e0af8d-e0aea8e0aeb5e0ae95e0af88.jpg" style="display: block; margin: 1em auto">


திருப்புகழ் கதைகள் பகுதி 77
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்பமும் துன்பமும் – திருச்செந்தூர்
நவகைலாயம், நவதிருப்பதி
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களின் ஊடே பாய்ந்தோடும் தாமிர பரணி நதியின் கரைகளில் ‘நவ கைலாயம்’ என ஒன்பது சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவையாவன – (1) பாபநாசம் – சூரியன், (2) சேரன் மகாதேவி – சந்திரன், (3) கோடக நல்லூர் – செவ்வாய், (4) தென்திருப்பேரை – புதன், (5) முறப்ப நாடு – குரு, (6) சேர்ந்தபூமங்கலம் –சுக்கிரன், (7) ஸ்ரீவைகுண்டம் – சனி, (8) குன்னத்தூர் – ராகு, (9) ராஜாபதி – கேது
நவகைலாயங்கள் உருவான வரலாறு: மிகச் சுவையானது. பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்கு சிவபெருமானைக் கண்டு அருள்பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம். அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைந்து வழிபட்டு வருபவர். சிவபெருமான் இவர் எண்ணத்தை கண்டு முனிவரது பெருமையை உலகிற்கு வெளிக்கொண்டு வர அகத்தியர் மூலம் திருவுளம் கொள்கிறார்.

அகத்தியர் உரோமச மகரிஷியை அழைத்து சிவபெருமானையே நவ கிரகங்களாக நினைந்து ஒவ்வொருவரும் வழிபட்டால் நவகிரகங்களின் தசா-புத்தி காலங்களில் ஏற்படும் கெடுதல்கள் ஒன்றும் செய்யாது. எனவே சிவபெருமானையே நவகோள்கள் வரிசையில் மக்கள் வணங்குதல் வேண்டும். நீயும் எம்பெருமானைக் கண்டு பேரின்பம் எய்தி முக்தி அடைய வேண்டுமென்று விரும்பினாய்.
எனவே தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் நீ விரும்பியது கிடைக்கும். நீ தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் ,உன்னுடன் ஒன்பது மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு ஒதுங்கி நிற்கிறதோ அங்கு சங்கு மூலம் நீராடி சிவனை வழிபட வேண்டும். நீவிர் வழிபடுகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். பின்னர் தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் உமது எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறி உரோமேசரை அனுப்புகிறார்.
அகத்தியர் கூறியவாறு அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் மலர்கள் ஒதுங்கிய இடங்களில் தனது குரு கூறியபடி சங்கு மூலம் நீராடி சிவபெருமானை நவ கிரகங்களாக நினைந்து வழிபட்டு கடைசியாக தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி முக்தி அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

அப்படி அகத்தியரால் தாமிரபரணி ஆற்றில் விடப்பட்ட ஒன்பது இடங்களில் மலர்கள் ஒதுங்கின. அந்த ஒன்பது இடங்களிலும் உரோமச மகரிஷி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஒன்பது கோயில்களை கட்டி நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார். அந்த ஒன்பது கோயில்களே தற்சமயம் நவகைலாசங்கள் என அழைக்கப்படுகின்றன. அகத்தியர் தாமிரபரணியில் விட்ட ஒன்பது மலர்களில் கடைசி மலர் சேர்ந்த இடமே சேர்ந்த பூமங்கலம் என அழைக்கப்படுகிறது. தாமிர பரணி நதி கடலில் கலக்குமிடத்திற்கு அருகே சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.
கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக பரிகார ஸ்தலங்களாக ஒன்பது திருக்கோயில் அமைந்துள்ளன. அவைகளைப்பற்றிய விவரங்கள் கிட்டத்தட்ட எல்லா பஞ்சாங்கங்களிலும் கொடுத்திருக்கிறார்கள். கோட்சார கிரகங்களால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட மட்டும் இந்த திருக்கோயிகளில் பரிகாரங்கள் செய்யலாம். தசா – புக்திகளால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாசங்களிலேயே பரிகாரம் செய்யவேண்டும். இந்த ரகசியம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஒன்பது பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இவை நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன. இங்கும் நவக்கிரக தோசத்திற்கு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. அவையாவன – (1) ஸ்ரீவைகுண்டம் – சூரியன், (2) நத்தம் – சந்திரன், (3) திருக்கோளூர் – செவ்வாய், (4) திருப்புளியங்குடி – புதன், (5) திருக்குருகூர் – குரு, (6) தென்திருப்பேரை – சுக்கிரன், (7) பெருங்குளம் – சனி, (8) திருதொலைவில்லி மங்கலம் வடக்கு – ராகு, (9) திருதொலைவில்லி மங்கலம் தெற்கு – கேது
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளை கருட ரூபம் என குறிப்பிடுகின்றனர். அதாவது இந்த ஒன்பது திருப்பதிகளையும் கற்பனைக்கோடுகளால் இணைத்துப் பார்த்தால் கருட ரூபம் கிடைக்கிறது. எனவேதான் இங்கு நடைபெறும் கருட சேவை விசேசமாக கருதப்படுகிறது. தன் தாய்க்காக அமிர்த கலசத்தை விண்ணுலகிலிருந்து தூக்கி வந்தவர் கருட பகவான்.
மேலும் இவர் சர்ப்பங்களின் எதிரி. எனவே ஜாதகத்தில் ராகு கேது எனப்படும் கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட நவதிருப்பதிகள் எனப்படும் இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் சர்ப்ப தோசம் நீங்கும்,தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பதும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஜோதிட ரகசியமாகும்.
திருப்புகழ் கதைகள்: நவகைலாயம், நவதிருப்பதி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.