ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர்
மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்தபடியால், மாவட்ட ஆட்சியர் முன்ரோ அடிக்கடி திருமலைக்கு வருவார்.
அதிகார ஆணவம் மிகுந்தவரான அவர் திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் பக்தர்களைப் பார்த்து,
“ஏன் முடியை வெட்டுகிறீர்கள்? தலையையே வெட்டி இறைவனுக்குக் கொடுக்க வேண்டியது தானே?” என்று ஏளனம் செய்வார்.
லட்டு பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்களைப் பார்த்து, “இப்படிச் சுகாதாரம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் தான்
எல்லா வியாதிகளும் உண்டாகின்றன!” என்று சொல்வார்.
கோவிந்தா! கோவிந்தா!” என்று கோஷம் செய்பவர்களைப் பார்த்து, “ஏன் இப்படி மது அருந்திய கரடி போலக் கத்துகிறீர்கள்?
அந்தச் சிலை என்றாவது உங்கள் கோஷங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறதா?” என்று கேட்பார்.
நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு வருபவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் தினமும் ஹோலிப் பண்டிகை கொண்டாடுகிறீர்கள்?
நெற்றியெல்லாம் சிவந்திருக்கிறதே!” என்பார்.
அந்த ஆட்சியருக்கு வேதாந்த தேசிகர் என்ற உதவியாளர் ஒருவர் இருந்தார். வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அவரை ஆட்சியர் அடிக்கடி ஏளனம் செய்வார்.
உங்கள் தெய்வம் உங்களைக் காக்க வேண்டும் என்பதற்காக உங்கள் உடம்பில் பன்னிரண்டு இடங்களில் நாமம் இட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கால்களில் நீங்கள் இடுவதில்லையே.
உங்கள் கால்களைத் தெய்வம் காப்பாற்ற வேண்டாமா?” என்று கேட்பார்.
ஒருநாள் திருமலையில் பெருமாள் அமுது செய்த கிச்சடியைப் பக்தர்கள் உண்டு கொண்டிருக்கையில் அங்கு வந்த ஆட்சியர்,
“செப்பு பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட சுகாதாரமற்ற உணவுகளை உண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்
என்பதை அறியாமல் இப்படி உண்கிறீர்களே!” என ஏளனம் செய்தார்.
அன்று மாலை அலுவலகம் திரும்பிய முன்ரோ, “ஐயோ! ஐயோ!” என்று கத்தினார்.
திடுக்கிட்டு அவரது அறைக்கு ஓடிய உதவியாளர் வேதாந்த தேசிகன், வயிற்று வலியால் ஆட்சியர் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
உடனே மருத்துவரைக் கூப்பிடு!” என்றார் ஆட்சியர். மருத்துவர் ஊதா நிற மருந்தையும் சில மாத்திரைகளையும் கொடுத்து விட்டுச் சென்றார்.
ஆனால் வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே போனது. இன்னும் பற்பல மருத்துவர்கள் வந்து பலவிதமான ஊசிகளைப் போட்ட போதும்
வயிற்று வலி மேலும் மேலும் அதிகரித்தது. ஆட்சியர் படும் பாட்டைக் கண்ட வேதாந்த தேசிகன்,
இந்த நோய் திருமலையப்பனின் அருளால் மட்டுமே குணமாகும் என உணர்ந்தார்.
ஆட்சியரிடம், “ஐயா! நீங்கள் சம்மதித்தால் நான் ஒரு மருந்து தருகிறேன்!” என்றார் வேதாந்த தேசிகன்.“எதை வேண்டுமானாலும் கொடு! வயிற்று வலி குணமானால் போதும்!” என்றார் ஆட்சியர்.
திருமலையப்பனுடைய துளசியையும் தீர்த்தத்தையும் தான் நான் தரப்போகிறேன். நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டார்.
தான் அந்தப் பெருமாளையும் அவரது அடியார்களையும் ஏளனம் செய்ததே தனது துன்பத்துக்குக் காரணம் என உணர்ந்த ஆட்சியர், “கொண்டு வா!” என்றார்.
கோவிந்தா!” என உச்சரித்தபடி துளசியையும் தீர்த்தத்தையும் உட்கொண்டார். சில நிமிடங்களிலேயே வலி கொஞ்சம் குறையத் தொடங்கியது.
தொடர்ந்து சில நாட்கள் அவற்றை உட்கொண்டவாறே ஆட்சியர் பூரணமாகக் குணமடைந்தார்.
பெருமாளின் பிரசாதத்தின் மகிமையை உணர்ந்த அவர், அடிக்கடி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தார்.
யாரேனும் திருமலையப்பனின் பிரசாதம் கொண்டு செல்வதைப் பார்த்தால், “எனக்கும் கொஞ்சம் தாருங்கள்!” எனக் கேட்கத் தொடங்கினார்.
ஒருநாள் கோயிலில் ஆட்சியரைக் கண்ட ஒரு பக்தர், “செப்புப் பாத்திரத்தில் செய்த கிச்சடி சுகாதாரமற்றது என்றீர்களே!
இப்போது உங்கள் வயிற்று வலியைக் குணப்படுத்திய பெருமாளுக்காக நீங்கள் ஒரு வெள்ளிப் பாத்திரம் வாங்கித் தரலாமே!
அதில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கலாமே!” என்றார்.
அதைக் கேட்ட முன்ரோ தனது சொந்த செலவில் வெள்ளி கங்காளம் வாங்கிக் கொடுத்தார்.
அது இன்றும் திருமலையில் ‘முன்ரோ கங்காளம்’ என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இறை நம்பிக்கை இல்லாத முன்ரோ போன்றவர்களுக்கும் தனது மேன்மைகளைக் காட்டி அவர்களையும்
வசீகரிப்பதால் திருமால் ‘ஸர்வதர்சனஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 95-வது திருநாமம். “ஸர்வதர்சனாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எம்பெருமான் தனது அனைத்து மேன்மைகளையும் நன்கு காட்டி அவர்கள் வாழ்வில் மேன்மை அடைய அருள்புரிவார்.