சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்
63" />
*வைரஸ் காய்ச்சல் பிணியகற்றும் அருள்மிகு ஜூரஹரேஸ்வரர்*
பொதுவாக உயிரினங்களில் ரத்த ஓட்டத்தால் உடல்சூடு ஒரு குறிப்பிட்ட அளவு இருந்து கொண்டே இருக்கும். அது அதிகரிக்கும் போது சுரம் என்கிறோம். உடல்சூடு குறைந்து போகும் போது ‘ஜன்னி’ என்று அழைக்கிறோம்.
சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட் இருக்க வேண்டும். அதிர்ச்சி, ஓட்டம், உடற்பயிற்சி, சுற்றுப்புற வெப்பம் உயர்தல் போன்றவற்றால் உடல் வெப்பநிலை சற்று மாறுபடும். பிறகு இயல்புநிலைக்கு வந்துவிடும்.
ஆனால் உடல் இயக்கத்துக்கு தேவையில்லாத சில வேதிப் பொருட்கள், வைரஸ் என்னும் நச்சுயிரி, பாக்டீரியா என்னும் நுண்ணுயிரி போன்றவை உடல் செல்களில் நுழைந்து தங்களது நச்சுத் தன்மையை வெளியிட்டுத் தூண்டுவதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்குகிறது
- இதைத்தான் சுரம் – காய்ச்சல் என்கிறோம். இது ஒரு நோயின் அறிகுறியே தவிர நோய் அல்ல.
எப்படி இருப்பினும் உடல் உஷ்ணம் உயர்ந்தால் தலைவலி, உடல் தசை வலி, கைகால் வலி, கண் மூக்கு போன்ற உறுப்புகளில் நீர்வடிதல், அசதி, சோர்வு, உணவு உண்ண முடியாமை, நடக்க முடியாமை போன்றவை நோய்க்குத் தக்கபடி தோன்றும். ஆங்கில முறைப்படியோ, பிற மருத்துவங்களோ நோய்க்கு ஏற்ப தேவைப்படும்.
அப்போது நோயாளிகளுக்கு மருந்துடன் மன அமைதியும், உடல் ஓய்வும், தன்னம்பிக்கையும், உணவு கட்டுப்பாடும் அவசியம். இதில் சாதாரண வைரஸ் மூலம் விரைவில் அனைவருக்கும் பரவும் குளிர் காய்ச்சலுக்கு, மற்ற மருந்துகளுடன் கஷாயம் போன்றவைகளையும் சேர்த்துக் கொடுத்து ஓய்வெடுக்கச் சொல்வார்கள். இந்த நோய் மூன்று அல்லது நான்கு நாட்களில் குறைந்துவிடும். ஏனெனில் எந்த ஒரு வைரசுக்கும் நேரடியாக அழிப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்பது நாடறிந்த உண்மையாகும் .
ஆனால் நமது மூதாதையர்கள் இறைவன் பால் வைத்த நம்பிக்கை வடிவமாக,
ஜூரத்தின் வேகத்தைக் குறைத்து நாளும் நலம் நல்கும் மூர்த்தியாக அருள்மிகு ஜீரஹரேஸ்வரர் ( ஜீரஹரதேவர் ) தமிழகத்திலுள்ள சில சிவாலயங்களில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருள் பாலிக்கிறார் என்பது சிறப்பாகும் .
*சம்பந்தரின் திருப்பதிகம்*
கொடிமாடச் செங்குன்றம் என்று இலக்கியங்களில் அழைக்கப்பட்டு வந்த திருத்தலம், இப்போது திருச்செங்கோடு என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மலைமேல் அமைந்திருக்கிறது அர்த்தநாரீஸ்வரர் கோவில். ஒரு முறை சம்பந்தர் தனது அடியார்களுடன் இந்த ஆலயத்திற்கு வந்து தங்கியிருந்தார். அப்போது அடியார்களை மட்டும் அல்லாது அந்த ஊரைச் சேர்ந்த மக்களையும் குளிர் காய்ச்சல் வாடி வதைத்தது.
திருஞானசம்பந்தர் அந்தக் காய்ச்சலுக்கு காரணம் வினை என்று முடிவு செய்தார். இதையடுத்து அவர்,
அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல்போற்றுது நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்’
என்று தொடங்கி பதினொரு தேவாரப் பதிகங்கள் பாடினார். அதன் காரணமாக அனைவருக்கும் காய்ச்சல் குறைந்தது என்பது புராண வரலாறு.
அதுபோலவே மதுரையில் கூன்பாண்டியனை வெப்பு நோய் தாக்கியபோது, அந்த நோயை சமணர்களின் மந்திரங்களால் தீர்க்க முடியாமல் போனது. இதையடுத்து சம்பந்தர் மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலய மடப்பள்ளி சாம்பலைக் கொண்டு வந்து பூசி ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகம் பாடியதும், மன்னனின் உடல் உஷ்ணம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தான் என்பதும் வரலாற்று நிகழ்வு.
இன்றும் சுரம் கண்டவர்கள் மருத்துவம் செய்து கொண்டாலும் கூட, இறைவனையும் நம்பிக்கையுடன் பிரார்த்தித்துப் பரிகாரங்களும் செய்து கொண்டு உடலும், உள்ளமும் நலமாகிறார்கள்.
*ஜூரஹரேஸ்வரர்*
ஜூரத்தின் வேகத்தைக் குறைத்து குணம் வழங்கவல்ல இறைவன் என்பதால் இவருக்கு ஜீரஹரேஸ்வரர் மற்றும் ஜீரஹரதேவர் என்ற பெயர்களில் ஒருசில சிவாலயங்களில் தனிச் சன்னிதிகள் அமைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.
சில கோவில்களில் தனி மூர்த்தங்களாக இருப்பதையும் காணலாம். விதவிதமான தோற்றங்களில் குறிப்பாக மூன்றுமுகம், மூன்று கரங்களுடன் சில இடங்களிலும், சில இடங்களில் சிவலிங்கத் திருமேனியுடனும் இந்த ஜூரஹரேஸ்வரர் காட்சி தருகிறார்.
ஜூரஹரேஸ்வரர் இருக்கும் கோவில்கள் சில..
தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் கோவில்
திருவையாறு ஐயாரப்பர் கோவில்
கும்பகோணம் கும்பேசுவரர் கோவில்
கும்பகோணம் காளகஸ்தீஸ்வரர் கோவில்
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவில்
திருவாரூர் தியாகராசப் பெருமாள் கோவில்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கொண்டீசுரம் பசுபதிநாதர் கோவில்
திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்பர் மாகாணம் மகாகாளேசுவரர் கோவில்
திருவாரூர் முத்துப்பேட்டை அருகில் உள்ள திருஉசாத்தானம் என்ற கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவில்
திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷிஸ்வரக் கோவில்
ஈரோட்டுக்கு வடக்கே உள்ள பவானி என்னும் திருநணா சங்கமேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவில்
தேனி மாவட்டம் சின்னமனூரில்
ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஜுரதேவருக்கு கோஷ்டத்தில் தனி ஸன்னதி உள்ளது.
நெல்லை களக்காடு சத்யவாகீசுவரர் கோவில்
இன்னும் வேறு பல சிவாலயங்களிலும் ஜீரஹரேஸ்வரர் சன்னதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் .
தற்போது உலகை மிரட்டியபடி வலம் வரும் வைரஸ்
ஜூர வேகம் குறையவும், நோய்ப் பிடியில் இருந்து வெளியே வரவும் சிவ சொரூபமான ஜீரஹர ஈஸ்வரருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்து, மிளகு சீரகம் கலந்த ரசம் வைத்து புழுங்கல் அரிசி சாதம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த சாதத்தை காய்ச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டால் நலம் பெறலாம் என்பது ஐதீகம் .
திருஞான சம்பந்தரின் வாக்குப்படி நோயாளிகள் சுத்தமான திருநீறு பூசி திருப்பதிகங்கள் பாராயணம் செய்வதால் உடல் பிணி, உள்ளப் பிணி, அறிவுப் பிணிகளை அகற்றி நாளும் நலம் நல்குவார் அருள்மிகு ஜீரஹரேஸ்வர் என்பது திண்ணமாகும் .