்று அருள்பாலிப்பர். இந்த நாட்களில் தங்க ரதம் புறப்பாடு இல்லை, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
நக்கீரர் சன்னதி :சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவ வழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.
சூரபத்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானுக்கு இந்திரன் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதன்படி திருப்பரங்குன்றத்தில் அவர்களது திருமணம் கோலாகாலமாக நடைபெற்றது. நாரதர் முன்னிலையில் தெய்வங்களும் ரிஷி முனிவர்களும் தேவர்களும் புடை சூழ முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்தக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி இந்தத் தலத்தே எழுந்தருளினார்.
இந்தத் தலத்தை நக்கீரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர்.
பிரார்த்தனை: திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்: வைகாசிவிசாகம், ஆடிக் கிருத்திகை, புரட்டாசியில் வேல் திருவிழா, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கே முக்கியத் திருவிழாக்கள்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லும் வழி.
திறக்கும் நேரம்: காலை 5.30-1 வரை; மாலை 4-9 வரை
போன்: 0452-2482248 / 2482648
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்
திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடு. மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்த படி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
கோயில் ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது.
பரம்பொருளாகிய சிவன் குன்றுவடிவில் அருளுவதால் சுவாமி, “பரங்குன்றநாதர்’ என்றும், தலம் “பரங்குன்றம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கோயில் மண்டப முகப்பில் நந்திகேஸ்வரர், மனைவி காலகண்டியுடன் காட்சி தருகிறார்.
சிவன் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை “மால்விடை கோயில்’ (மால் – திருமால், விடை – நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவனுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.
சத்தியகிரீஸ்வரர் :
மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து லிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனை தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.
அம்பாள் ஆவுடைநாயகி தனிச் சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்: இக்கோயிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
முருகன் அருகில் கருடாழ்வார் : சிவன் கோயில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.
தெட்சிணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம்: இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்டநாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக “ருத்ராபிஷேகம்’ செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு “வெள்ளிக்குடத்தில்’ சுவாமியை ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய ருத்ரம், சமஹம் ஆகிய மந்திரங்கள் சொல்லி வழிபடுகின்றனர். இது விசேஷ பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும்.
மால்விடை கோயில்: இக்கோயிலில் ஒரே குடவறையில் சிவன், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர் மற்றும் துர்க்கை ஆகிய ஐந்து பேரும் அருள்கின்றனர். துர்க்கையம்மன் ராஜகோபுரத்திற்கு நேரே வடக்கு பார்த்து, காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.
தவறுக்கு பரிகாரம்
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார். பிரணவ மந்திரத்தை குரு மூலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக முருகன் மந்திர உபதேசம் கேட்டுவிட்டாலும் அதை தவறாகவே கருதி பரிகாரத்திற்காகவும், சிவனே தனக்கு குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டுமென்றும் வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று காட்சி தந்து மன்னித்தார். இவர், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
தந்தைக்கு பதில் மகன்
திருப்பரங்குன்றம் கோயிலில் விழாக்களின்போது, சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், முருகன் வீதியுலா செல்கிறார். முருகன், சிவ அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். இங்கு முருகனுக்கு “சோமசுப்பிரமணியர்’ என்று பெயர். சோமன் என்பது சிவனின் ஒரு பெயர்.
துர்க்கை சன்னதி
கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். ஆம்! இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.