46. லட்சுமியை வரவேற்போம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“அபூதிமஸம்ருத்திம் ச சர்வான்னிர்ணுதமே க்ருஹாத்!” – ஸ்ரீசூக்தம் (ருக் வேதம்)
“ஐஸ்வர்யம் இல்லாததும் நிறைவில்லாததும் என் இல்லத்திலிருந்து நீங்கட்டும்!”
மகாலட்சுமியின் கிருபையால் இல்லங்களில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வேண்டும் என்பது வேதத்தின் விருப்பம்.
‘அபூதி, அசம்ருத்தி‘ இந்த இரண்டும் அலட்சுமி வடிவங்கள். ஐஸ்வர்யம் இல்லாமல் இருப்பது, போதும் போதாத செல்வம் – இவையே அபூதி, அசம்ருத்தி. இந்த இரு அலட்சுமி இயல்புகளும் வீட்டில் இருக்கக்கூடாது.
மகாலட்சுமி நம்வீட்டிலும் நம் உடலிலும் பிரவேசிக்க வேண்டும். உற்சாகம், மகிழ்ச்சி, உயிர்ப்பு, உதார குணம் இவை அனைத்தும் மனதில் விளங்கும் லட்சுமி குணங்கள். புன்னகை ஆரோக்கியம், சுறுசுறுப்பு – இவை உடலில் விளங்கும் லட்சுமி குணங்கள்.
வீட்டில் செல்வம் குறைவில்லாமல் இருப்பது, வெற்றி, திருப்தி இவை மகாலட்சுமியின் அனுகிரக சொரூபங்கள். இவற்றுக்கு எதிரானவை அலட்சுமி (மூதேவி)வடிவங்கள்.
உண்மையில் பண்பாடின்மையே அலட்சுமி என்று அறியவேண்டும். மனிதனிடம் இருக்கக் கூடாத குணம் பண்பின்மை. அதுவே லட்சுமிக்கு மூத்தவளுடைய குணம். பண்பாடின்மையையும் அறியாமையையும் பண்பாட்டின் மூலமும் விவேகம் மூலமும் நன்னடத்தை மூலமும் திருத்திக்கொள்ள வேண்டும். அப்போது கிடைப்பது லட்சுமி. அதன் மூலம் கிடைக்கும் பவித்திர குணத்திற்கு லட்சுமியின் அருள் என்று பெயர்.
இல்லம் என்றால் நாம் வசிக்கும் இருப்பிடம். நம் உடல் நம் ஆத்மா வசிக்கும் இருப்பிடம். உடலையும் ஐஸ்வர்யத்தால் நிரப்ப வேண்டும். அதாவது நகையால் அலங்கரித்துக் கொள்வது என்றல்ல பொருள். பண்படுத்திக் கொள்வது என்று பொருள். எவ்வாறு பண்படுத்திக் கொள்வது என்ற வழிமுறைகள் நம் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள.
சத்தியம், அஹிம்சை, நித்ய அனுஷ்டானம், சுத்தம் – என்பவை தனிமனிதனை பண்படுத்துபவை. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது, தெய்வ பூஜை, விளக்கு ஏற்றுவது, சமையலில் தூய்மை, உணவில் தூய்மை, பழக்கவழக்கங்களில் தூய்மை – இவை வீட்டை பண்படுத்துபவை.
இவ்விரண்டு சமஸ்காரங்களால் உண்டாகும் ஒளியும் அழகும் லட்சுமி தேவியாக வர்ணிக்கப்படுகின்றன. நம் ஆசார சம்பிரதாயங்கள் அனைத்தும் நம்மையும் நம் இல்லங்களையும் லட்சுமிகரமாக மாற்றுவதற்கு ஏற்பட்டவையே!
அவற்றை நாம் இழந்துவிட்டு அலட்சுமியை வரவேற்கிறோம். அனாசாரம், அசௌசம் போன்றவை இல்லத்தை அலட்சுமி நிலையங்களாக மாற்றும்.
விடியற்காலையே வீட்டை சுத்தம் செய்ய செய்யாமல், வாயிலில் கோலமிடாமல், தீபமேற்றாமல், சுத்தமான உணவு இன்றி இருக்கும் வீட்டை அலட்சுமி தன் இருப்பிடமாக ஆக்கிக் கொள்வாள்.
அலட்சுமிக்கு மற்றுமொரு பெரிய வரவேற்பு வீடுகளில் ஏற்படும் கலகம். “அலக்ஷ்மி: கலஹாதாரா” என்றார்கள். கலகம் என்றால் ஒருவரிடம் அடுத்தவருக்கு இருக்கும் வெறுப்பு மனப்பான்மை. துவேஷம் இருக்குமிடத்தில் அழகு இருக்காது. ஐஸ்வர்யம் நிற்காது.அதனால் வீட்டில் கலகத்திற்கு இடமளிக்காமல் கவனமாக இருக்கவேண்டும்.
“சத்யேன சௌச சத்யாப்யாம் ததாசீலாதிபிர்குணை: |
த்யஜ்யந்தே யே சரா:சத்ய: சந்த்யாக்தாயே த்வயாமலே ||”
சத்தியம் தூய்மை சீலம் போன்ற குணங்களை விட்டு விட்டவரை லட்சுமி உடனடியாக விலகிச் சென்று விடுவாள் என்பது விஷ்ணுபுராண வசனம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.