60" />
அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கும்போது மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குடும்ப நன்மை கிடைக்கின்றது. எனவே, பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபடுகின்றனர்.
சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி வழிபாட்டின் மூலம் சுமங்கலி பெண்களில் கணவர் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வறுமை நீங்கி செல்வம் தழைத்தோங்கும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் நமது வீட்டில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது முதல், விரதமிருந்து காவடி எடுப்பது, பொங்கல் வைப்பது, ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங்களில் கலந்து கொள்வது போன்றவை நடைபெறும்.