ஸ்ரீமந் நாதமுனிகள்

வைணவ குருபரம்பரை

வைணவ ஆசார்யர் ஸ்ரீமந் நாதமுனிகள்

ஸ்ரீமந் நாதமுனிகள்

 

ஸ்ரீ வைணவ ஆசார்ய பரம்பரை பெரிய பெருமாள், பெரிய பிராட்டி விஷ்வக்ஸேநர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்தே வருவதானாலும், முதல் மூவர் பரமபதத்தி லிருப்பவர்கள். நம்மாழ்வாரோ “ஆழ்வார்’ பட்டியலில் இடம் பெறுபவர். ஆகவே, இந்த நம் ஆழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளையே முதலாசார்யர் எனக் கொண்டு பெருகி வருகிறது.


இவர் சிறப்பு


இவருடைய பேரர் ஸ்ரீ ஆளவந்தார் தம் ஸ்தோத்ர ரத்தினத்தில் ஞான, பக்தி, வைராக்கிய யோகக் கடல் என வணங்குகிறார். “பகவானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றிய பிரேமையில், உண்மையறிவில், அன்பில், எனக்கு நாதனாக இருப்பதில் உயர்ந்தவர், ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு வணக்கம் என்கிறார்.


திருஅவதாரம்


முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்யசூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்) கி.பி. 823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈச்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்டபிறகு, நாதமுனிகள் ஆனார்.


வடதிசை யாத்திரை


தம் தந்தை ஈச்வரபட்டராழ்வாரோடும் குமாரர் ஈச்வர முனிகளோடும் காட்டுமன்னார் அனுமதி பெற்றுக் குடும்பத்தோடு வடநாட்டு யாத்திரை சென்றாரிவர்.


பல வைணவத் திருத்தலங்களைப் பார்த்துப் பாடிப் பரவசமடைந்து ஸ்ரீகோவர்த்தனபுரம் எனும் கிரமத்தில் “யமுனைத் துறைவன்’ பகவானைத் திருத் தொண்டால் மகிழ்வித்தபடி சில ஆண்டுகள் தங்கியிருந்தான். (இச் சமயத்திலேயே இவர் யோகத்தில் ஈடுபட்டு நாதோ பாசனை செய்து சித்தயடைந்திருக்கலாம்)


ஒருநாள் கனவில் காட்டுமன்னனார் இவரை “”வீரநாராயணபுரத்திற்கு மீண்டும் வருக” என்றழைத்தார். எனவே குடும்பசகிதம் இவர் திரும்ப மன்னார் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.


அங்கிருந்த வைணவ மக்கள் இவர் குடும்பம் தங்க ஒரு வீடும், வாழ்க்கை நடத்த வேண்டிய பொருட்களையும் கொடுக்க பெருமாள் சங்கல்பத்தால் நியமனம் செய்யப்பட்டனர்.


சில ஆண்டுகள் இவருடைய “”கைங்கர்யம் கோயிலில் தொடர்ந்து நடந்து வந்தது. அச்சமயம் சில வைணவர் வந்து பெருமாள் முன் “”ஆராவமுதே” என்கிற திருவாய் மொழிப் பாசுரம் பாடி வணங்கினர். அது நாதமுனிகளுக்கு மிக உகந்ததாக இருக்க, அவர் அவர்களிடம், “”இத் திருவாய்மொழிப் பாசுரத்திலே சாற்றுப் பாட்டில் “”ஓராயிரத்துள் இப்பத்தும்’ என வருகிறதே, உங்களுக்கு இப்படி அருளிச் செய்யப்பட்ட ஆயிரம் பாட்டும் வருமோ?” என்று கேட்டார். “”இல்லை; இப்பத்துப் பாட்டுகளே தெரியும்; மற்றவை கிடைக்கவில்லை” என்று கூறிச் சென்றனர்.


தேவகானம்


சோழ ராஜ சபையில் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் மானிட இசையறிந்த ஒருவளும், தேவகானமறிந்த ஒருவளும் பாடினர். சபையோர் மானிட இசை பாடியவளையே பாராட்டிப் பரிசளித்தனர். தேவகானமறிந்திருந்தவள் வருத்தமும் அவமானமும் அடைந்தாள். “உங்களுக்கெல்லாம் தேவகான அருமை தெரியவில்லை” என சினந்து கூறினாள். அப்படி ஒன்று இருப்பதாகவே மன்னனும் சபையினரும் நம்பவில்லை.


அவள் மன்னனார் கோயிலுள் ராஜகோபாலப் பெருமாள் திருமுன் வந்து மனமார தேவகானமிசைத்தாள். அதை ஸ்ரீமந்நாதமுனிகள் கேட்டு ரசித்தார். அவருக்குத் தேவகானம் வரும் என அறிந்த அவள் ராஜசபைக்கு அவருடன் போய் மீண்டும் இசைத்தாள்.

 

நாதமுனிகள் மட்டுமே இதை ரசித்துப் பாராட்டி மன்னனிடம் “”இவள் இசைத்த தேவகானம் மிகச் சிறந்தது” என்றார். “”தேவகானம் என்பதை அறிந்தவர் என்பதன் அடையாளம் என்ன?” என்று மன்னன் நாதமுனிகளைக் கேட்டான்.


“”தோலாலும், உலோகத்தாலும் செய்யப்பட்ட 432 வகைத் தாளங்களை வாசித்தாலும் அதைக் கேட்பவர் அந்தத் தாளங்களின் எடையைச் சரியாகச் சொல்லிவிட முடியும்” என்று நாதமுனிகள் சொல்ல, அதற்கு அரசன் ஏற்பாடு செய்தான்.


432 வகைத் தாளங்களும் ஒரே சமயத்தில் வாசிக்கப் பட்டன. அவற்றின் எடையைத் தனித்தனியாக நாதமுனிகள் கூறினார். அது அப்படியே இருந்தது கண்டு மன்னன் அதிசயித்தான். தேவகானம் பாடுவாளைப் பாராட்டி நிறையச் செல்வமும் அளித்தான். நாதமுனிகளுக்கு அரசன் அளித்த செல்வத்தை அவர் மறுத்து விட்டார்.

Leave a Reply