மாமலையாவது நீர் மலையே

விழாக்கள் விசேஷங்கள்

ஒரு முறை திருமங்கையாழ்வார், தொண்டை நாட்டு திருத்தலங்களில் ஒன்றான திருநீர்மலை வந்திருந்தார். அப்போது மலையைச் சுற்றி நீர் நிரம்பியிருந்தது. அதனால் அவர் பெருமாளை தரிசிக்க முடியவில்லை. “எம்பெருமானை சேவிக்காமல் போவதில்லை’ என்ற உறுதியுடன் இருந்தார். ஆறு மாத காலம் நீர் வடியவில்லை. பின், நீர் வடிந்தவுடன், திருமாலைப் போற்றிப் பாடிவிட்டு, மற்ற திவ்யதேசங்களை சென்றடைந்தார். இன்றளவும், ஆழ்வார் தங்கிய மலை, “ஆழ்வார் மலை’ என்று அழைக்கப்படுகிறது.

நீர்மலை என்பது வடமொழியில் “தோயாத்ரி’ ஆகும். “நீரினால் சூழப்பட்டது’ என்பது இதன் பொருள். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமாலின் திருப்பெயர், “நீர்வண்ணன்’ ஆகும். பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம், “தோயாத்ரி’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று, “திருநீர்மலை’ ஆகும். இத்தலம், சென்னை பல்லாவரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ளது. பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். பூதத்தாழ்வார் “அணிநீர் மலை’ என்றிதனைப் புகழ்கின்றார்.

இங்கு நீர் வண்ணப் பெருமாள் நின்ற நிலையிலும், நரசிம்மர் அமர்ந்த நிலையிலும், ரங்கநாதர் பள்ளி கொண்டவாறும் சேவை சாதிக்கின்றனர்.

என்றாலும் இக்கோயில், “நீர்வண்ணப் பெருமாள் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. ஆண்டாள், ராமன், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரின் சந்நிதிகள் மலையடிவாரத்தில் உள்ளன. மலையில், ரங்கநாதர், நரசிம்மர், திருவிக்ரமன் இருப்பினும், ரங்கநாதரே பிரதான மூர்த்தியாக உள்ளார்.

திருவிக்ரமன் எனப்படும் உலகளந்த பெருமாள், தோயகிரி விமானத்தின் கீழும், சாந்த நரசிம்மர், சாந்த விமானத்தின் கீழும் அமர்ந்த நிலையில் உள்ளனர். தாயார் திருநாமம் ரங்கநாயகி.

ஒரு முறை வால்மீகி முனிவர் ரங்கநாதரை தரிசிப்பதற்கு முன் திருக்குளத்தில் இறங்கி கால் கழுவினார்; அப்போது ஸ்ரீராமனை மனதால் நினைத்தார். உடனே ரங்கநாதர் ராமனாகவும், ஆதிசேஷன்- இலக்குவனாகவும் தரிசனம் அளித்தனர். இவ்வாறே திருமாலின் ஆயுதங்களும், ஏனைய பரிவாரங்களும் பரத, சத்ருக்ந, சுக்ரீவ, ஆஞ்சநேயராக காட்சியளித்தனர்.

திருப்பாற்கடலுடன் சம்பந்தம் உள்ளதால் இங்குள்ள தீர்த்தம் “க்ஷீர புஷ்கரிணி’ என்றும், நரசிம்மரைக் கண்டவுடன் பிரகலாதன் ஆனந்தக் கண்ணீருடன் சேவித்ததால் “காருண்ய புஷ்கரிணி’ என்றும், கங்கை இங்கு கலப்பதால் “சித்த தீர்த்தம்’ என்றும், பரமபதத்தினின்று நித்ய சூரிகள் எனப்படும் தேவர்கள் விரஜா நதி தீர்த்தத்தை தங்கக் குடத்தில் கொண்டுவந்து இங்கு சேர்த்தபடியால், “சுவர்ண புஷ்கரிணி’ எனவும் பெயர்கள் பெற்றது.

பல மன்னர்கள் இந்தத் தலத்திற்கு மானியங்கள் அளித்துள்ளனர். இதற்கான சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. மாமலையை தரிசிப்போம்! மங்கலங்கள் அனைத்தும் பெறுவோம்!

News:  21559">https://www.dinamani.com/edition/Story.aspx?artid=321559

 

Leave a Reply