திருப்புகழ்க் கதைகள் 201
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்-
குன்றும் குன்றும் – பழநி
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றி ஐம்பதாவது திருப்புகழ், ‘குன்றுங் குன்றும்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “மாதர் வயப்படாமல், உனது அருள் வயப்பட்டு நிற்க அருள் புரிவாயாக” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் முருகப் பெருமானை வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்
சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் …… விரகாலும்
கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
தனதுரி மையதென நலமுட னணைபவர்
கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் …… மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன …… மருள்வாயே
எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடு மதிசய வினையுறு மலகையை
வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் …… மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை …… யடுவோனே
உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும்
விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை …… புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு …… திறலோனே
அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
கயநிறை வளமுறு சிவகிரி மருவிய …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – கவலையால் ஏங்குகின்ற வஞ்சனும், அற்பனுமான கம்சன் அனுப்பிய அதிசயச் செயலையுடைய பூதனை என்ற பேயை வென்று துண்டு துண்டாகச் செய்து கொன்ற நாராயணரும், ஒரு காலத்தில் இரணியனுடைய உயிரைக் குடித்த நரசிங்கமும், ஆதிசேடனாகிய தோணிமீது துயில்பவரும், பிரம தேவனைப் பெற்றவரும், நீலமேக வண்ணருமாகிய விஷ்ணுமூர்த்தியின் திருமருகரே.
ஒப்பற்ற சூரிய மண்டலம்வரை யளாவியுள்ள கிரவுஞ்சமலை தொளைபடவும், யானை முகம் உடைய தாரகனுடைய உடம்பு நெரிபடவும், டுண்டுண்டுண்டுண் டிண்டிண்டிண்டிண் டிடி என்ற ஒலியுடன் விழுகின்ற ஏழு உலகங்களும் அதிர்ச்சியடையவும், ஒளிபெற்ற சங்குகள் சஞ்சஞ் சஞ்சஞ் என்று சப்திக்கவும், இந்திரன் துதி செய்யவும் அசுரர்களை அழித்தவரே. சிவகுமாரரே. நாங்கள் உமக்கு முக்காலும் அடைக்கலம் என்று கூறி முனி புங்கவர்கள் பணியும், தொந்தம் தொந்தம் தொந்தம் என்ற ஓசையுடன் நடனம் புரிந்தருளும் நடராஜமூர்த்தி பெற்ற ஆறுமுகக் கடவுளே….
வண்டுகள் தங்கி தேன் உண்ணுகின்ற வாசனை மிகுந்த குரா மலர் புனைந்த அழகிய திருப்புயங்களை உடைய வீரரே. பிற சமயங்கள் முத்தி வழிக்குரியவை அன்று என்று தமது கோட்பாடு ஒன்றை மட்டுமே கொண்டு அன்பில்லாமல் சிவனடியவர்களை இகழ்கின்ற சமணர்கள் கழுவில் உடம்பு சிதறி அழியும்படியும், நுரைத்து வெள்ளம் பெருகும் வையை யாற்றில் ஏடு எதிர் ஏறவும், அன்பின் பண்பு எங்கும் பரவவும் எலும்பு பெண்ணாகுமாறும் தமிழ்க் கவி பாடவல்ல திறமை உடையவரே…
அண்டங்களை உண்டாக்கியும், முன்னாள் அவற்றை உண்டும், பொங்கி எழுந்த போர்க்களத்தில் அர்ச்சுனனுடைய தேரை செலுத்திய பரிசுத்த மானவரும், தீயருக்கு வஞ்சனை புரிபவரும், பாஞ்சசன்யம் என்ற சங்கத்தை உடையவருமான நாராயணருடைய மைந்தராகிய பிரமதேவர் பெற்ற நாரத முனிவர் செய்த யாகத்தில் தோன்றிய ஆட்டுக்கடாவின்மீது ஏறி வருகின்ற வல்லவரே…
அழகிய நீரும் தாமரையும் சங்கும் நிறைந்த குளத்தில் சூழ்ந்து வளமை மிக்க சிவமலையென்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே. மாதர்களின் மயக்கத்தாலும், எந்நாளும் உள்ளம் கன்றித் துன்பங் கொண்டுள்ள அடியேன், உமது திருவடி மலர்களைத் துதி செய்ய உள்ளத்தில் நலம் என்று கொண்டும், திருக்கோயிலிற் சென்று தொழுகின்ற மகிமையின் நிலையை எனது உணர்வில் உமது அருளால் பெறவும், இன்பமும் பண்பும் ஊக்கமும் தொடர்பும் மிகுமாறும், உமது திருவருளைப் பெறவும் அநுமதி தரும் வழியை முன்னதாக அருள்புரிவீர் – என்பதாகும்.