திருப்புகழ்க் கதைகள் 231
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தலைவலி மருத்தீடு – பழநி
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியறுபத்தியாராவது திருப்புகழ், ‘தலைவலி மருத்தீடு’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, நோயற்ற வாழ்வும், அடியார் உறவும் அடியேனுக்குத் தந்து, அடியேன் உனைப் பாடிப் பரவ, மயில் மீது வந்து அருள வேண்டும” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு… மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …..வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ……மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – அலைகளை வீசும் கடலில் அணைக் கட்டிச் சென்று, மிகவும் கொடிய செயலை உடைய இராவணனுடைய இரத்தினங்கள் இழைத்த கிரீடங்களோடு கூடிய தலைகளை அறுத்து வீழ்த்தி, தனது ஆருயிராக இருக்கும் சீதாதேவியை சிறை மீட்டு அழைத்துக் கொண்ட திருமாலை மாமனே என அழைக்கும் மருகரே; அறுகம் புல்லைச் சூடியுள்ளவரும், உலகங்களுக்கும் உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பவரும், மழுமானைத் தரித்தவரும், மகா காளிதேவி தோற்று நாணத்தை அடையுமாறு (தேவர் மூவாதிகள் சேர்ந்துள்ள) சிற்சபையின் கண், முன்னாளில், ஆனந்த அற்புதக் கூத்தாடுகின்றவருமாகிய சிவபெருமானை சிறப்புடைய தந்தையே என்று அழைக்கும் வண்ணம் திருப்புதல்வராக வந்தவரே;
பலப்பல அறிவு நூல்களைப் படித்ததன் பயனாக உமது திருவருட் புகழை ஓதுகின்ற புலவர்களது நாவினிடத்து உறையும் இரண்டு திருவடிகளை யுடையவரே; விசாலமான புலமையை உடையவரே; வேலாயுதரே; தினைப்புனத்தில் உயரமாகச் செய்துள்ள பரண் மிசை இருந்த குறவர் மகளாகிய வள்ளி பிராட்டியாரது தோள் புணர அன்பு கொள்ளும் மணவாளரே; தாமரைகளோடு கூடிய வயல்களில் வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் மீது வரால்கள் பாய்ந்து வளம் பெற்றுள்ள பழநிமலை மீது எழுந்தருளியுள்ள, பொருமையின் மிக்கவரே;
தலைவலி, மருத்தீடு, காமாலை, சோகை, சுரம், கண்ணோய், வறட்சி, சூலை, சுவாசகாசம், நீர்க்கோப்பு, விஷப்பீடைகள் முதலிய பிணிகள் அடியேனை வந்து அடையாமலிருக்கவும் உலகத்தில் அந்நோய்கட்குரிய பேர்களையும் நோய்களின் வகைகளையும் வைத்தியரிடம் கூறி, இவற்றை நீக்கிவைக்க வேண்டும் என்னும்போது, அவர்கள் தமது மருத்துவச் செருக்கால் காது கேளாதது போல் நடித்து “தளர்கின்ற வயதை தளராவண்ணம் செய்வதற்கு என்ன பொருள் தருகிறீர்?” என்று கேட்கும்படி அடியேனை விதிக்கா வண்ணமும், வாட்டம் அற மலர்ச் சோலையில் சென்று விருப்பத்துடன் வகை வகையாக மலர்களை எடுத்துத் தொடுத்த மாலையாகிய ஆபரணத்தை தேவரீரது திருவடிகளில் சூட்ட வேண்டும் என்று அன்புடன் எண்ணுகின்ற, பெருந்தவசிகளுடைய பாததாமரைகள் இரண்டையும், அடியேனுடைய உள்ளத்தில் தரித்து, வினாவுதலோடு பாடி, திருவருள் நெறியில் நிற்கவும் அடியேனுக்குக் கருணையுடன் உமது திருவடியைத் தருமாறும் பாம்பை எடுத்து ஆடுகின்ற மரகத மயில் மீது எழுந்தருளி வருவீராக – என்பதாகும்.
நோயற்ற வாழ்வுதானே நம் அனைவரின் விருப்பம். கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்றால் அனைவரும் துன்பப்படுகின்ற நேரம் இது. உலகில் எத்தனை வகையான நோய்கள் இருக்கின்றன? குறைந்தபட்சம் அருணகிரியார் காலத்தில் எத்தனை வகை நோய்கள் இருந்தன? நாளை காணலாம்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com