விக்ருதி ஆண்டு, 14.04.2011 அன்று நண்பகல் 01.02 மணிக்கு முடிவடைகிறது. “கர’ வருடம், அன்றைய தினம் நண்பகல் 01.03 மணிக்கு உதயமாகிறது. கடக லக்னம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறக்கிறது.
இந்த “கர’ ஆண்டில், சித்திரை மாதம், 20ஆம் தேதி (03.05.2011) அன்று, ராகு/கேது பகவான்கள் முறையே தனுசு, மிதுன ராசிகளிலிருந்து விருச்சிக, ரிஷப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அங்கே அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு 15.01.2013 அன்று துலாம், மேஷ ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.
“கர’ ஆண்டு, சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.05.2011) அன்று குரு பகவான், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அங்கே அவர் ஓராண்டு காலம் சஞ்சரித்துவிட்டு 17.05.2012 அன்று ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
“கர’ ஆண்டு, ஐப்பசி மாதம், 29ஆம் தேதி (15.11.2011) சனி பகவான், கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர் அங்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு 02.11.2014 அன்று விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
பொதுவாக ராகு/ கேது பகவான்கள், தாங்கள் பெயர்ச்சி ஆவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவும், குரு பகவான் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவும் தங்களின் அடுத்த பெயர்ச்சியின் பலன்களைக் கொடுப்பார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு “கர’ வருடம் முதல் நாளிலிருந்தே ராகு/கேது பகவான்கள், குரு பகவான் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தையும் கணக்கில் கொண்டு “கர’ வருட பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.