வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தலங்களில் பரமபதவாசல் திறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழா பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நடபெற்ற வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று காலை 5.15க்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலைக் கடந்து எழுந்தருளினார். பக்தர்கள் ரங்கா ரங்கா என்ற முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசித்தனர்.

வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெருமாள் திருக்கோயில்களில் இன்று நடைபெற்றது. பகல்பத்து உத்ஸவம் காணும் ஆலயங்களில் காலையும், இராப்பத்து உத்ஸவம் காணும் ஆலயங்களில் இன்று மாலையும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பகல்பத்து எனப்படும் பத்து நாட்களில் திருமங்கையாழ்வாரின் திருமொழிப் பாசுரங்கள் அரையர் சேவையாக சேவிக்கப்படும். அடுத்து இராப்பத்து எனப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் ஆயிரமும் வைகுண்ட ஏகாதசியை அடுத்து வரும் பத்து நாட்களில் சேவிக்கப்படும். இவையே திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாளென ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து இராபத்து என இருபது நாட்களும் நடத்தப்பெறும். 

ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து திருவிழாயில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை வேளைகளில் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சகிதம் எழுந்தருளி, அரையர்களின் தீந்தமிழ்ப் பாசுரங்களை செவிமடுத்து அருளினார். 

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலைக் கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள், ரங்கா ரங்கா என்ற முழக்கம் மேலிட தரிசனம் செய்தனர். அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபம் பகுதிக்கு நம்பெருமாள் எழுந்தருளினார். இன்று பக்தர்களுக்கு அங்கே சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீரங்கத்தை அடுத்து, திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோவிலிலும், சென்னை திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட திவ்யதேசங்களில் உள்ள கோயில்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களிலும், பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

Leave a Reply