
ஆன்மீக கேள்வி பதில். மகா சிவராத்திரி.
கேள்வி – 4: சிவராத்திரி அன்று உபவாசம் எவ்வாறு செய்ய வேண்டும்?
பதில்: உபவாசம், கண்விழித்தல், சிவ வழிபாடு மூன்றும் சேர்ந்ததே சிவராத்திரி விரதம்.
சாதாரணமாக உபவாசம் என்பது உணவைத் தவிர்ப்பது. இது ஒரு பெரிய தவம். ஏனென்றால் மனிதனுக்கு உணவின் மேல் மோகம் இருக்கும். அதனை அடக்குவதன் மூலம் பல பிறவிகளாக நம் உடலில் சேர்ந்துள்ள சஞ்சித பாவங்கள் விலகிப் போகும்.
இந்த உபவாசத்தால் நாம் தூய்மை அடைகிறோம். சுத்தமானால்தான் சித்தி பெற முடியும். அதனால் உபவாசம் முக்கிய விரதமாக புராணங்களில் பல இடங்களில் கூறியுள்ளார்கள்.

மேலும் சிவராத்திரி அன்று உபவாசம் இருக்கும்போது அவரவர் உடல்நிலையைப் பொருத்து உபவாசம் கடைப்பிடிக்கும்படி கூறப்படுகிறது.
சிலர் கடின உபவாசம் இருப்பார்கள். தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள். அது அவரவர் உடல்நிலையைப் பொறுத்து மேற்கொள்ளப்படுவது. அதைவிட்டு பிடிவாதமாக நான் உபவாசம் இருப்பேன் என்று கூறி உடலை வருத்திக் கொள்ளத் தேவையில்லை. அதற்காக உடலை சுகமாக வைத்துக் கொண்டு எந்த ஆன்மிக சாதனையும் செய்யாமல் இருப்பதும் அபாயம். அதனால் உணவுக் கட்டுப்பாடாவது செய்ய முயலவேண்டும்.
நாவின் ருசிக்காக உண்ணாமல் உயிர் வாழ்வதற்காக சாத்வீகமான பழங்கள், பால் அருந்தி கூட உபவாச விரதம் இருக்கலாம். அதனால் உணவு கட்டுப்பாடு என்பது அத்தியாவசியம். அதேபோல் இரவு உறங்காமல் விழித்திருப்பது.
இவ்விரண்டும் மகா சிவராத்திரி விரத நியமங்கள். இவ்விதம் ஒரே ஒரு மகா சிவராத்திரியாவது திடமாக கடைபிடித்தால் கூட ஓராண்டு கால சிவ வழிபாடு செய்த பலன் கிடைக்கிறது என்று நம் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்