தினசரி ஒரு வேத வாக்கியம்: 73. இனிமை பொழியட்டும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

.jpg" style="display: block; margin: 1em auto">

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

73. இனிமை பொழியட்டும்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவ:”– யஜுர்வேதம்
“காற்றிலும் நதியிலும் இனிமை பொழியட்டும்!

 “ஸுஹ்ருதம் சர்வ பூதானாம் ஞ்ஜாத்வாமாம் சாந்தி ம்ருச்சதி” “என்னை சகல உயிர்களுக்கும் நண்பனாக ஏற்பவன் அமைதியைப் பெறுகிறான்” என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகிறான். இதனை புரிந்து கொண்டால் மேலே சொன்ன வாக்கியத்தில் உள்ள இனிமை அனுபவத்துக்கு வரும்.

கடவுளை விடச் சிறந்த நண்பன் யாரும் இல்லை. நம் உடலை விட நமக்கு நெருங்கியவன் இறைவனே. மிக அருகில் உள்ளவற்றை அடையாளம் காண்பது சிரமம்தான்.

நம்மை தினமும் பாதுகாக்கும் ஆத்ம பந்து  சர்வேஸ்வரன் ஒருவனே. பிறவிகள் கழிந்தாலும் ஜீவனை விடாத பந்தம் இறைவனுடையதுதான். இந்த உண்மையை அறியாமல் உழன்று கொண்டிருக்கிறோம்.

நண்பன் எது செய்தாலும் நம் நன்மைக்காகவே என்ற நம்பிக்கை இருந்தால் தைரியமாக இருப்போம். அதிலும் சாதாரண நண்பனா இறைவன்?  நம்மை முன்னும் பின்னும் அறிந்தவன். முக்காலமும் உணர்ந்தவன். நம்மைவிட நம்மைப் பற்றி தெளிவாகத் தெரிந்தவன். யாரோ ஒருவருக்கு மட்டுமே நண்பன் அல்ல அவன்.

சர்வ பூதானாம் ஸுஹ்ருத்”  – சகல உயிர்களுக்கும்  நண்பன். இந்த உண்மையை உணர்ந்த பக்தனுக்கு ஜகமெங்கும் இறைவனின் நட்பே தென்படும். கஷ்டமும் சுகமும் கூட கடவுளின் அருள் என்ற அனுபூதியை அடைவான் பக்தன். அதனால் அனுக்ஷணமும் ஆனந்தமாக இருப்பான். பகவானின் சினேகத்தை உணர்ந்தவன் மட்டுமே அமைதியை அடைவான். 

நதியில் பல படகுகள் சென்று கொண்டிருக்கும். காற்று வீசிக்கொண்டிருக்கும். ஆனால் பாய்மரம் விரித்த படகு மட்டுமே காற்றை உணர்ந்து பயணிக்கும். கதவைத் திறந்தவனுக்கே வெளிச்சம் கிடைக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஒளி கிடைக்கவில்லை என்று நிந்திப்பது தகுமா? 

கடவுளின் நட்பை பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அகங்காரத்தை தியாகம் செய்ய வேண்டும். சர்வ சமர்ப்பண உள்ளம் வேண்டும்.. அதனால்தான் “போக்தாரம் யஞ்ஜ தபசா – சர்வ லோக மஹேஸ்வரம்” என்கிறான் கீதாசார்யன்.

krishnar
krishnar

நம் செயல்களே யங்ஞமாகவும் தவமாகவும் ஆக வேண்டும். யக்ஞம் என்றால் கடவுளை ஆராதிப்பது. தவம் என்றால் ஞானம் பெறுவதற்காக சாதனையில் ஈடுபடுவது. இந்த இரண்டுமாக நம் செயல்கள் மாற வேண்டும். நாம் செய்யும் பணி தர்மத்தோடு கூடியதாக பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். நிரந்தரம் பகவத் சிந்தனையோடு சாதனை செய்ய வேண்டும்.

நம் செயல்களை பகவான் கவனிக்கிறான் என்ற உணர்வு வேண்டும். அவ்வாறு கவனிக்கும் இறைவன் சாமானியன் அல்ல – சர்வலோக மகேஸ்வரன். பிரபஞ்சத்தையே இயக்குபவன். விஸ்வம் எங்கும் வியாபித்த ஜகந்நாதன். எனவே எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் நம்மை கவனித்துக் கொள்ளும் நம்மவன்.

இந்த அறிவைப் பெறுவதே பகவானின் அன்பை அடையாளம் காண்பது. இந்த அன்பில் மாதுர்யம் பொங்கிப் பெருகுகிறது. காலை மாலை வெயில் வெண்ணிலவு மழை மரம் காற்று நதி கடல் மலை காடு எங்கும் அந்த அன்பு மயமான இனிய அருள் பொழிகிறது. 

இந்த இனிமையை அனுபவியுங்கள் என்று முழங்குகிறது கடவுளின் வாணியான வேத நாதம்.  ஜகமெங்கும் பிரேமையின் மாதுர்யத்தைக் காணும் பண்பாட்டை பழக்கிக் கொண்டால் வெறுப்பின் அடையாளமே இருக்காது. வேறுபாடுகளின் கருத்த நிழலைக் கூட காண முடியாது.

நம்மில் கூட அந்த பிரேமை ஒளிவீசும். பிரபஞ்சத்தின் மீதும் அது பாயும். அந்த பிரேமையை சாதித்து அடையவேண்டும்.

பிரபஞ்சமெங்கும் பிரேமை மயமாக  தரிசிக்க வேண்டும் என்ற சிறந்த வழி முறையை (positive approach) போதிக்கிறது வேதம்.  Negative attitudes களை மேற்கொள்பவனுக்கு உலகத்தில் உள்ள அன்பின் இனிமையை புரிந்துகொள்ள முடியாது. 

தினசரி ஒரு வேத வாக்கியம்: 73. இனிமை பொழியட்டும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply