e0af8d-e0ae95e0aeb0e0af81e0aeb5.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 30
கருவடைந்து (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வடமொழியில் மனித வாழ்வை பிரம்மசாரியம், கிரஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என நான்கு நிலைகள் உள்ளது எனக் கூறுவார்கள்.
தமிழில் குழந்தைகள் வளர்ச்சி நிலையை பெண்களுக்கு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை பேரிளம் பெண் என்றும்ஆண்களின் பருவம்பாலன், மீளி, மறவோன், திறலோன், விடலை, காளை, முதுமகன் என்றும் வழங்கப் படுகிறது.
குழந்தைகளைப் பாடும் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு வகைப்படும். ஆண்பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, ஆகியவற்றைப் பொதுவாகக் கொண்டு இறுதியிலுள்ள மூன்று பருவங்களுக்கு ஈடாகச் சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், குழமகன், ஊசல், காமவேள் நோன்பு முதலியவற்றுள் எவையேனும் மூன்றைப் பெற்று வரும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு திரைப் படப் பாடலில் மனித வாழ்வை எட்டு எட்டாகப் பிரிக்கலாம் என ஒரு கவிஞர்பாடுவார். – எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு அதனை புத்திக்கு எட்டும் படி சொல்லப் போகிறேன். எட்டுக்குள்ள உலகம் இருக்கின்றது. அதனை நான் புட்டு புட்டு வைக்க போறேன். முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல; நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல; மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல; நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல; ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல; நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல; ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை; நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல.
அருணகிரியார் இதே கருத்துகளை இப்பாடலில் – கருவில் சேர்ந்து, தாயாருடைய (சிறிய) வயிற்றில் பத்து மாதம் இருந்து முதிர்ந்து, ஓவென்று ஒலித்துக் கொண்டு கடைவழியாக வந்து பிறந்து குழந்தை வடிவாகி, நீர் தெளித்துச் சுத்தி செய்து எடுத்துத் தாயார் முலைப்பாலை உண்ண வைக்க, படுத்தவண்ணமாகக் கிடந்து, கதறி அழுது, அழகிய கரத்தைக் கொட்டித் தவழ்ந்து நடந்து விளையாடல்களைப் புரிந்து, அரைஞாண்களைக் கட்டி, சதங்கை, அணியத்தக்க காதணி, பொன்னாலாகிய முகச்சுட்டி, தண்டை முதலிய ஆபரணங்களை அணிந்துகொண்டு, சரீரமானது பலப்பட்டு வளர்ந்து, ஆண்டுகள் நிறைந்து, வயது ஏறிய பின், அருமையான பெண்களது நேயத்தை அடைந்து, அதனால் நோய் வாய்ப்பட்டு சுழற்சி அடைந்து சுவர்க்க நரக உலகங்களுக்குப் போவதும் வருவதுமாகச் சுற்றித் திரிந்து உழன்றது போதும்; தேவரீரது கருணைச் சித்தத்தை என்று பெறுவேனோ? என்று பாடுகிறார்.
இதற்கு அடுத்த மூன்று பகுதிகளில் இராமாவதாரத்தின் போது இராமருக்கு உதவி செய்வதற்காக தேவர்கள் வானரங்கள் வடிவில் பிறந்த கதை சொல்லப்படுகிறது. இதனை நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: கருவடைந்து… முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.