e0af8d-e0aeb5e0aebee0aeb0e0aea3.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 113
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நிறுக்கும் சூது அன – திருச்செந்தூர்
வாரணம் பொருத மார்பன்
தோல்வி என்பதையே தன் வாழ் நாளில் அறிந்திராத இராவணன் ஒரு மானுடன் தன்னை ‘இன்று போய் நாளை வா’ என்றானே என்று வருந்துகிறான். அவன் ஊர் திரும்பிய காட்சி பரிதாபமானது. தலை குனிந்து, மகுடங்களை இழந்து வெறும் தலையனாய், கையில் ஆயுதங்கள் எதுவுமின்றி, உடலெங்கும் காயத்துடன், மனம் முழுதும் வருத்தம் மேலிட, மண்மகள் முகம் நோக்கி மெல்ல நடக்கும் காட்சி நம் கண்முன் வந்து நிற்கிறது. அப்போது அவனைக் காண்பித்து நமக்கு அவன் பெருமைகளை பட்டியலிடுகிறார் கம்பர். என்ன சொல்லுகிறார்?
வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்
இந்த இடத்தில் இராவணனுக்கு உரிய பெருமைகளை எல்லாம் பட்டியலிடுகிறார் கம்பர். அவைகள் எவை?
முதலில் “வாரணம் பொருத மார்பன்”. எட்டு திசைகளையும் காக்கும் யானைகளோடு மோதி போரிட்டு, அதனால் அவற்றின் தந்தங்கள் தனது மார்பில் புக, அவற்றை அப்படியே ஒடித்து விட்டு, மார்பில் தந்தங்கள் பதியப் பெற்ற பெருமையை உடையவன்.
அடுத்து, “வரையினை எடுத்த தோள்”. இராவணன் சிறந்த சிவ பக்தன். தினமும் சிவபெருமானை வழிபட கைலாயம் சென்று வணங்கிய பின்னர்தான் உணவு உண்பான். அப்படி தினமும் கைலை மலைக்குச் சென்று வர சிரமமாக இருந்ததால் கைலை மலையைப் பெயர்த்து இலங்கைக்குக் கொண்டு வர்ந்துவிடலாம் என்று நினைத்து அதைப் பெயர்க்கப் போய், நந்தி தன் காலால் அழுத்த மலை இடுக்கில் மாட்டிக் கொண்டு இராவணன் கதறி அழுது, சாம கானம் பாடி சிவபெருமானின் மனம் குளிரச் செய்து தன்னை மீட்டுக் கொண்டான். அப்படிப்பட்ட தோள்வலி உள்ளவன் இராவணன்.
பிறகு “நாரத முனிவருக்கேற்ப நயம்பட உரைத்த நாவுடையவன்”. சாம கானத்தால் தன் நா வலிமையை நிலை நாட்டியவன்.
மாலைகளை அணிந்த மணிமுடிகளைத் தன் தலைகளில் தாங்கியவன்.
இவனுடைய தவத்தை மெச்சி சிவபெருமான் இவனுக்கு “சந்திரஹாசம்” எனும் எவராலும் வெல்ல முடியாத ஒரு வாளைப் பெற்றவன்.
நிறைவாக இயல்பாக இவனுக்கு அமைந்த வீரம். இத்தனைப் பெருமைகளையுடைய இராவணன், அவை அத்தனையையும் களத்தில் போட்டுவிட்டு வெறும் கையனாகத் திரும்பிப் போகிறான் என்று கம்பர் வர்ணிக்கிறார்.
இத்தனைப் பெருமைகளை உடையவன் அவற்றை எங்ஙனம் இழந்தான்? முதல் நாள் யுத்தத்தில் அனுமனோடு நேருக்கு நேர் நின்று போரிட்ட போது அனுமன் விட்ட குத்து ஒன்றினால் அவன் மார்பில் பதிந்திருந்த அஷ்ட திக் கஜங்களின் தந்தங்கள் எல்லாம் பொல பொலவென்று கீழே கொட்டிவிட்டன. அதனால் அந்தப் பெருமை ஒழிந்தது.
கைக் குத்துஅது படலும், கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தடமார்பில்,
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில்
புக்கு இற்றன, போகாதன, புறம் உக்கன, புகழின்.
(கம்பராமாயனம், யுத்தகாண்டம், முதற்போர்புரி படலம், பாடல் 7192)
அனுமனின் கைக்குத்துப் பட்டவுடன், வீர கண்டைகள் அணிந்த அரக்கர்களின் தலைவனாகிய இராவணனுடைய இரத்தக்கறை நீர் படிந்த, அஞ்சனக் குவியலின் அழகைக் கொண்டு ஒளிர்கின்ற வயிரம் போன்று திண்ணிய அகன்ற மார்பில்; எட்டுத் திக்குகளிலும்
உள்ள மதங்கொண்ட யானைகளின் வலிய கொடிய தந்தங்கள் போரில் தாக்கியபோது முறிந்து போனவையாய் அந்த மார்பிலேயே அகலாது நின்றவை அந்த இராவணனது புகழ் போல வெளியேறி வீழ்ந்தன.
திருப்புகழ் கதைகள்: வாரணம் பொருத மார்பன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.