துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. சில காலம் முன்பு அங்கு ‘போதணா’ என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார்.
எப்போதும் துவாரகையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் “துவாரகா ராமதாசர்” என்று கூப்பிட்டனர்.
தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள்.
ஒவ்வாறு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று தன்னால் முடிந்த அளவு உணவளித்து, பின் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
அதேபோல, ஆடி மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாதயாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார்.
இவ்வாறு காலம் சென்றது. அவருக்கும் வயதாகிவிட்டது. தள்ளாமையால், முன்பு போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார்.
ஒரு ஆடி மாதம் ஏகாதசியன்று துவாரகை புறப்பட்டார். அவரால் நடைப் பயணத்தைத் தொடர முடியவில்லை.
ஒரு மரத்தடியில் அமர்ந்து,”கண்ணா! எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியுமா தெரியவில்லை. என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு, அழுதுகொண்டே அசதியில் உறங்கிவிட்டார்.
அவர் கனவில் கண்ணன் தோன்றி, கவலைப்படாதே! உன் முன் ஒரு தேர் வரும், அதில் நான் இருப்பேன், என்னை நீ உன் ஊருக்குஅழைத்துச் செல்லலாம்” என்று கூறி மறைந்தார். கண் விழித்தபோது, எதிரே தேரும், அதில் துவாரகாநாதனும் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, தேரில் ஏறி டாகோர் சென்றார்.
விக்ரஹத்தைப் பூஜை அறையில் வைத்து, தான் இல்லத்தையே கோவிலாக்கி, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார். அதே சமயம், துவாரகையில் கண்ணனின் மூலவிக்ரஹத்தைக் காணாமல் அர்ச்சகர்கள் திகைத்தனர்.
டாகோரில் ராமதாசரின் வீட்டில் கண்ணன் விக்ரஹம் இருக்கும் தகவலறிந்து, அவர்கள் டாங்கேர் சென்றனர். ராமதாசரின் வீட்டிற்குச் சென்று கண்ணனை எடுத்துக் கொண்டு செல்லத் தொடங்கினர்.
ராமதாசர், “கண்ணா! உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது” என்று அழுது அரற்றினார். அப்போது கண்ணன் அவரிடம், “என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்” அவர்கள் கொடுத்து விடுவார்கள்” என்று சொன்னார்.
அவரும் அவ்வாறே சொன்னார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் அவர் எங்கே பொன் தரப்போகிறார்? என்று நினைத்த அர்ச்சகர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
ஒரு தராசில் துவாரகாநாதனின் விக்ரகத்தை வைத்தனர். ராமதாசர் வீட்டிற்குள் சென்று, அவரிடம் இருந்த ஒரே ஒரு பொன்னாலான, தனது மனைவியின் மூக்குத்தியை எடுத்து வந்து, இன்னொரு தட்டில் வைத்தார்.
தனது மனைவியுடன் தராசை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்தார். பின்னர், கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்தார். என்ன ஆச்சர்யம்!!! தராசின் இருதட்டுகளும் சரிசமமாக நின்றது.
அர்ச்சகர்களும், மற்றவர்களும் ராமதாசரின் பக்தியைக் கண்டு அதிசயித்து, ராமதாசரை வணங்கி, துவாரகாநாதனை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
மெய்சிலிர்த்த ராமதாசரும், தினமும் நாமசங்கீர்த்தனத்தால் கண்ணனைப் பாடி, தொழுது வணங்கினார். இன்றும் அவர் பாடிய அந்தப் பாடல்கள் துவாரகையில் பாடப்படுகின்றது.
தன்னலமில்லாத பக்தியுடன் இறைவனை வழிபட்ட பக்தனின் கோரிக்கையை ஏற்று, பகவானே வந்தார்
டாகோர் கோவிலில் உள்ள கண்ணனை ‘ராஞ்சோட்ஜி’ என்று அழைக்கின்றனர்.
கண்ணன் போதணருடன் டாகோருக்கு மாட்டு வண்டியில் வந்தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.
அங்குள்ள ஒரு வேப்பமரத்தில், ஒரு கிளையில் உள்ள இலைகள் இனிப்பாகவும், மற்ற கிளைகளில் உள்ள இலைகள் கசப்பாகவும் இருக்குமாம்.
கண்ணன் வரும் வழியில் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான் என்றும், அதனால் அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் இனிக்கிறது என்றும் கூறுகின்றனர். அந்த மரம் இன்றும் இருக்கிறது
துவாரகையிலிருந்து பக்தனின் வீட்டிற்கு வந்த கண்ணன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.