இந்த “கர’ ஆண்டில் உங்களின் அயன, மோட்ச, விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இதனால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். இந்த ராசி வாசகர்களில் சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் வேறு பல “சாதகமான’ நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும்.
நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வருடம் இது.
இந்த ஆண்டு உங்களின் ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மையைத் தோற்றுவிப்பார். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி பெரும்பாலான ரிஷப ராசி நேயர்களுக்கு உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள்.
உங்களின் சப்தம ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு மனப் பக்குவத்தையும் தருவார். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள்.
இந்த ஆண்டு ஐப்பசி மாதம், 28ஆம் தேதி வரை சனி பகவான் உங்களின் பூர்வ புண்ய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது.
ஐப்பசி மாதம், 29ஆம் தேதியிலிருந்து “கர’ ஆண்டு இறுதி வரையில், சனி பகவான் தன் உச்ச ராசியில் குரு பகவானின் பார்வை பெற்று சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.
வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும்.
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தில் பங்கு போடக் காத்திருப்பார்கள். சிலர் போட்டிகளையும், வயல் வரப்புச் சண்டைகளையும் சந்திக்க நேரிடும். மற்றபடி சிலருக்குப் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உருவாகும்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும்.
மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.
பரிகாரம்: இந்த “கர’ வருடம், இன்ப துன்பங்களின் கலவையாகவே இருக்கப் போவதை எண்ணி எள்ளளவும் கவலைப்படத் தேவையில்லை. ஒரேயொரு பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால், துன்பங்கள் அனைத்தும், ஆலகால விஷமுண்டு ஞாலம் காத்த சிவபெருமானருளால் விலகும். அது, திருஞான சம்பந்தர் அருளிய “கோளறு திருப்பதிகத்தை’ அன்றாடம் பாராயணம் செய்வதுதான்! இந்தத் துதியின் பெருமைகளை நீங்களே அனுபவத்தில் உணர்வீர்கள்.