ஒரு முறை தாமிரபரணி நதிக்கரையின் அழகைக் கண்டு பெருமான் அங்கேயே மலர்மகளுடன் இருந்தார். இதைக் கண்ட பூதேவி தாபத்தால் கோபம் கொண்டு, பாதாள லோகத்துக்குச் சென்றுவிட்டாள். அதனால் உலகம் வறண்டது. ஜீவராசிகள் துன்பமடைந்தன. இதைக் கண்ட தேவர்கள் பரந்தாமனிடம் முறையிட்டார்கள். உடனே அவர் பாதாளலோகம் சென்றார். பூதேவியை சமாதானம் செய்து மீண்டும் அங்கேஅழைத்து வந்தார். அதன் பின்னர் தேவியர் இருவரும் நட்பு கொண்டு அருள்புரிந்தனர். பெருமான் பூதேவியைக் காத்து அருள்புரிந்ததால், அவருக்கு காய்சினவேந்தர் (பூமிபாலர்) என்ற பெயர் வழங்கப்பட்டது.
ஒருமுறை முனிவர் ஒருவர் தன் மனைவியுடன் மாற்று உருவில் ஆனந்தமாக இருந்தார். அப்போது, இந்திரன் உண்மை அறியாமல் முனிவரை வஜ்ராயுதத்தால் தாக்கிவிட்டான். அதனால் அவர் இறந்தார். இவ்வாறு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்திரன் இங்கே வந்து, தடாகத்தில் நீராடினான். பிறகு பூமிபாலரை தரிசித்தான். அவனது தோஷமும் நீங்கியது. அந்த நீர்நிலையும் இந்திர தீர்த்தம் எனப்பட்டது.
இந்தத் தலம் புதன் தலம் என்பதால், புதன் தோஷம் உள்ளவர்கள் பெருமாளை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறலாம்.
புரட்டாசி சனி தோறும் நடைபெறும் எண்ணெய்க் காப்பு தனித்தன்மை வாய்ந்தது. அப்பம் பிரசாதம் நைவேத்தியம் செய்து, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து நீராஞ்சன விளக்கு ஏற்ற (பச்சரிசி பரப்பி அதன் மேல் தேங்காயில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றுதல்) திருமணத் தடை அகலும்; பச்சைப் பயிறு தானம் செய்ய கல்வியில் மிகச்சிறந்த நிலையை எட்டலாம் என்பது நம்பிக்கை. இவ்வாறு இந்தக் கோவிலில் பிரார்த்தனையும் செய்கிறார்கள்.
தலத்தின் பெயர் : திருப்புளியங்குடி(திருப்புளிங்குடி)
அம்சம் : புதன்
மூலவர் : பூமிபாலகர்
உற்ஸவர் : காய்சினவேந்தன்
தாயார் : நிலமகள், மலர்மகள், திருப்புளிங்குடிவல்லி
இருப்பிடம் : திருவரகுணமங்கையில் இருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ. தொலைவு .
நடை திறக்கும் நேரம் காலை 8-12 – மாலை 1-6
தரிசன உதவிக்கு: கோபாலகிருஷ்ணன் 93 66618185