
ஆன்மீக கேள்வி பதில்: மகாசிவராத்திரி.
கேள்வி – 5 : மகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்?
பதில்: மகாசிவராத்திரியின் சிறப்பான நியமங்கள் உபவாசமும் கண்ணுறங்காமையும். இந்த உறங்காத விரதம் என்பது மகா சிவராத்திரிக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளது.
சிலச் சில விரதங்களுக்கு கண் விழித்திருப்பது என்பது கட்டாய நியமம். அதேபோல் சிலச் சில நோன்புகளில் கூட கண் விழித்திருப்பது நியமமாக கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
சில மந்திர தீட்சைகளிலும், சில உபாசனை சம்பிரதாயங் களிலும் கண் விழித்திருப்பது ஒரு விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இதனை ‘அகோ ராத்ரி’ விரதமாக கடை பிடிப்பார்கள்.

லட்சம் திரிகளை ஏற்றும் பூஜைகளில் கூட இரவு கண் விழிக்கும் விரதம் பிரத்தியேகமாக கூறியுள்ளார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் பகலும் இரவும் விழிப்போடு இருந்து பரமாத்மாவை வழிபட வேண்டும் என்பதே. அதனால் உபவாசம் இருந்து விழிப்போடு இருந்து நாம் இரவு முழுவதும் ஆறு கால பூஜைகளும் சிவ வழிபாடு செய்கிறோம்.
ஒரு நாளில் நான்கு மணி நேரத்தை ஒரு பகுதியாகப் பிரித்துக் கொண்டு ஆறுகால பூஜை செய்கிறோம். அப்படியிருக்கையில் அர்தராத்திரி நேரம் கூட வழிபாட்டுக்கு உரியதாகிறது.
அவ்வாறு பூஜை, அபிஷேகம் இவற்றால் நேரத்தை கழிப்பது, நாம சங்கீர்த்தனம், பஜனை, ஜபம் என்றிவ்வாறு மகா சிவராத்திரியன்று பகலும் இரவும் சிவமயமாக சிவத்தலங்களை தரிசித்து, சிவன் கோயில்களில் அமர்ந்திருந்து சிவனையே நினைத்து வழிபடும் நாளே மகா சிவராத்திரி பண்டிகை தினம்.
அதோடு பரமசிவன் நித்தியம் விழிப்போடு இருப்பவர். இது மிகச் சிறப்பான அம்சம். ஏனென்றால் பிரளய காலத்தில் பிரபஞ்சத்திற்கு ஓய்வளிக்கிறார் சிவன். விளையாடிய பின் குழந்தை சோர்வடையும் போது தாய் அவனை உறங்கச் செய்வாள்.

அதே விதமாக இந்த உலகனைத்தும் சோர்வடையும் போது ஓய்வளிப்பவர் பரமாத்மா.
ஓய்வின் போது என்ன நிகழும்? மறுநாள் உழைப்பிற்குத் தேவைய சக்தி கிடைக்கிறது. அதேபோல் பிரபஞ்சத்திற்கு ஓய்வளித்து மீண்டும் நிகழப்போகும் சிருஷ்டிக்குத் தேவையான சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி அளிக்கிறார் படைத்தல் காத்தல் அழித்தலுக்கு காரணமான பரமாத்மாவான சிவபெருமான். அதுபோன்ற காலமே பிரளயம் என்பது.
சிவனுடைய ஓய்வு எப்படிப்பட்டது? பிரபஞ்சத்தில் அனைத்துக்கும் ஓய்வளிப்பவரே தவிர அவருக்கு ஓய்வு கிடையாது. சிவன் எப்போதும் விழிப்போடு இருப்பவர். அவருக்கு உறக்கமுமில்லை சுப்ரபாதமும் இல்லை.
சிவன் ஞான சொரூபம். ஞானம் என்பது எப்போதும் விழிப்போடு இருக்கும் தத்துவம் கொண்டது. அதனால் நித்தியம் விழிப்போடு இருப்பவரான பரமேஸ்வரனை தியானம் செய்கையில் அவருக்குப் பிரியமான இந்த மகா சிவராத்திரி நாளில் அவர் நமக்கு நித்திய விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து நம்முடைய பலவித பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
இதனை தத்துவரீதியாக விளக்கும் போது மிக அழகான பொருள் வெளிப்படுகிறது. இரவு முழுவதும் விழித்திருப்பது என்பது ஞான நிலையின் போது அடையும் ஏகாக்ர ஸ்திதி.

நித்திரை என்பது ‘தெரியாத’ இயல்பு. விழிப்பு என்பது ‘தெரியும்’ இயல்பு. அதனால் எதுவும் தெரியாத அஞ்ஞான நிலையில் இல்லாமல் முழுமையான ஞான நிலையில் இருக்க வேண்டும் என்பது தத்துவ ரீதியான உட்பொருள்.
ஆயின், உலக ரீதியான பொருளும் உள்ளது. அது, உடல் ரீதியாக கண் விழித்திருப்பது என்பது. அததைச் செய்வதன் பலன் அததற்கு உண்டு.
எனவே இவ்விரண்டு பொருள்களையும் நன்குணர்ந்து, உடல்ரீதியாகவும் யோக ரீதியாகவும் பயன் பெறுவோமாக! இது மகா சிவராத்திரியன்று இரவு கண்விழித்து இருப்பதன் பரமார்த்தம்.
தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்