ஆழ்வார்களின் பெருமை

வைணவ குருபரம்பரை

style="text-align: justify;">வேதத்துக்கு ஏற்றம் பிறக்க ஆழ்வார்கள் அவதரித்தார்கள். வேத அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தோருக்கும், வேதங்களைக் கற்க அனுமதிக்கப்படாத குலங்களில் பிறந்தோருக்கும், பெண்களுக்கும் எளியோருக்கும் வேத அர்த்தங்களை எளிமையாகப் புரிய வைக்க ஆழ்வார்களை இறைவனே தோன்றச் செய்தான் என்பர் பெரியோர். மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் வேத விளக்கங்களாகநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற இந்தப் பாசுரங்கள் வெளியிடப் பெற்றன….

ஆழ்வார்களின் பாசுரங்கள் வேதங்களை, உபநிஷதங்களை விளக்க வந்தவை என்பதைக் கண்டோம். அது எவ்வகையில் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது.

மஹாநாராயண உபநிஷத்தில் சொல்லப்படும் ஸ்லோகம் இது.

ததேவ அக்னிஸ் தத் வாயு: தத் ஸூர்யஸ்தது சந்த்ரமா: |

ததேவ சுக்ர மம்ருதம் தத்ப்ரஹ்ம ததாபஸ் ஸ ப்ரஜாபதி: || (1.2.2)

அதுவே அக்னி, அதுவே வாயு, அதுவே சூரியனும் சந்திரனும். அதுவே பிரகாசிக்கும் நட்சத்திரமும் அமிர்தமும். அது பிரம்மம், அது நீர், அதுவே ப்ரஜாபதி…

இப்படி உபநிஷத் சொல்லும் வாக்கியத்தை எல்லோரும் எளியவகையில் புரிந்துகொள்ளமுடியும் என்று சொல்வதற்கில்லை. எனவேதான் ஆழ்வார் எளிய தமிழில் இதே உபநிஷத் கருத்தை வெளிப்படுத்துகிறார் இப்படி… நாராயணனே எல்லாமும் என்பதை எடுத்துரைக்கும் அழகிய வெண்பா இது.

நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்

நீயே தவத் தேவ தேவனும் நீயே

எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து

இரு சுடரும் ஆய இவை

கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டில் – எழுதப்பட்டது இந்த வெண்பா.

ஆழ்வார் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தக் கடவுளைப் பார்த்து,

நீயே எல்லா உலகமும்!

பூவுலகில் நிலைத்திருப்பவை எல்லாம் உன் அருளே!

தேவர்களுக்கெல்லாம் தேவனும் நீயே!

நீ நெருப்பு,

மலையும் நீயே!

எட்டுத் திசைகளும் நீயே!

சூரிய சந்திரராய் ஒளிர்வதும் நீயே!

– என்றவாறு இந்தக் கருத்தை விவரித்துப் போகலாம். இப்படி நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் எல்லாமே வேதக் கருத்துகளை விளக்க வந்தவையே. அவ்வகையில் ஆழ்வார்கள் வேதம் தமிழ் செய்தவர்கள் என்று சொல்லத் தடையில்லையே!

ஆழ்வார்களின் திருநாமங்களையும் அவர்களின் அவதார தினங்களையும் வைணவ ஆசார்யரான சுவாமி மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்னமாலையில் அழகு வெண்பாவில் அமைத்துத் தந்திருக்கிறார்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை

ஐயனருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட

நாதன் அன்பர்தாள்தூளி நற்பாணன் நற்கலியன்

ஈதிவர் தோற்றத்தடைவா மிங்கு.

– என்ற உபதேசரத்னமாலை வெண்பா மூலம் ஆழ்வார்களின் வரிசையை நாம் அறிந்துகொள்ளலாம்.

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசையாழ்வார்

5. நம்மாழ்வார்

6. குலசேகராழ்வார்

7. பெரியாழ்வார்

8. தொண்டரப்பொடியாழ்வார்

9. திருப்பாணாழ்வார்

10. திருமங்கையாழ்வார்

11. ஆண்டாள்

12. மதுரகவியாழ்வார்

என்று இந்த வெண்பாவின் மூலம் ஆழ்வார்களை வரிசைப்படுத்தலாம். ஆழ்வார்களின் கால நிலைப்படியும்  வரிசைப்படுத்தலாம்.

ஆழ்வார்கள் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது?

இந்தப் பன்னிரண்டு பேருக்கும் ஆழ்வார்கள் என்று ஏன் பெயர் ஏற்பட்டது என்றால், இவர்கள் பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியைக் கொண்டிருந்தவர்கள் என்பதால்தான். இலக்கணப்படி இது வினையால் அணையும் பெயர். இறைவனிடத்தில் ஆழ்ந்த மனம் கொண்டிருந்த காரணத்தால் ஆழ்வார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. அவர்களுடைய மனம் எதிலெல்லாம் ஆழ்ந்திருந்தது…? ஆதிப்பரம்பொருளான பகவான் நாராயணனிடத்தில் ஆழ்ந்திருந்தது. அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்திலே, திவ்யமங்கள விக்ரஹ அழகிலே, அநந்த கல்யாண குணங்களிலே, திவ்ய அவதாரங்களிலே, அவன் எழுந்தருளியிருந்த திவ்ய தேசங்களெலேயெல்லாம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இந்த ஆழ்ந்த ஈடுபாட்டை ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள பிரபந்தப் பாசுரங்களில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஆழ்வார்களின் காலம்

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இயற்றிய இந்த ஆழ்வார்கள் எல்லோரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். சங்க காலத்துக்குப் பிற்பட்டவர்கள்.

பூதத்தாழ்வார் பாடலில் மாமல்லை என்கிற துறைமுகத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. பல்லவ மன்னனான மகேந்திரனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் ஏற்பட்டது மாமல்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறித்துள்ளார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், முதலாழ்வார்கள் காலம் கடைச் சங்க காலமான 575–600 என்று கொள்கிறார்கள். முதலாழ்வார்களின் காலத்தைக் கொண்டு கணக்கிட்டால், கிட்டத்தட்ட ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் இவர்கள் என்று சொல்லலாம்.

ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி பல ஆராய்ச்சிகள் உள்ளன. டாக்டர் மு.ராகவையங்கார் எழுதிய ஆழ்வார்கள் கால நிலை என்ற நூல் பல தகவல்களைத் தருகிறது. ஓரளவு வரலாற்றுக் கால அளவோடு இயைந்து போவதால், இதை முன்மாதிரியாகக் கொள்ளலாம். அவருடைய கருத்துகள் அத்தனையுடனும் இயைந்து போக முடியாவிட்டாலும், அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முறை விஞ்ஞானபூர்வமானதாக பலரும் ஏற்கிறார்கள்.

அதேநேரம், வைணவ சம்பிரதாயப்படி ஒழுகும் நூல்களின் அடிப்படையில் பார்த்தால், ஆழ்வார்களின் காலம் பற்றிய கணக்கீடு, வரலாற்றுக் காலத்தோடு முரண்படுவதாகவே தோன்றும்.  வைணவ நூல்கள் அவ்வளவாகச் சரித்திர உண்மை பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதால், நாம் அவர்கள் வாழ்ந்த காலத்துக்கான ப்ரமாணமாக இவற்றை வைத்துக்கொள்ள இயலாவிட்டாலும், தத்துவத்துக்காகவும், பக்திக்காகவும் சம்பிரதாய நூல்களை ப்ரமாணமாக ஏற்கவேண்டும்.

இந்த அடிப்படையில், சுவாமி ராமானுஜர் காலத்தவரான கருடவாகன பண்டிதர் சமஸ்க்ருதத்தில் இயற்றிய திவ்ய சூரிசரிதத்திலும், மணிப்ரவாள நடையில் பின்பழகிய பெருமாள் ஜீயர் எழுதிய ஆறாயிரப்படி குருபரம்பரை நூலிலும், ஆழ்வார்கள் பிறந்த திருநட்சத்திரங்கள், அவர்களுடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை விவரித்துச் சொல்லப்பட்டுள்ளன.

ஆழ்வார்களையும் அவர்களுடைய சிறப்புகளையும் உபதேசரத்னமாலையில் அழகுறத் தெரிவிக்கும் மணவாளமாமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை உயர்வாக மதிக்கவேண்டுமேயல்லாது, தாழ்வாக நினைத்தல் தகாது என்கிறார்.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள்தாம் வாழி

செய்யமறை தன்னுடனே சேர்ந்து..

– என்று அவர்களுக்கான வாழ்த்துதலைச் சொல்கிறார். ஏழு உலகங்களும் உய்வடைவதற்காக அவர்கள் உரைத்த பிரபந்தங்கள் வாழவேண்டும்; வேதங்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மேலும்,

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்

அருளிச்செயலை அறிவாரார் – அருள்பெற்ற

நாதமுனி முதலான நம் தேசிகரையல்லால்

பேதை மனமே உண்டோ  பேசு.

ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும்

தாழ்வா நினைப்பவர்கள்தாம் நரகில் – வீழ்வார்கள்

என்றுநினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீயவர்பால்

சென்றணுகக் கூசித் திரி.

என்று, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை தாழ்வாக நினைத்தால், அவர்களுக்கு நரகமே கிட்டும் என்பதை அறிந்து, அவர்களோடு சேர்வதற்கு நீ மனதால் அஞ்ச வேண்டும் என்கின்ற அறிவுரையையும் தருகிறார் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.

மற்ற மத ஆசார்யர்களைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒரு சமயத்தைப் பிடித்துக்கொண்டு அந்தக் கருத்திலேயே உழன்று வருகின்ற அவர்களிடையே மத விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல் கருத்துவேற்றுமை ஏற்பட்டதுண்டு. ஆதிசங்கரர், பாஸ்கரர், ராமானுஜர் காலத்தில் யாதாவப்ரகாசர் முதலியவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை நிலவியதில்லை. மாறுபட்ட விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் அவதரித்த ஆழ்வார்களுக்குள்ளே ஒரே கருத்து விளைந்திருந்தது. அவர்கள் நாராயண பரத்வத்தை ஒரே குரலில் உரக்கச் சொன்னார்கள். ஒருவர் கருத்தை அறிந்து காலத்தால் பிற்பட்ட மற்றவர் பின்பற்றினார் என்பது அல்ல இதன் பொருள். உண்மைத் தத்துவமான ஒரே கருத்தினையே அவர்கள் இறைவன் மூலமாக உணர்ந்து, வெவ்வேறு காலங்களில் வெளிப்படுதினார்கள் என்பதே நாம் அறிய வேண்டியது. இதனாலேயும் இவர்களுடைய பிரபந்தப் பாசுரங்களை ப்ரமாணமாகக் கொள்ளலாம் என்பது பெரியோர் கருத்து.

இன்றைக்கு பரிகாரத்தின் பெயரால் பல்வேறு பூஜை மந்திரங்களும் உலாவரக் காண்கிறோம். லாபம் கருதி மந்திரங்களைச் சொல்லி வருவதையும் பார்க்கிறோம். ஆனால் ஆழ்வார்கள், இதுபோன்ற லாபக் கணக்கும், பலன்களும் கருதி, பாடல்களைப் புனைய வேண்டுமே என்கின்ற நிர்பந்தத்தால் பாடவில்லை. இயற்கையாகவே, பக்திப் பெருக்கெடுத்து, பகவானின் ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து அன்பு மேலீட்டால் தாமாகவே வந்த சொற்கள்தான் ஆழ்வார்களுடையது.

வேதமே ப்ரமாணம்

பிணங்கும் சமயங்கள் பலவும் இருக்கையில் தத்வ நிர்ணயம் செய்யும்போது, ப்ரமாணம் கொண்டே நிச்சயிக்கவேண்டும். ப்ரமாணம் மூன்று வகைப்படும். ப்ரத்யக்ஷம் – அதாவது நேரிலேயே காண்பது ; அனுமானம் – ஒன்றின் உண்மைத் தன்மையால் மற்றொன்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது ; சாஸ்த்ரம் – அதாவது, அறிந்தவர்கள் கொண்ட சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்துகொள்வது…

இப்படி மூன்று ப்ராமணங்கள் இருந்தாலும், சாஸ்த்ரப் ப்ராமணம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பிரத்யக்ஷம் மற்றும் அனுமானங்களால் அறியமுடியாத புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை சாஸ்திரம் கொண்டே அறியவேண்டும். அந்த சாஸ்திரங்களில் தலையாயது வேதம்.

வேதங்களைத் தொகுத்த மகாமுனியான வேதவியாச முனிவர், கங்கைக்கரையில் நின்று சத்தியம் செய்வதாக இந்த வாக்கைச் சொன்னார்… வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி, நதைவம் கேசவாத் பரம் – என்று வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் உயர்ந்த ப்ரமாணமில்லை; கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறில்லை என்று சொன்னார். எனவே வேத சாஸ்த்ரங்களைக் கொண்டே ப்ரமாணம் கண்டறிய வேண்டும்.

வேதங்களே ப்ரமாணமாகிறது என்றால், வேதங்களால் அறியப்படும் பரம்பொருள் நித்யன் – அதாவது என்றுமுள்ளவன்; பிறப்பு முதலிய தோஷங்களால் தீண்டப்படாதவன்…

அதுபோல் அவன் புகழ் பாடும் வேதங்களும் நித்யமானவை, ஒருவரால் செய்யப்படாதவை என்பதால் மனிதர்களால் இயற்றப்படும் நூல்களுக்கு உண்டான குற்றங்கள் வேதங்களுக்குக் கிடையாது.

ஆழ்வார்கள் பாசுரங்களே பிரமாணங்கள்

வேதங்களின் தொடர்ச்சியாக ஏற்பட்ட தத்துவங்களை உபதேசிக்கின்ற தத்துவ தர்சிகள் யார் என்று நிச்சயிக்க வேண்டும். வேத வியாசர், பராசர முனிவர்  முதலிய ரிஷிகளும் தத்வ தர்சிகள்தான். ஆழ்வார் ஆசார்யர்களும் தத்வ தர்சிகளே. இவர்களில் நமக்கு மிக நெருங்கியவர்கள் யார் என்பதைப் பார்க்க வேண்டும். ரிஷிகளும் ஆழ்வார்களும் தத்வதர்சிகள் ஆனாலும் இரு வகையினருக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு.

ரிஷிகள் தங்கள் சுய முயற்சியால் ஞானம் பெற கடுந்தவம் செய்து ஞானமடைந்தனர். கடுந்தவத்தின் பயனாக, தவத்தின் தன்மைக்கேற்ப அவர்களுடைய ஞானமும் அமைந்தது. கடுந்தவத்தின் பயனாக இறைவன் அளித்த ஞானத்தை வெளிப்படுத்தியவர்கள் இந்த ரிஷிகள்.

ஆனால் ஆழ்வார்களின் பங்கு வித்தியாசமானது. ஆழ்வார்களைக் குறிப்பிடும்போதே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் என்றே சொல்வார்கள். அயர்வரும் அமரர்கள் அதிபதியான பகவானின் பேரருளாலே இயற்கை ஞானம் அளிக்கப்பட்டு அவதரித்தவர்கள் ஆழ்வார்கள். பக்திரூபமான பரிபூர்ண ஞானம் அடையப்பெற்ற ஆழ்வார்களின் ஞான முத்துக்கள்தான் பிரபந்தப் பாசுரங்கள் என்பது பெரியோர் வாக்கு.

பகவத் ராமானுஜர், பிரம்மசூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதும்போது, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் துணைகொண்டு உரை எழுதினார் என்பது வரலாறு. ஆகவே ஆழ்வார்களே நமக்கு வழிகாட்டிகள். அவர்களுடைய பாசுரங்களே நமக்கு ப்ரமாணங்களாகின்றன.

ஆழ்வார்கள் விஷ்ணு புராணத்தை ஒட்டிப் பாடியவை

நாராயண பரத்வத்தையும், ப்ரமாணமாகக் கொள்ளத் தக்க விஷ்ணு புராணத்தின்படியும் ஆழ்வார்கள் பாடிய தமிழ் மறை இவை…

பொய்கையாழ்வார்:

இது நீ படைந்திடந்து உண்டு உமிழ்ந்த பார், திசையுறு தெய்வமும் தெய்வத் திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் காரோத வண்ணன் படைத்த மயக்கு – என்றும் பாடியுள்ளார்.

பூதத்தாழ்வார்:

இருந் தண்கமலத் திருமலரின் உள்ளே திருந்து திசைமுகனைத் தந்தாய் — என்கிறார்.

பேயாழ்வார்:

கருங்கடலை நேரே கடைந்தானைக் காரணனை – என்று உலகுக்கான காரணனைக் காட்டுகிறார்.

திருமழிசையாழ்வார்:

ஆதியாதி யாதி நீ ஓரண்டமாதி, ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ, நான்முகனை நாராயணன் படைத்தான், காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கறிந்தேன் நான் – என்று அடுக்குகிறார்.

நம்மாழ்வார்:

மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கெல்லாம் நாவிக்கமல முதற்கிழங்கே!, தேவும் எப் பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன், ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான் …… – என்று ஆதிப்பிரானைப் பாடுகிறார்.

குலசேகராழ்வார்:

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெலாம் படைத்தவனே, தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே, தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே – என்று படைப்புச் செயலுக்கு ப்ரமாணமாகக் கூறுகிறார்.

பெரியாழ்வார்:

கண்ணா, நான்முகனைப் படைத்தாய் காரணா, முன்னை அமரர் முதல் தனிவித்தினை, ஊழிதோறூழி உலகு படைத்து உண்ட மணி வயிறா – என்று நாராயணனின் காரணத் தன்மையைப் பாடுகிறார்.

தொண்டரடிப்பொடியாழ்வார்:

மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ!, அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி – என்று உலகம் உண்டு உமிழ்ந்து அளந்த செயலைப் பாடுகிறார்.

திருமங்கையாழ்வார்:

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியான மைந்தன், பூவலர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த தேவர் நாயகன் – என்று பகவானின் குணவிசேஷத்தைக் கூறுகிறார்.

ஆண்டாள் :

வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை, நாட்டைப் படையென்று அயன் முதலாத் தந்த நளிர்மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் – என்று அவன் விளையாடலைச் சொல்லி மகிழ்கிறார்.

இப்படி நாராயணனுடைய காரணத்துவத்தை ஆழ்வார்கள் பாடிப் பரவினார்கள்.

சாதிக் கொள்கையை வேரறுக்க வந்தவர்கள்

ஆழ்வார்கள் அனைவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்களும் இல்லை. முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஑அயோநிஜர்கள்ஒ என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் மூவருமே கண்டெடுக்கப்பட்டவர்கள்; ரிஷிகளாக இருந்தவர்கள் என்று தெரியவருகிறது.

திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவர் பாட்டிலிருந்தே தெரிகிறது.

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்

– என்று அவரே சொல்லிக் கொள்கிறார். பெரியாழ்வார் வேயர் குல அந்தணர் (மூங்கிலைச் சார்ந்த பார்ப்பனக் குடியினரை வேயர் என்று சொன்னார்கள்). பெரியாழ்வாரால் ஒரு துளசித் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, ஆண்டாள். திருமங்கையாழ்வார் கள்வர் குலத்தைச் சார்ந்தவர். குலசேகர ஆழ்வார் சேரநாட்டு அரச குலத்தைச் சார்ந்தவர். திருப்பாணாழ்வார் அந்திம வம்சம் பஞ்சம குலம் என்று அப்போது அழைக்கப்பட்ட பாண வம்சத்தில் பிறந்தவர். தொண்டரடிப் பொடியாழ்வார் பிராமணர். நம்மாழ்வார் வெள்ளாளர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் மாணாக்கரான மதுரகவி, பிராமணர். இவ்வாறு எல்லாக் குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.

சாதி வித்தியாசம் பார்க்காமலிருப்பது வைணவக் கருத்துக்களில் தலையாயது.

தொண்டரடிப் பொடியாழ்வார்,

இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில்

தொழுமினீர் கொடுமின் கொண்மின்

– என்று, வைணவராக இருந்தால் போதும்; குலம் முக்கியமில்லை; அவர்களைத் தொழுது அவர்களுக்குக் கொடுக்கலாம், கொள்ளலாம் என்று சொன்ன, சாதிபேதமற்ற வைணவத்தின் ஆணிவேர் ஸ்ரீராமானுஜர் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் நம்மாழ்வார்,

குலத்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து

நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு

ஆள் என்று உள்கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே

– எத்தனைதான் கீழான சாதியராக இருந்தாலும், சக்கரத்தை வலது கையில் வைத்திருக்கும் விஷ்ணுவின் ஆள் நான் என்று உள் கலந்துவிட்டால், அவர்களின் அடியவர்களுக்கு அடியவர் நாங்கள்- என்று கூறும் இந்தக் குரல், ஆழ்வார்களின் ஏழு/எட்டாம் நூற்றாண்டுகளிலேயே சாதி பாராட்டாத பக்திக் குரல்.

தொண்டர் குலமே தொழுகுலம் என்று போற்றிய இந்தத் திருமால் தொண்டர்களின் வாழ்க்கையையும் அவர்களின் பாசுரங்களில் விரவிக் கிடக்கும் கவியழகையும் பக்திச்சிறப்பையும் வாசித்துச் சுவைத்து மகிழ்வோம்.{jcomments on}

Leave a Reply