ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம். பிரம்மதேவன் கொண்டாடிய முதல் உற்சவம் `பங்குனி உத்திரம்’ என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம்.
எனவேதான் திருவரங்கத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தை ‘ஆதி பிரம்மோற்சவம்’ என்கிறார்கள். பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நடைபெற்ற ஊடல் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நாளில்தான். இந்த வைபவம் ‘சேர்த்தி சேவை’ உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பெருமாளுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடல் என்பது உலகமயமான ஊடல் போலத் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவம் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டம்.
அரங்கனுக்கும் தாயாருக்கும் நிகழ்ந்த ஊடல் குறித்த புராண சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது…
உறையூரைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்து வந்த சோழ மன்னன் ஒருவனுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தது. அவனது குறையைப் போக்க மகாலட்சுமியே மகவாக அவதரித்தாள்.
அவளுக்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவந்தான் சோழன். ஒருமுறை வேட்டையாடச் சென்ற ரங்கநாதர் கமலவல்லியைக் கண்டு காதல் கொள்கிறார். ரங்கநாயகி ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, உறையூர் கமலவல்லியைத் தனது மார்பிலிருக்கும் மகாலட்சுமியின் அனுமதியுடன் திருமணமும் செய்துகொள்கிறார் ரங்கநாதன்.
உறையூரில் கோயில்கொண்டிருக்கும் கமலவல்லி நாச்சியாரை ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் சந்திக்கச் செல்கிறார். இதனால் ரங்கநாயகி ஸ்ரீரங்கநாதர் மீது கோபம் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலான ஊடல் மலர்கிறது. இறைவியின் ஊடலும் அது முடிவுக்கு வந்த வைபவமுமே `சேர்த்தி சேவை’ எனப்படுகிறது.
உறையூர் கமலவல்லி அவதரித்த நட்சத்திரம் பங்குனி ஆயில்யம். ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் பங்குனி ஆயில்யத்தின்போது புது மாப்பிள்ளையைப் போன்று புத்தாடை, சந்தனம், திலகம், மாலை ஆகியவற்றை அணிந்துகொண்டு கமலவல்லி நாச்சியாரைத் தாயாருக்குத் தெரியாமல் சந்திக்கச் செல்வார்.
பெருமாள் தான் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் மாலைகள் அனைத்தையும் கமலவல்லிக்கு அணிவித்தும் கமலவல்லி நாச்சியார் அணிந்திருக்கும் மாலைகளைத் தான் வாங்கி அணிந்தும் கொள்வார்.
அப்படியொருமுறை, கமலவல்லி நாச்சியாரைச் சந்தித்துவிட்டு மகிழ்வுடன் ஸ்ரீரங்கத்தை நோக்கித் திரும்பும்போதுதான் தனது கையில் கமலவல்லியின் புது மோதிரம் பளபளப்பதைக் கவனிக்கிறார். பழைய மோதிரத்தைக் கமலவல்லியின் கரங்களில் அணிவித்தது அவரது நினைவுக்கு வந்தது.
புது மோதிரத்துடன் சென்றால் `அணிந்திருந்த பழைய மோதிரம் என்ன ஆனது என்று ரங்கநாயகி கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது?’ என்று சிந்தித்த ரங்கநாதர் தனது மோதிரம் தொலைந்துபோனதாக நாடகம் ஆடுகிறார்.
அனைவரும் காவிரியாற்றில் மோதிரத்தைத் தேடுகிறார்கள். பிறகு `மோதிரம் தொலைந்துவிட்டது’ என்று கூறியபடியே கோயிலுக்குள் நுழைகிறார் ரங்கன். வழக்கமாக ரங்கன் கோயிலுக்குள் நுழைந்தால் வாத்திய கோஷங்கள் அதிரும். ஆனால், கமலவல்லியைச் சந்தித்துவிட்டு வரும் ரங்கனோ சத்தமில்லாமல் வருகிறார்.
ரங்கனின் செய்கையின் பொருளை தாயார் அறியாமல் இருப்பாரா என்ன?
‘உள்ளே வராதீரும்’ என்று கூறி வாயில் கதவைச் சாத்திவிடுகிறார்.
ரங்க நாயகியைச் சமாதானப்படுத்த, பெருமாள் முயற்சி செய்கிறார்.
தாயாரோ, ‘நீங்கள் உறையூருக்கே செல்லலாம். இனி இங்கு வரத் தேவையில்லை’ என்று உறுதியுடன் தெரிவித்துவிடுகிறார்.
மேலும் கெஞ்சிப் பார்த்த திருவரங்கன் வருத்தமும் சோர்வும் கொண்டு திரும்புவதுபோல பாவனை செய்கிறார். அப்போது, தாயார் கதவைத் திறந்து மெள்ள எட்டிப் பார்க்கிறார். அதைக் கண்ட ரங்கனுக்கு நம்பிக்கை பிறக்கிறது.
மீண்டும் கதவருகே ஓடிவந்து தாயாரிடம் கெஞ்சத் தொடங்குகிறார். இப்படியே ஊடலும் கெஞ்சலும் மாறிமாறி மூன்று முறை தாயார் கதவைத் திறந்து சாத்துகிறாள்.
உற்சவத்தின்போது தாயார் சார்பாக ‘தலத்தார்’ எனும் ஊழியர்களும், பெருமாள் சார்பாக `தொண்டுக் குலத்தார்’ எனும் ஊழியர்களும் சமாதானம் பேசுவார்கள். தலத்தார் எல்லோரும் பெருமாளிடம் நியாயம் கேட்க, குலத்தார் அனைவரும் தாயாரிடம் கெஞ்சுவர்.
வடக்குச் சித்திர வீதி மக்கள் அனைவரும் அன்னைக்கு ஆதரவாக வெண்ணெய் மற்றும் பூக்களைப் பல்லக்கின் மீது வீசி எறிவார்கள். தெற்கு சித்திர வீதி மக்கள் ரங்கனுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடைசியில் திருவரங்கன் செய்த தவறுக்காக மட்டையடி விழும்.
உலகாளும் பரமனுக்கே வாழை மட்டையால் அடிவிழும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதை `மட்டையடி உற்சவம்’ என்று கூறுகிறார்கள். கடைசியாக நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்துவைப்பார். அதன் பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர்.
சேர்த்தி சேவையை முன்னிட்டு அன்றைய தினம் உற்சவரை மட்டுமே தரிசிக்க முடியும். மூலவர் நடை சாத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தத்துவார்த்தமாக, ஜீவாத்மாவுக்கும் பரமாத்வாவுக்கும் நடைபெற்ற பாசப்போராட்டமே இந்த `சேர்த்தி சேவை உற்சவம்.’ சேர்த்தி சேவை என்பது மிகவும் முக்கியமானது. வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் சேவை இது. தாயாருடன் சேர்ந்திருக்கும் ஸ்ரீரங்கநாதர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்படுவார். அப்போது அவரிடம் வேண்டிக்கொண்டால், அனைத்தும் நிறைவேறும். அதனால் பக்தர்கள் தவறவிடக் கூடாத சேவை இது.