திருப்புகழ் கதைகள்: தலைவலி மருந்தீடு!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 232
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தலைவலி மருத்தீடு – பழநி

ஆதிசங்கரர் அருளிய ஸுப்ரமண்ய புஜங்கத்தில் வருகின்ற 25வது ஸ்லோகம் முருகனின் அருள் எப்படி நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றும் எனச் சொல்லுகிறது

अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |

பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||

என்பதாகும். இந்த ஸ்லோகத்துல அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயார்சம், ப்ரமேஹம், ஜ்வரம்,குல்மாதி ரோகா: .. இத்தனை ரோஹங்களைச் சொல்றார்.

வலிப்பு, குஷ்டம், க்ஷயம், சுவாச ரோகம், மேஹ ரோகம், ஜ்வரம், சித்த பிராந்தி, வயிற்று வலி இப்படிப் பல விதமான வியாதிகள் உடம்பைப் படுத்துகிறது. மனதில் இருக்கிற கவலைகளாவது அது பாட்டுக்கு இருக்கும். அந்தக் கவலைகளோடு நாம் நமது செயல்களைச் செய்துகொண்டு இருக்கலாம். உடல் நோய் ஏற்பட்டால், நோயில் படுத்துவிட்டால், வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஒரு விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் படுத்திருப்பவர்களைக் கேளுங்கள்; கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு இருக்கும் நபரைக் கேளுங்கள். அவர்கள் இதன் வேதனையைச் சொல்லுவார்.

அப்படி உடம்புக்கு வருகிற வியாதிகளை எல்லாம் போக்குவதற்கு ஒரு உபாயம் உள்ளது. அது என்னவென்றால் திருச்செந்தூர்ல பன்னீர் இலையில் வைத்துக் கொடுக்கின்ற விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டால் எல்லா வியாதிகளும், ஒரு க்ஷணத்தில் ஓடி மறைந்து விடுகின்றன.

நமது சென்னைக்குப் பக்கத்தில உள்ள திருத்தணி முருகரை பவரோக வைத்யநாத பெருமாள் எனச் சொல்லுவார்கள். இத்திருப்புகழில் வருகின்ற வரிகளான

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

என்ற வரிகளின் மூலம் – தலைவலி, வசியம் போன்றைவகளுக்கான மருந்திடுதலினால் வரும் நோய்கள், காமாலை, சோகை ஆகிய நோய்கள், வெப்பு நோய், கண்ணோய், வறட்சி, வயிற்று வலியைத் தரக்கூடிய சூலை நோய், சுவாச மண்டலத்தில் வரக்கூடிய காச நோய், நிரிழிவு நீயாகிய அதிசலம், கொடிய விஷநோய்கள், மாயா விகராத்தால் (காமவிகாரத்தால்) வரும் நோய்கள் முதலியவை அடியேனை வந்து அணுகாமலிருக்கவும், இந்நிலவுலகின் மேல் இருக்கின்ற வைத்தியர்களிடம் சென்று, மேற்கூறிய நோய்களின் துன்பத்தையும் அந்நோய்களின் பேரையும் விவரமாக எடுத்துச் சொல்லி, இந்நோய்களை நீக்குவீர். என்று சொன்னால், அவ்வைத்தியர்கள் நான் சொன்னது காதில் விழாதது போல் இருந்து, “வயதின் முதிர்ச்சியால் நோய்கள் வருகின்றன. ஆதலால் அப்படி தளர்ந்து கொண்டே வரும் உடலை பழையபடி இளமையாக மாற்ற நீங்கள் எனக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர் சொல்லுங்கள்” என்று சொல்லவும், அதனைக் கேட்கும்படி அடியேனை அந்த வகையில் வைத்தியரிடம் சென்று அலையுமாறு விதியாமல் முருகப் பெருமானெ எனக்கு அருள்புரிவாயாக என அருணகிரியார் இவ்வரிகளில் வேண்டுகிறார்.

புகழ்பெற்ற திருச்செந்தூர் கந்தர் சஷ்டி கவசத்தில்

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி . . . . . . . . . .

என்று சொல்லப்படுகிறது. முருகனை நினைத்தால் முற்றிய வினைகள் பறந்தோடும். எனவே அன்பு நண்பர்களே, உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் முருகன் கோயிலில் வழிபாடு செய்யுங்கள். இன்பத்திலும் துன்பத்திலும் அவனையே சரணடையுங்கள். திருமுருகாற்றுப்படையில் சொல்லியது போல

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன்
பன்னிருகைக் கோலப்பா
வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா
செந்தி வாழ்வே!

என்று அவனைச் சரணடையுங்கள்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply