அண்ணா என் உடைமைப் பொருள்(5): காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்!

ஆன்மிக கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – பகுதி 5
– வேதா டி. ஸ்ரீதரன் –

முதன் முதலாக முழுசாகப் படித்த அண்ணா புத்தகம்

காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம். மகா பெரியவா சிரசில் கதம்ப மாலை தாங்கிய கோலத்தில் அட்டைப்படம் போடப் பட்டிருக்கும். அண்ணாவுக்கு முதன்முதலாக நாங்கள் அச்சிட்டுத் தந்த புத்தமும் இதுதான், முதன் முதலாக நான் முழுமையாகப் படித்த அண்ணா புத்தகமும் இதுதான்.

ஶ்ரீராமஜயம் எழுதி அனுப்பினால் டாலர் அனுப்பும் உம்மாச்சித் தாத்தா என்ற வகையில் மிகச் சிறு வயதிலேயே பெரியவா எனக்கு அறிமுகமாகி இருந்தாலும், அதுவரை அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை. ஞானி என்ற ஒரே ஒரு புத்தகம் மட்டுமே படித்திருந்தேன். அவர் ஒரு பெரிய மகான், அதிசயமான ஆற்றல்கள் படைத்தவர் எட்ஸெடராவுக்கு மேல் அவரைப் பற்றி எதுவும் தெரியாது.

பார்க்கப் போனால், நிறைய துறவியர் பெருமக்களிடம் இதுபோன்று இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல் இருக்கும் என்று நான் நம்பியதும் உண்டு. யோகப் பயிற்சி மூலம் மனிதர்கள் அதிசய ஆற்றல்களைப் பெற முடியும் என்று கேள்விப் பட்டிருந்ததால் விளைந்த நம்பிக்கை இது என நினைக்கிறேன்.

நான் அண்ணாவிடம் வருவதற்கு முன்பு ஸ்வாமியும் எனக்கு இதுபோலத்தான் அறிமுகமாகி இருந்தார். ஸ்வாமி பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர் முழுக்கவே மிரகிள் மயம். விஜயபாரதம் வருவதற்கு முன்பே ஸ்வாமியின் தரிசனம் கிடைத்ததும் உண்டு. இதில் பெரு வியப்புக்குரிய செய்தியும் உண்டு, ஆனால், அது சுயபுராணமாக இருக்கும் என்பதால் இங்கே அந்த விவரங்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. பின்னர், சென்னை வந்த பிறகு, தாராபுரம் நடராஜன் என்ற பக்தர் வாழ்வில் ஸ்வாமி நிகழ்த்திய லீலை குறித்துக் கேள்விப்பட்டேன்.

இதுபோன்ற காரணங்களால், மிரகிள் விஷயம் அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நினைவுக் கதம்பம் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அத்தகைய ஓரிரு சம்பவங்கள் அந்த நூலில் இருக்கத்தான் செய்தன.

periyava dakshinamurthi
periyava dakshinamurthi

குறிப்பாக, வறண்ட குளத்தில் தேங்கி இருந்த மிகச்சிறிய அளவு நீரில் பெரியவா தமது திருப்பாதங்களை நனைத்து, அந்த ஜலத்தைத் தமது தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு ப்ரார்த்தனை செய்ததையும், இதனைத் தொடர்ந்து பெருமழை பொழிந்ததையும், நாகை நீலாயதாக்ஷி ஆலய உற்சவம் தடைப்படாமல் விமரிசையாக நடந்ததையும் பற்றி அண்ணா இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்.

இருந்தாலும், புத்தகத்தைப் படிக்கும்போது, அத்தகைய அதீதமான ஆற்றல்களை விட பெரியவாளின் குண மகிமைகளே மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. பெரியவாளை ஶ்ரீசரணாள் என்று அழைப்பதற்குக் காரணமாக அமையும் அவரது பாத மகிமைகளே இந்த நூலின் முக்கிய நோக்கம். மேலும், பெரியவா பீடாதிபதியாகப் பொறுப்பேற்றது குறித்த செய்திகளும் இதில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

கான்வென்டில் படிக்கும் சிறுவன் ஸ்வாமிநாதன், குருவும் பரமகுருவும் இல்லாத நிலையில் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றது பற்றி இந்த நூலில் அண்ணா எழுதியுள்ள பகுதிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமானவை. அதிலும், பிற்காலத்தில் பெரியவாளிடம் அண்ணா அந்த நினைவுகளைப் பற்றித் தூண்டித் துருவி விசாரிப்பதும், அப்போது பெரியவா மழுப்பலாக ஏதேதோ பேசுவதும் படிப்போர் உள்ளத்தை உருக்குபவை.

ஸ்வாமி விவேகானந்தர் புத்தகம் புரட்டிப் பார்த்ததையும், அப்போது அண்ணாவின் மொழிநடை எனக்கு மிகவும் எரிச்சலைத் தந்தது என்ற தகவலையும் முதல் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இப்போது அண்ணாவின் எழுத்து நடை போரடிக்கவில்லை.

எனினும், படிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தெரிந்தது. மொழிநடை மட்டுமல்ல, நூலில் உள்ள விஷயங்களுமே ரொம்ப கனமானவை. எனவே, அந்தப் புத்தகத்தை என்னால் மேலோட்டமாக மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது.

அண்ணா என் உடைமைப் பொருள்(5): காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply