e0af8d-e0ae9ae0af86e0aeafe0af8de0aeaf-e0aeaee0af81e0ae9fe0aebfe0aeb5.jpg" style="display: block; margin: 1em auto">
மட்டபல்லி பகுதியில் வனவாழ் மக்கள் அதிகம். அப்படி அந்த வன பகுதியைச் சேர்ந்த ஒரு வயோதிக கிழவன், நிறைய அரிசி, பருப்பு, காய், பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மட்டபல்லி நரஸிம்ம பகவானை காண வந்தான்.
அவன் வந்து சேரும் நேரத்தில் கோயிலைப் பூட்டி விட்டு அர்ச்சகர்களெல்லாம் கிளம்பி போய் விட்டார்கள். வெளியில் கோயில் அருகில் ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் வந்து உட்கார்ந்தான் அவன். இனிமேல் காலை விடியும் நேரத்தில்தான் பகவானை சேவிக்க முடியும்.
அதிலும் நமக்கு முதலில் சேவை கிடைக்காது. விச்வருபாதிகளெல்லாம் ஆகி, அபிஷேகம் ஆன பிறகுதான் பகவானை சேவிக்கலாம். இப்படி நினைத்து ஏங்கி உருகினான் அவன்.
சுவாமி உன்னுடைய தரிசனத்துக்கு வந்திருக்கிறேனே, மகா பாவியான எனக்கு அது கிடைக்குமா? நீ அனுக்கிரஹம் செய்யாவிட்டால் வேறு எங்கேயிருந்து அது எனக்குக் கிடைக்கும்? இப்படி காலாதீதமாக வந்திருக்கிறேனே. உன் தரிசனம் எனக்கு கிடைக்குமா? எப்போது கிடைக்குமோ? தெரியவில்லையே…
அந்த நேரத்தில் திடீரென்று ஒரு அர்ச்சகர் வந்து விட்டார். தோளில் சாவியை சாற்றிக் கொண்டு இருந்தார். அவனைப்பார்த்து வாப்பா உள்ளே போகலாம் உனக்கு சேவை பண்ணி வைக்கிறேன் என்று கூப்பிடுகிறார்.
அவனும் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு உள்ளே போகிறான்.
கதவைத் திறந்த அர்ச்சகர், அரிசி, பருப்பு எல்லாவற்றையும் எம்பெருமான், அந்த மட்டபல்லி லக்ஷ்மி நரசிம்மனின் திருவடியில் அப்படியே சேர்ப்பித்தார். ஆனந்தமாக நிதானமாக அர்ச்சனை பண்ணினார்.
விசேஷமாக கற்பூரவாரத்தியெல்லாம் பண்ணி அவனுக்கு விசேஷமாக அனுக்-கிரஹம் பண்ணினார். எல்லாம் முடிந்ததும் அவனைப் பார்த்து திருப்தி ஏற்பட்டதா? என்றும் கேட்டார்.
ரொம்ப திருப்தி என்றான் அந்த வயோதிக கிழவன். அவனை அழைத்துப் போய் மறுபடியும் மண்டபத்திலே இருக்க வைத்து, நீ இப்போது எங்கேயும் போகாதே. இந்த இருட்டிலே கிளம்பினால் ஊர் போய் சேருவது கஷ்டம். இங்கேயே படுத்துக்கொள். காலையில் எழுந்து போகலாம் என்று சொல்லி விட்டு அர்ச்சகர் புறப்பட்டுப் போய்விட்டார்.
கிழவனுக்கு ரொம்ப சந்தோஷம். இவ்வளவு கருணையோடு வந்து இந்த அகாலத்திலே நமக்கு சேவை பண்ணி வைத்தாரே! என்று வியந்து அந்த ஆனந்த அனுபவத்திலேயே அப்படியே படுத்துத் தூங்கி போய் விட்டான்.
மறுநாள் காலை ஆறு மணி….அர்ச்சகர் வருகிறார். “ஏய் கிழவா…இங்கே எதற்கு படுத்திருக்கிறாய் நீ….?” என்று அதட்டுகிறார்.
கிழவன் நடுங்கிப்போய்ப் பார்க்கிறான். “போ, போய் ஸ்நானம் பண்ணிவிட்டு அப்புறம் வா…” விரட்டினார் அர்ச்சகர்.
விரட்டிவிட்டு உள்ளே போனவர் விக்கித்துப் போனார்! அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த பெருமாளின் முன்னால் அரிசியாகக் கொட்டிக் கிடக்கிறது, ஒரு பக்கம் பழமாக அடுக்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் பருப்புக் குவியல்!
“இதெல்லாம் எப்படி? யாரு செய்த வேலை.?
அர்ச்சகர் மனத்தில் கேள்வி எழுந்த போதே கண் முன் ஒரு தோற்றமும் எழுந்தது. அந்தத் தோற்றம். வெளியே மண்டபத்திலே பார்த்து, தாம் மிரட்டிய முதியவரின் தோற்றம் என்பதை உணர்ந்தார். பெருமான் முன்னிலையிலேயே தெரிந்தான் கிழவன்!
அந்தக் காட்சியைக் கண்டதும் நடு-நடுங்கிப் போனார் அர்ச்சகர். கோவிலை விட்டு வெளியே ஓடினார். கிழவன் கிருஷ்ணா நதியிலே இறங்கி ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஓடிப்போய் அவன் கால்களில் விழுகிறார்.
“அப்பா! நான் நித்யம் பூஜை பண்-ணுகிறேன். அந்த மட்டபல்லி லக்ஷ்மி நரசிம்மனைத் தொட்டு நித்ய பூஜை பண்ணும் எனக்கு ஒரு நாளும் தரிசனம் கொடுக்கவில்லை.
ஆனால், உனக்காக அவன் வந்து, தனக்கு வேண்டியவற்றை யெல்லாம் தானே கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான். தானே அர்ச்சனை பண்ணி தன்னுடைய திருவடியிலே உன்னைச் சேர்த்துக் கொண்டானே….” என்று உருகினார்.
அந்த பகவானுடைய காருண்யத்தை நாம் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும். எளியோன் என்பதால் பகவான் யாரையும் ஒதுக்குவதில்லை. பணம் உடையோன், உயர்ந்த குலத்தவன் என்பதாலே, பக்தியில்லாத ஒருவனை அவன் ஏற்றுக்கொள்வதுமில்லை. எல்லோரிடத்திலும் விசேஷமான அன்பு கொண்டவன் எம்பெருமான்.
இறைவன் அருள் செய்ய முடிவு செய்தால் இருளைன்ன பகலென்ன? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.