80. நலமும் மங்களமும் அருள்வாயாக!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“பத்ரம் பத்ரம் க்ரதுமஸ்மாஸு தேஹி” – ருக் வேதம்.
“பரமேஸ்வரா! எமக்கு சுகம்,மங்களகரமான சங்கல்பம், ஞானம், செயல்களை அருள்வாயாக!”
லோக கல்யாணம், நன்மை இவற்றை அளிக்கும் செயல்களை ‘க்ரது’ என்பர். அப்படிப்பட்ட நற்செயல்கள் எண்ணத்தாலோ நடத்தையாலோ நம்மால் செய்யப்படுவது.
ஏதாவது பணி நிகழ வேண்டுமென்றால் முதலில் சங்கல்பம் இருக்க வேண்டும். அதன்பின் பணிபுரியும் திறமை, அறிவு, வழிமுறை தேவை. அதுவே பணியின் தொடர்பான ஞானம். அதன்பின் பணியைச் செய்வது. அதன் பின் அதன் பயன்.
‘பத்ரம்’ என்றால் க்ஷேமம், நன்மை, மங்களம் என்று பொருள். சங்கல்பம் என்றால் மனதில் நடக்கும் செயல். அதுவே ஞானம். புத்தியோடு தொடர்புடையது. செயல் உடலோடு தொடர்புடையது. சங்கல்பமும் செயலும் சுபமாக, உலக நன்மைக்காக இருந்தால் பலனும் அதே போல் இருக்கும்.
“யாத்ருஸீ பாவனா தத்ர சித்திர்பவதி தாத்ருஸீ” – எண்ணம் போல் வாழ்வு. அதனால்தான் எண்ணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது நம் கலாச்சாரம். மனத்தூய்மையும், சாதனையும் வல்லமையோடு விளங்க வேண்டுமானால் சங்கல்பம் பலமாக இருக்க வேண்டும். எண்ணம் திடமாக இருந்தால்தான் மன ஒருமைப்பாடும் உறுதியும் ஏற்படும்.
நல்ல சிந்தனையும், தன்னலம் மட்டுமின்றி சமுதாய நலமும் நிறைவேறும்படியான திட்டமும் மிகவும் தேவை. நாம் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் பயனை முன்பே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். “ப்ரயோஜன மனுத்திஸ்ய நமந்தோSபி ப்ரவர்ததே” – பிரயோஜனம் இல்லாமல் முட்டாள் கூட எந்த செயலையும் செய்யமாட்டான்.
‘ப்ரயோஜனம்’ என்பது ‘பத்ரம்’ என்பதைத் தர வேண்டும். அதற்குத் தேவையான சங்கல்பம், சிந்தனை, நடத்தை கூட பத்ரமாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிலையிலும் அதர்மம், அசுபம் போன்ற எதிர்மறை எண்ணத்தின் பாதிப்பு இருக்கக் கூடாது.
நம் முன்னோர் இவ்விதம் மனத் தூய்மைக்கும் புத்தி கூர்மைக்கும் முக்கியத்துவம் அளித்தனர். எங்கும் சுபமும் மங்களமும் நிலவ வேண்டும் என்று விரும்பினார்கள். உலக நன்மைக்கான செயல்களே வாழ்க்கை என்று எண்ணினர் வேத மகரிஷிகள். அதற்கு ஏற்றாற்போல் வாழ்வியல் முறையை வகுத்துக் கொண்டார்கள். நல்ல சிந்தனையும் நல்ல நடத்தையும் அருளும்படி நம் சனாதன மதம் பிரார்த்திக்கிறது. சகல ஜகத்திலும் பரவியுள்ள தெய்வத்திடம் அவர்கள் வேண்டுவது இதுவே.
வைதிகமான நித்திய பிரார்த்தனையிலும் எண்ணத்திலும் தாமும் தம் மனமும் மட்டுமின்றி பிரபஞ்சம் அனைத்தும் நிரந்தரமான சுபத்தோடு விளங்க வேண்டும் என்னும் உயர்ந்த இலக்கே உயிரோட்டமாக வாழ்க்கை நடத்தினர்.
நம் கலாச்சாரத்தில் ஒவ்வொரு எண்ணமும் இத்தனை திவ்யமாக இருந்தது என்பதற்கு இவை சான்றுகள்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 80. நலமும் மங்களமும் அருள்வாயாக! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.